Skip to main content

வெளியேறப்போகிறது 3 லட்சம் கன அடி நீர்..! 15 மாவட்டங்களுக்கு கடும் வெள்ள அபாயம்..!

Published on 15/08/2018 | Edited on 27/08/2018
 


காவிரியில் வெள்ள அபாயம் கடுமையாக ஏற்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு கர்நாடகா அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 2.50 லட்சம் கன அடி நீர் அப்படியே மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு காவிரி ஆறு ஒடும் 15 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தற்போது அதைவிட அபாயம் உருவாக உள்ளது என்கிறார்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 1.35 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை ஏற்கனவே நிரம்பியதால்1.40 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கனமழை காரணமாக கர்நாடகாவின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கு இன்று காலை முதல் இரண்டு லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டு அந்த தண்ணீர் மேட்டூர் அணை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் கன மழையால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை நிரம்ப இன்னும் ஐந்து அடியே பாக்கி உள்ளது.

பவானிசாகர் அணைக்கு 40 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று இரவுக்குள் பவானிசாகர் அணை நிரம்பி விடும் அதன் பிறகு அணைக்கு வரும் 40 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்பட்டு அது பவானி கூடுதுறையான காவிரி ஆற்றில் கலந்து காவிரியுடன் வெளியேறும் நாளை மதியத்திற்கு பிறகு காவிரி ஆற்றில் 2.50 லட்சம் கன அடி நீர் கரை புரண்டு ஒட உள்ளது.

கன மழை தொடர்ந்து நீடித்தால் மேட்டூர் அணைக்கும் பவானிசாகர் அணைக்கும் நீர் வரத்து மேலும் கூடும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் காவிரியில் 3 லட்சம் கன அடி நீர் வெளியேறும் வாய்ப்பு உள்ளது. இது காவிரி கரையோரத்தில் வாழும் மக்களுக்கு கடும் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தப்போகிறது என்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியா கூட்டணி ஜெயித்தால் மேகதாது அணை கட்டப்படும்; முதல்வர் மௌனம் ஏன்? - அன்புமணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 Anbumani condemns that Mekedatu Dam will be built if the Indian alliance wins

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் என சித்தராமையா பேச்சு கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே  மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர்  சித்தராமையா கூறியிருக்கிறார்.  பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியை  ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘’மேகேதாதுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.  சித்தராமையாவின் இந்தப்  பேச்சு கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும்,  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படியும்  காவிரி  ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களிடமிருந்து இதற்கான வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் பல முறை நான் பெற்றுள்ளேன். உண்மை நிலை இவ்வாறு இருக்க மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று சித்தராமையா கூறுவது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவது ஆகும். சித்தராமையாவின் இந்தப் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.

காங்கிரஸ்  ஆட்சியில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாட்களாகியும், அதே கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில்  மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களைக் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. ஆனாலும்  அவர் அமைதியாக  இருப்பதன் பொருள் காங்கிரசின் நலன்களுக்காகவும், கர்நாடகத்தின் நலன்களுக்காகவும்  காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்கத் துணிந்து விட்டார் என்பதுதான்.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே  4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளைக் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின்,  இப்போது மேகதாது அணைக் கட்டும்  விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரது இந்தத் துரோகத்திற்கு மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

‘தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது’ - கர்நாடகா அரசு திட்டவட்டம்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Karnataka government planed Can't release water to Tamil Nadu

கர்நாடகா மாநிலம், பெங்களூர் நகரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தான் ஒரே வழி என கர்நாடகா மாநில அரசு முடிவு செய்து, அணை கட்டுமான பணிகளுக்கு ஆர்வம் காட்டி வந்தது. குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில், மேகதாது அணை கட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதற்கு தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த சூழலில், கடந்த மார்ச் 21ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தில் பெங்களூர் நகர குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகா மாநில அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், அதற்கு தமிழக அரசு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக தலா 2.8 டி.எம்.சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகா அரசை காவிரி ஒழுங்காற்று குழு கேட்டுக்கொண்டது. 

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று (04-04-24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடகா தரப்பு அதிகாரிகள் பங்கேற்றனர். 

இதில், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவையில் உள்ள 3.5 டி.எம்.சி தண்ணீரையும், ஏப்ரல், மே மாதங்களுக்கான தண்ணீரையும் தடையின்றி திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு, கர்நாடகாவில் குடிநீர் பிரச்சனை மற்றும் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது. மேலும், நீர் இருப்பு மற்றும் சூழலை கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என கர்நாடகா தரப்பு அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.