Skip to main content

ஊடக வெளிச்சம் முழுவதும் கேரளத்தின் மீது குவிந்திருப்பதால் காவிரி, கொள்ளிடக் கரையோர பாதிப்புகள் வெளிவரவில்லை- ராமதாஸ்

Published on 19/08/2018 | Edited on 19/08/2018

 

FLOOD


வெள்ளத்தில் தவிக்குது டெல்டா மண்டலம். உணவு, நீர் வழங்காமல் அரசு உறங்குவதா? என்று கேள்வி எழுப்புகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். இது குறித்த அவரது அறிக்கை:

’’கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக காவிரியில் வினாடிக்கு  2 லட்சம் கன அடிக்கும் கூடுதலான தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் காவிரி பாசன மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட தமிழக அரசு வழங்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

 

மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ள நிலையில், பவானி அணையிலிருந்து வினாடிக்கு சுமார் 50 ஆயிரம் கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்தத் தண்ணீரின் ஒரு பகுதி காவிரியிலும், பெரும்பகுதி கொள்ளிடத்திலும் திறந்து விடப்பட்டிருப்பதால் இரு ஆறுகளின் கரையோரப்பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட தூத்தூர், முட்டுவாஞ்சேரி, மேலராமநல்லூர், வைப்பூர்,  தஞ்சாவூர் மாவட்டம் தட்டுமால், குடிகாடு, கொத்தங்குடி, நாகை மாவட்டம் நாதல்படுகை, முதலை மேடு, வெள்ளை மணல் உள்ளிட்ட  நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளதால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே   திட்டுக்காட்டூர், கீழக்குண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம், வேளக்குடி, மடத்தான்தோப்பு பழைய நல்லூர், பெராம்பட்டு, அகரநல்லூர் உள்ளிட்ட கிராமங்களையும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.

 

பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் காரணமாக ஈரோடு மாவட்டம் பவானி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கு  காரணம் ஆறுகள் மற்றும் பாசனக் கால்வாய்களின் கரைகள் வலுப்படுத்தப்படாதது தான். தஞ்சாவூர் மாவட்டம் தட்டுமால் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரை உடைந்ததால் தான் அப்பகுதியில் உள்ள  கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மிக மோசமான அளவில் மணல் கொள்ளை நடத்தியது, கரைகளை பலப்படுத்தாது, கொள்ளிடத்திற்குள் அமைந்துள்ள தீவுகளில் வாழும் மக்கள் மாவட்டத்தின் மற்றப் பகுதிகளுக்கு செல்ல பாலங்களை அமைக்காதது என அரசின் தவறுகள் ஏராளமாக உள்ளன. அவை ஒருபுறம் இருக்க வெள்ளம் ஏற்பட்ட பிறகாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை அரசு செய்து கொடுத்திருக்க வேண்டும்.

 

ஆனால், பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்மான்மையினருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை என்று குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் தான் தங்களின் சொந்த முயற்சியில் உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து கொடுத்து வருகின்றனர். கொள்ளிடத்தில் திறந்து விடப்படும் தண்னீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வேறு ஏதேனும் இடங்களில் உடைப்பு  ஏற்படாமல் தடுக்க பொதுப்பணித்துறை பணியாளர்கள் சுற்றுக்காவல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஆனால், அத்தகைய பணிகளோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ மேற்கொள்ளப் படுவதாக தெரியவில்லை. இதனால் அடுத்து வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமாகக்கூடும்.

 

ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டிருக்கிறார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளார். ஆனால், காவிரி பாசன மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் இன்று வரை செல்லவில்லை. இனியும் செல்வாரா? என்பதும் தெரியவில்லை.


கேரளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் வரலாறு காணாத அளவில் இருப்பதால் பெரும்பான்மையான ஊடகங்கள் அது குறித்தே செய்தி வெளியிட்டு வருகின்றன. அதை தவறு என்று கூற முடியாது. ஆனால், ஊடக வெளிச்சம் முழுவதும் கேரளத்தின் மீது குவிந்திருப்பதால் காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக வெளிவரவில்லை. ஆனாலும், இந்த பாதிப்புகளை அரசு மதிப்பிட்டு போதிய உதவிகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் மக்களுக்கு உதவிகளை செய்யாமல் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

 

தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொண்டு காவிரி பாசன மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  முதலமைச்சர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

கொள்ளிடம் ஆற்றில் நடந்த சோகம்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
3 people lost their lives in Kollidam river

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் என்பவரது மகன்கள் சந்தோஷ்(13), சந்திரன்(10). இருவரும் தங்கள் வீட்டிற்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்களின் பிள்ளைகள் சுமார் 10 பேருடன் நேற்று காலை திருமானூர் கொள்ளிடம் ஆற்றிற்குச் சென்று குளித்துள்ளனர். இந்த நிலையில், சிறுவர்களில் சிலர் புதை சூழலில் சிக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்ற மற்ற சிறுவர்கள் முயன்றுள்ளனர். அப்போது 10 சிறுவர்களும் சூழலில் மாட்டிக்கொண்டனர்.

இதனைக் கண்ட அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், மீனவர்கள், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுவர்களில் 7 பேரைக் காப்பாற்றினர். ஆனால் மூன்று பேரைக் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து உடனடியாக அரியலூர் திருவையாறு தீயணைப்புத் துறையினருக்குத்  தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியைத் தொடங்கிய தீயணைப்பு வீரர்கள் ஆற்றுப் பகுதியில் பல மணி நேரம் தேடிய பிறகு 3 பேரில் அம்பத்தூரை சேர்ந்த தீபக்(17), தஞ்சாவூரை சேர்ந்த பச்சையப்பன் ஆகிய இருவரின் உடலை மீட்டனர். 

இரவு நேரம் நெருங்கிவிட்டபடியால் இன்று காலை தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் குழுவினர் இணைந்து மீண்டும் தேடினர். அதில் இன்று காலை மூன்றாவது நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்த இளம்பிள்ளைகள் கொள்ளிடம் ஆற்றுச்சுழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

“மத்திய அரசை எதிர்பார்க்க வேண்டாம்” - முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

Ramadas has insisted Tamil Nadu government should conduct the caste-wise census

 

“மத்திய அரசை எதிர்பார்க்க வேண்டாம்; தமிழகஅரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “தேசிய அளவில் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். சமூகநீதியை நிலை நிறுத்தவும்,  வளர்ச்சியின் பயன்களை அடித்தட்டு மக்கள்வரை கொண்டு செல்லவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று ஒப்புக்கொண்டிருப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் பாராட்டுகிறேன்.

 

அதேநேரத்தில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும், கட்டமைப்பும் தமிழக அரசுக்கே இருக்கும் நிலையில், தமிழக அரசே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் என்று அறிவிக்காமல், மத்திய அரசு இந்தக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுவது தாம் விளையாட வேண்டிய பந்தை, பிரதமர் பக்கம் திருப்பி விடும் செயல் என்பதைத் தவிர வேறு எதுவும் அல்ல. இது கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதற்கு ஒப்பானது.  சமூகநீதியில் அக்கறை கொண்ட எந்த முதலமைச்சரும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள்.

 

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசே நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதன் மூலம் இந்த சிக்கலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றிருக்கிறார். 2004-ஆம் ஆண்டில் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்த பாட்டாளி மக்கள் கட்சி, இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக 15 ஆண்டுகளுக்கு முன் 24.10.2008 -ஆம் நாள்  அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இராமதாஸ், 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை எனது ஆணையின்படி, சந்தித்து 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று 140க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவைக் கொடுத்தார்.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை பரிசீலிப்பதாக சிவராஜ் பாட்டீலும் அப்போது ஒப்புக்கொண்டார். அதன்பின்னர் மக்களவையில் இதுகுறித்து பிரச்சினை எழுப்பப்பட்ட போது பா.ம.க.வின் கோரிக்கைக்கு லாலு பிரசாத், சரத்யாதவ், முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவளித்தனர். அதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த அரசு ஒப்புக்கொண்டது. மக்களவையில் இதுகுறித்த வாக்குறுதியை 2009-10 ஆம் ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி அளித்தார்.

 

அதைத் தொடர்ந்து 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தனியாகவும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தனியாகவும் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவ்வாறு செய்யாமல் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு என்ற பெயரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விவரங்களும் கூட இன்று வரை வெளியிடப்படவில்லை.

 

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை எத்தனை முறை வலியுறுத்தினாலும்,  அதற்கு மத்திய அரசே ஒப்புக்கொண்டாலும் இறுதியில் அந்த முயற்சியை மத்திய அரசே சீர்குலைத்து விடும். கடந்த காலங்களிலும் இது தான் நடந்தது; இனிவரும் காலங்களிலும் அது தான் நடக்கும். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று 2021-ஆம் ஆண்டில்  பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், அம்மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், அதன் பின் ஓராண்டுக்கு மேலாகியும்  எதுவும் நடக்காததால் தான் பீகார் அரசின் சார்பில் சாதிவாரி  கணக்கெடுப்பை நடத்தினார்.

 

ஆந்திர மாநில அரசும் இதுதொடர்பாக அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானத்திற்கு எந்த பதிலும் மத்திய அரசிடமிருந்து வரவில்லை என்பதைக் காரணம் காட்டித் தான் வரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. நேரிலும், சட்டப்பேரவைத் தீர்மானத்தின் மூலமாகவும் வலியுறுத்திய பிறகும் ஏற்கப்படாத சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை, தமது கடிதத்தைக் கண்டவுடன் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று முதலமைச்சர் நம்பிக் கொண்டிருப்பது விந்தை தான்.

 

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்பட்டால், அதை எண்ணி மகிழ்ச்சியடையும் முதல் மனிதன் நானாகத் தான் இருப்பேன். ஆனால், அதற்கான  வாய்ப்புகள் கண்களுக்கு எட்டியவரை தென்படாத நிலையில், அதை நம்பிக் கொண்டு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவே அமையும். தமிழக அரசு, அதன் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.

 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் இருப்பதாக பிகார் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்பு மிகவும் விரிவாகவும், விளக்கமாகவும் இருப்பதால், அதனடிப்படையில் நடத்தப்பட்ட பிகார் சாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிடவோ, அதனடிப்படையில் முடிவுகளை எடுக்கவோ தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. இவ்வளவுக்குப் பிறகும்  மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசு நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு தான் சட்டப்பூர்வமானதாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது மாநில அரசின் உரிமைகளை  விட்டுக் கொடுப்பதற்கு ஒப்பானதாகும்.

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான் மீண்டும், மீண்டும் கூறிக் கொள்வது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு, அதற்கு எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை என்பதைத் தான். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் கர்நாடகம், பீகார், ஒடிஷா ஆகிய மாநிலங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. ஆந்திரா, இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவுள்ளன. எனவே, இனியும்  மத்திய அரசுக்கு கடிதம் எழுதாமல், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்தும்  என்று அறிவித்து, செயல்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.