Skip to main content

அரசு பேருந்து நடத்துநர் இருக்கையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
Govt bus driver fainted on seat and passed away

புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக கரூருக்கு தினசரி அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்  வியாழக்கிழமை காலை புதுச்சேரியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டது. இந்தப் பேருந்து ஓட்டுநராக கோபால் என்பவரும், நடத்துநராக கரூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள வாங்கல் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம்(48) என்பவரும் பணியில் இருந்தனர்.

இந்தப் பேருந்து கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் வந்த போது ஓட்டுநர், பயணிகள் யாராவது இறங்க வேண்டியுள்ளதா எனக் கண்டக்டரிடம் கேட்டுள்ளார். அப்போது நடத்துநர் எந்தப் பதிலும் சொல்லாமல் இருக்கையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் உடனே பேரூந்தை பயணிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனைக்கு ஓட்டி சென்றார்.

பின்னர் பயணிகள் உதவியுடன் நடத்துநரை இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே பன்னீர்செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த கடலூர் புதுநகர் காவல் துறையினர் பன்னீர் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து பேருந்தில் வந்த பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தில் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சார்ந்த செய்திகள்