Skip to main content

"அடுத்து ஆட்சி அமைக்க மாட்டோம் என்று பழனிசாமிக்கு நன்கு தெரியும்; அதனால் தான் தற்போது.." - சுப.வீரபாண்டியன் பேச்சு!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

xv

 

சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பேராசிரியர் சுப.வீரபாண்டின், ஆளும் அதிமுக அரசை விமர்சனம் செய்து பேசினார். அவரின் பேச்சு வருமாறு, " விரைவில் தமிழகம் தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில், வழக்கம் போல் திமுக மக்களைச் சந்தித்து வருகிறது. தேர்தலுக்காக மக்களைச் சந்திக்கின்ற இயக்கம் திமுக இல்லை. 5 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்களைச் சந்திக்கின்ற இயக்கம் எதுவென்றால் யாரைக் கேட்டாலும் திமுக என்று பதில் சொல்வார்கள். தேர்தல் திருவிழாக்கள் வருகின்றபோது வருகிறவர்கள் அல்ல நாம். எப்போதும் மக்களுடன் மக்களாக இருப்பவர்கள். கடந்த சில நாட்களாக தமிழக அரசின் சார்பாக ஒரு விளம்பரம் கொடுக்கப்படுகின்றது. அதற்காக இதுவரை 1000 கோடி ரூபாய் செலவழித்துள்ள அரசு இப்போதுள்ள அரசு. இன்றைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறார். மன்னிக்க வேண்டும், அவரை பழனிசாமி என்றுதான் அழைக்க வேண்டும். எடப்பாடி என்று அழைத்தால் அந்தத் தொகுதி மக்கள் வருத்தப்படுகிறார்கள். எனவே கழக தோழர்கள் அவ்வாறு அழைப்பதைத் தவிர்க்க வேண்டும். இன்றைக்கு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் தலைவரின் என்ன கோரிக்கை கொடுக்கப்படுகின்றதோ, அதை அடுத்தநாள் தீர்வாக முதல்வர் அறிவிக்கிறார். எனவே இன்றைக்கும் ஏதாவது நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றது என்றால் அதற்கு ஸ்டாலின்தான் காரணமாக இருக்கிறார்.

 

முன்பெல்லாம் மோடி சொல்வதற்கெல்லாம் பழனிசாமி தலையாட்டிக் கொண்டிருந்தார். தற்போது நம்முடைய தலைவர் சொல்வதற்கும் சேர்த்தே தலையாட்டிக்கொண்டுள்ளார். இன்றைக்கு இந்த ஆட்சியை தளபதிதான் நடத்துகிறார் என்பதை இந்த நாடு பார்த்து வருகின்றது. பயிர்க் கடனை இன்றைக்கு முதல்வர் தள்ளுபடி செய்கிறேன் என்கிறார். இதை அவர் எப்போது செய்திருக்க வேண்டும். ஆட்சி முடிவதற்கு இரண்டு மாதங்கள் முன்பா? நம்முடைய கட்சி முன்னணியினர் எல்லோரும் சொன்னார்கள், தகுதியில்லாதவர்கள் எல்லாம் இன்றைக்கு அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்று. நான் இப்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அவர்களுக்குத் தகுதி இல்லாததனால்தான் அவர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். இந்த உண்மையை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். முறையான தகுதி இருந்தால் அவர்கள் இப்படி காமெடி செய்துகொண்டிருக்க மாட்டார்கள். தலைவர் கலைஞர் அவர்களும் பயிர்க் கடனை தள்ளுபடி செய்திருந்தார். ஆனால் எப்போது செய்தார். ஆட்சிக்கு வந்த உடனே அவர்களின் கஷ்டங்களை உணர்ந்து தள்ளுபடி செய்தார். இவரைப் போல் ஆட்சி முடிய இரண்டு மாதங்கள் இருக்கின்றபோது செய்யவில்லை. 

 

இப்போது இப்படி அறிவிக்கிறோமே, அடுத்து நாம் அந்தக் கடனை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்ற எண்ணம் முதல்வருக்கு வர வேண்டும். ஆனால் நம் முதல்வருக்கு அந்த எண்ணம் கண்டிப்பாக வராது. ஏனென்றால் அடுத்து நாம் வர மாட்டோம் என்பது அவருக்குக் கண்டிப்பாக தெரியும். அதனால் என்ன தோன்றுகிறதோ அதனைத் தொடர்ந்து அறிவித்து வருகிறார். அடுத்து வருகிறவர்கள் தலையில் அது விழட்டுமே என்று நினைக்கிறார். அடுத்து நாம் வர மாட்டோம் என்று உறுதியாக தெரிந்த பிறகு, நான் இத்தனை ஆயிரம் கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்கிறோம் என்பதெல்லாம் ஏமாற்றும் வேலை இல்லையா?  இன்றைக்கு இந்த அரசு மத்திய அரசிடம் தலையாட்டும் அரசாக இருக்கிறது. மக்களிடம் நாம் ஒன்றை முன்வைக்க வேண்டும், தலையாட்டும் அரசு வேண்டுமா அல்லது தன்மானம் உள்ள அரசு வேண்டுமா என்று. நிச்சயமாக இந்தமுறை தலையாட்டும் அரசை தூங்கி எறிவார்கள் என்பது மட்டும் நிச்சயம். தன்மானம் உள்ள அரசாக இருக்க வேண்டும் என்றால், அது தளபதி தலைமையில் அமைய இருக்கின்ற அரசாக மட்டுமே இருக்கும்" என்றார்.