Skip to main content

கொங்கு மண்டல தோல்வி! திமுக செய்ய வேண்டியது என்ன? 

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

ddd

 

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றி தமிழக முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின். இந்த பரபரப்பான சூழலில், கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற கருத்து தமிழக அரசியல் விமர்சகர்களிடமும் தேர்தல் வியூக வல்லுநர்களிடமும் எதிரொலிக்கச் செய்கிறது. 

 

இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக ஆதரவு அரசியல் விமர்சகர்கள், "திமுக கூட்டணி 200 இடங்களைக் கடந்து வெற்றிபெறும் என திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எதிர்பார்த்திருந்தன. அதே எதிர்பார்ப்பு தேர்தல் வியூக வல்லுநர்களிடமும் இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. காரணம், கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான தோல்விதான். இந்த சரிவுக்கு காரணம் என்ன? 

 

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் கொங்கு மண்டலத்தை அதிமுகவின் கோட்டையாக வைத்திருந்தனர். ஆட்சியிலும் கட்சியிலும் கொங்கு வேளாளர் சமூகத்தினருக்கு அதிகமான முக்கியத்துவம் தந்திருந்ததால் கொங்கு மண்டலம் அதிமுகவின் ஆதரவு மண்டலமாகவே இருந்து வந்தது. இதில், ஜெயலலிதா தனது ஆட்சியில் கொங்கு வேளாள சமூகத்தினரை வலிமையான துறைகளுக்கு அமைச்சர்களாக்கினார். அந்த வலிமையான துறைகள் மூலம் அந்த அமைச்சர்களால் கொங்கு மண்டலத்தில் அதிமுகவை வலிமையாக்க முடிந்தது. கொங்கு மண்டலத்தில் தொடர்ச்சியாக பலமுறை ஜெயித்து கொங்கு வேளாளர் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றவர்களையே அமைச்சர்களாக்கியதால் அச்சமூகத்தின் ஆதரவு அதிமுகவுக்கு கிடைத்து வந்தது. அதனை திமுகவால் உடைக்க முடியவில்லை. 

 

இந்த நிலையில்தான், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்ற முயற்சி எடுத்தது திமுக தலைமை. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதனால்தான், தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் கைகொடுக்கவில்லை. அந்த வகையில், சில திட்டமிடல்களில் திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகிறது. 

 

அதாவது, தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ள திமுகவிடம் ஆட்சி அதிகாரம் 5 ஆண்டுகள் இருக்கப்போகிறது. இந்த 5 ஆண்டுகளில் கொங்கு மண்டலத்தை வலிமையாக்கும் திட்டமிடல் திமுகவுக்கு அவசியம். குறிப்பாக, கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ.க்களில், அச்சமூகத்தில் செல்வாக்கு பெற்றவர்களைக் கண்டறிந்து அவர்களை முக்கியத் துறைகளுக்கு அமைச்சர்களாக்க வேன்டும். இதுபோன்ற சில எம்.எல்.ஏ.க்களை அமைச்சர்களாக்கி அவர்களுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்படும்போதுதான் கொங்கு வேளாளர் சமூகம் திமுகவை திரும்பிப் பார்க்கும். 

 

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி போன்றவர்களை முக்கிய இலாகாக்களுக்கு அமைச்சர்களாக்கி ஜெயலலிதா அழகு பார்த்ததால்தான் கொங்கு வேளாளர் சமூகமும் அதிமுகவை தொடர்ந்து ஆதரித்தது. அது, இந்த தேர்தலிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோன்ற அணுகுமுறையை திமுக கையிலெடுத்தால்  மட்டுமே அடுத்த 5 ஆண்டுகளில் கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்ற முடியும். அதனால்தான், கொங்கு மண்டல அரசியலில் வழக்கமான பாணியையே திமுக கடைபிடிக்காமல்  சில விசயங்களில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று சுட்டிக்காட்டுகிறார்கள்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.