Skip to main content

சுதந்திரத்தின் பலனை அரசியல்வாதிகள் 74 வருடங்களாக அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள் - நடிகர் ராஜ்கிரண்

Published on 15/08/2020 | Edited on 15/08/2020
fd


நாம் பெற்ற சுதந்திரம்  என்ற தலைப்பில்  நடிகர் ராஜ்கிரண்   எழுதிய வரிகள் வருமாறு,

நம் இந்திய தேசத்தின்
சுதந்திர வரலாறு,
மிக நீளமானது, மிக ஆழமானது....

 

பளபளப்பான மேடைகள் போட்டு,
கவர்ச்சிகரமான வசனங்கள் பேசி,
பொய்யான வாக்குறுதிகள் கொடுத்துக்
கிடைத்ததல்ல, சுதந்திரம்...

 

நம் முன்னோர்களின்
செல்வங்களையும், உடைமைகளையும்,
உறவுகளையும், உதிரங்களையும்,
உடல்களையும், உயிர்களையும்
இந்த மண்ணில் விதைத்துக்
கிடைத்தது, சுதந்திரம்...

 

சுதந்திரத்தின் பலனை,
அரசியல்வாதிகள் 74 வருடங்களாக
அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்

 

விதைத்தவர்களின் சந்ததிகள்
தெருவில் நிற்கிறார்கள்...

 

விதைக்கப்பட்டவர்களின் ஆன்மாக்கள்,
எல்லாவற்றையும்
கவனித்துக்கொண்டு தான் இருக்கின்றன....

 

நம் தேசியக்கொடியின் "காவி நிறம்",
பெரும்பான்மையான இஸ்லாமியர்கள்
உட்பட, சுதந்திரத்துக்காகப்போராடிய
அனைத்து மக்களும் சிந்திய ரத்தத்தையும், அவர்களின் தியாகத்தையும் குறிக்கிறது...

 

வெள்ளை நிறத்தின் நடுவில் இருக்கும்
"சக்கரம்", அதன் ஆரங்கள் அனைத்தும்
சமமாக இருப்பதைப்போல, இங்கு
அனைத்துப்பிரிவு மக்களும், சமத்துவத்தோடும், சமநீதியோடும்
நடத்தப்பட வேண்டும் என்ற, நமது
அரசியல் சாசனத்தை குறிக்கிறது...

 

அப்படி நடத்தப்பட்டால் தான்,
நாட்டில் அமைதி நிலவும் என்பதை,
"வெள்ளை நிறம்" குறிக்கிறது...

 

அப்படியான அமைதி நிலவினால் தான்,
நாடு சுபிட்சம் அடையும் என்பதை,
"பச்சை நிறம்" குறிக்கிறது...

 

இதையெல்லாம்,
வருடத்திற்கு ஒரு முறையாவது,
ஒவ்வொரு இந்தியக்குடிமக்களும்
நெஞ்சில் நிறுத்திக்கொள்ள வேண்டும்
என்பதற்காகத்தான்,
தேசியக்கொடி ஏற்றப்பட்டு, "சுதந்திரம்"
கொண்டாடப்படுகிறது...

 

சட்டைப்பையில் மூவர்ணக்கொடி குத்தி,
குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து, ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்வதோடு நின்று விடாமல்,

 

நம் சுதந்திரத்துக்காக உயிர்த்தியாகம்
செய்தவர்களின் வாழ்க்கையும்,
போராட்டங்களும், வளரும் குழந்தைகளுக்கு, பாடப்புத்தகங்கள்
வழியாக போதிக்கப்பட வேண்டும்...

 

இந்தியா நமது தேசம்.
ஹிந்துஸ்தான் ஹமாரா...