Skip to main content

“இந்தியாவுக்கு தனியாகச் செல்ல வேண்டாம் எனத் தோழிகளிடம் கூறினேன்” - பிரபல எழுத்தாளரின் பரபரப்பு கருத்து

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
sensation by America writer says I have told my friends not to go to India alone

ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். 

இதுவரை இத்தாலி, ஈரான் எனப் பல நாடுகளுக்குச் சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். அந்த வகையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கினர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில், குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

sensation by America writer says I have told my friends not to go to India alone

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ, இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் வாழ்ந்தபோது, நான் கண்ட பாலியல் தொல்லைகள் போல் வேறு எங்கும் கண்டதில்லை. சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தாலும், துன்புறுத்தப்படாமலோ அல்லது தாக்கப்படாமலோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்படாமலோ கூட ஒரு பெண் பயணியை நான் சந்தித்ததில்லை.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்தியா எப்போதும் இருக்கும். ஆனால் அங்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்று பெண் தோழிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். இந்திய சமூகத்தில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாகவே இருக்கிறது. இதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.  

சார்ந்த செய்திகள்