
இயக்குநர் ஷங்கர், தனது கதையைத் திருடி, அதை மூலக்கதையாக்கி, ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோரை வைத்து ‘எந்திரன்’ படத்தை எடுத்ததாகக் குற்றம்சாட்டி, கவிஞரும்,நக்கீரன் இதழின் முதன்மை துணை ஆசிரியருமான ஆரூர் தமிழ்நாடன், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 29-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது எழுத்தாளர் தரப்பு ஆஜரானபோதும், வழக்கம் போல் டைரக்டர் ஷங்கரோ, அவர் தரப்பு வழக்கறிஞர்களோ ஆஜராகவில்லை.
இதனால் நீதிமன்றம் டைரக்டர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்ததாக நீதிமன்ற வெப்சைட்டிலேயே செய்தி வெளியானது. இதனால் இயக்குநர் தரப்பு பெரும் மன உளைச்சலுக்கு ஆளானது.பின்னர்இரண்டு நாள் கழித்து, ‘டைரக்டர் ஷங்கருக்கு அனுப்பப்பட்டது பிடிவாரண்ட் அல்ல, நீதிமன்றஅழைப்பாணைதான்’ என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் இயக்குநர் தரப்பு நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
இந்த நிலையில் டைரக்டர் ஷங்கர் மீதான கதைத்திருட்டு வழக்கின்விசாரணை, நாளை (19 பிப்.) தொடங்கும் என்று நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. டைரக்டர் ஷங்கர் நீதிமன்றம் அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறது. எனவே நாளை டைரக்டர் ஷங்கர் ஆஜராவாரா? என்ற கேள்வி பலமாக எழுந்திருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை விரைந்து நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கோலிவுட் வட்டாரத்தைப் பரபரப்பாக்கி இருக்கிறது.
- நமது நிருபர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)