தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றி தமிழக முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின். இந்த பரபரப்பான சூழலில், கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற கருத்து தமிழக அரசியல் விமர்சகர்களிடமும் தேர்தல் வியூக வல்லுநர்களிடமும் எதிரொலிக்கச் செய்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக ஆதரவு அரசியல் விமர்சகர்கள், "திமுக கூட்டணி 200 இடங்களைக் கடந்து வெற்றிபெறும் என திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எதிர்பார்த்திருந்தன. அதே எதிர்பார்ப்பு தேர்தல் வியூக வல்லுநர்களிடமும் இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. காரணம், கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான தோல்விதான். இந்த சரிவுக்கு காரணம் என்ன?
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் கொங்கு மண்டலத்தை அதிமுகவின் கோட்டையாக வைத்திருந்தனர். ஆட்சியிலும் கட்சியிலும் கொங்கு வேளாளர் சமூகத்தினருக்கு அதிகமான முக்கியத்துவம் தந்திருந்ததால் கொங்கு மண்டலம் அதிமுகவின் ஆதரவு மண்டலமாகவே இருந்து வந்தது. இதில், ஜெயலலிதா தனது ஆட்சியில் கொங்கு வேளாள சமூகத்தினரை வலிமையான துறைகளுக்கு அமைச்சர்களாக்கினார். அந்த வலிமையான துறைகள் மூலம் அந்த அமைச்சர்களால் கொங்கு மண்டலத்தில் அதிமுகவை வலிமையாக்க முடிந்தது. கொங்கு மண்டலத்தில் தொடர்ச்சியாக பலமுறை ஜெயித்து கொங்கு வேளாளர் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றவர்களையே அமைச்சர்களாக்கியதால் அச்சமூகத்தின் ஆதரவு அதிமுகவுக்கு கிடைத்து வந்தது. அதனை திமுகவால் உடைக்க முடியவில்லை.
இந்த நிலையில்தான், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்ற முயற்சி எடுத்தது திமுக தலைமை. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதனால்தான், தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் கைகொடுக்கவில்லை. அந்த வகையில், சில திட்டமிடல்களில் திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகிறது.
அதாவது, தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ள திமுகவிடம் ஆட்சி அதிகாரம் 5 ஆண்டுகள் இருக்கப்போகிறது. இந்த 5 ஆண்டுகளில் கொங்கு மண்டலத்தை வலிமையாக்கும் திட்டமிடல் திமுகவுக்கு அவசியம். குறிப்பாக, கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ.க்களில், அச்சமூகத்தில் செல்வாக்கு பெற்றவர்களைக் கண்டறிந்து அவர்களை முக்கியத் துறைகளுக்கு அமைச்சர்களாக்க வேன்டும். இதுபோன்ற சில எம்.எல்.ஏ.க்களை அமைச்சர்களாக்கி அவர்களுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்படும்போதுதான் கொங்கு வேளாளர் சமூகம் திமுகவை திரும்பிப் பார்க்கும்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி போன்றவர்களை முக்கிய இலாகாக்களுக்கு அமைச்சர்களாக்கி ஜெயலலிதா அழகு பார்த்ததால்தான் கொங்கு வேளாளர் சமூகமும் அதிமுகவை தொடர்ந்து ஆதரித்தது. அது, இந்த தேர்தலிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோன்ற அணுகுமுறையை திமுக கையிலெடுத்தால் மட்டுமே அடுத்த 5 ஆண்டுகளில் கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்ற முடியும். அதனால்தான், கொங்கு மண்டல அரசியலில் வழக்கமான பாணியையே திமுக கடைபிடிக்காமல் சில விசயங்களில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று சுட்டிக்காட்டுகிறார்கள்!