‘நம்மள கண்டா ஊரே பயப்படணும்..’ என்ற வாசகத்துடன், வாட்ஸ்-ஆப் ஸ்டேட்டஸில், வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார், விருதுநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவரான சிவலிங்கம். அந்த வீடியோவில், பொது இடத்தில், கல்லூரி நண்பர்கள் புடைசூழ, வாளால் கேக் வெட்டி, அவரது பிறந்த நாளைக் கொண்டாடிய காட்சி மிரட்டலாக இருந்தது.
சென்னை சூளை மேட்டைச் சேர்ந்த ரவுடி பினு தான், அரிவாளால் கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடும் கலாச்சாரத்தை துவக்கி வைத்தான். அப்போது, 75 ரவுடிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டனர். அடுத்து, மதுரவாயலில், சட்டக் கல்லூரி மாணவர், இதே பாணியில் பிறந்தநாள் கொண்டாடி, கைது செய்யப்பட்டார். ஆனாலும், சட்ட நடவடிக்கைக்கு அஞ்சாமல், தமிழகம் முழுவதும் இதுபோன்ற அட்டூழியங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன.
சரி, விருதுநகர் விவகாரத்து வருவோம்! ‘மானமுள்ள வீரமுள்ள வம்சம் வருதையா.. வெட்டருவா விரலிருக்கும் சிங்கம் வருதையா..’ என்ற சினிமா பாடல் பின்னணியில் ஒலிக்க.. அந்த வீடியோ காட்சி பிறருக்கு சவால் விடும் வகையில் இருந்தது. சமூக வலைத்தளங்களில் இது வைரலாகப் பரவ, விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து, சிவலிங்கம் உள்ளிட்ட 7 கல்லூரி மாணவர்களைக் கைது செய்து, அரிவாள் மற்றும் செல்ஃபோன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பள்ளியில் தொடங்கி கல்லூரி வரை சென்றும், பிறர் வாழ்த்தும் விதத்தில், மகிழ்ச்சியான சூழலில் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்ற சாதாரண விஷயத்தைக்கூட, கற்றுக் கொள்ளாத மாணவர்களாக, இத்தகையோர் இருப்பது கொடுமைதான்!
இன்னொரு கொடுமையும் நடந்திருக்கிறது. விருதுநகர் விவேகானந்தர் தெருவில் மது அருந்திய இளைஞர்கள் அந்த வழியாகச் சென்ற சிறுவர்களைப் பிடித்து வலுக்கட்டாயமாக மது அருந்தச் செய்யும் சி.சி.டி.வி காட்சி ஊருக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்த, விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீசார், சம்மந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.