Skip to main content

பளார் விட்ட எம்.எல்.ஏ.; சரமாரி பதிலடி கொடுத்த வாக்காளர்!

Published on 13/05/2024 | Edited on 13/05/2024
andhra election YSR Congress MLA incident Voter backlash

நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் இன்று (13.05.2024) 4 ஆம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி ஆந்திராவில் மொத்தம் உள்ள மக்களவைத் 25 தொகுதிகளுக்கும், 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

அதே சமயம் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு சில தொகுதிகளில் மாலை 4 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் ஆந்திராவின் பல்வேறு இடஙகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் சம்பவம் ஏற்பட்டது. பல்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டல கிராமத்தில் வாக்குச்சாவடி அருகே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு கட்சியினரும் ஒருவரையொருவர் கட்டையால் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் 2 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டன. காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் காரணமாக ரெண்டல கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

andhra election YSR Congress MLA incident Voter backlash

இதனையடுத்து பலநாடு வாக்குச்சாவடியில் தெலுங்கு தேசம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே  மோதல் சம்பவம் நடைபெற்றது.  இரு கட்சியினரும் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ள ஓட்டு பதிவிட முயன்றதாக கூறி இருவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி மோதலில் ஈடுபட்டனர். மேலும் சித்தூர் தொகுதி குடிபாலா பகுதியில் தெலுங்கு தேசம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர் சுரேஷுக்கு கத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆந்திராவில் வாக்களிக்க குண்டூர் மாவட்டம் தெனாலி சட்டமன்ற தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சிவகுமார் அத்தொகுதியின் வேட்பாளராகவும் போட்டியிடுகிறார். இவர் தனது வாக்கை செலுத்த வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்குச்சாவடிக்குள் சென்றுள்ளார். அப்போது வரிசையில் நின்ற வாக்களார் ஒருவர் வரிசையில் நின்று வாக்களிக்க மாட்டீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் கோபமடைந்த எம்.எல்.ஏ. சிவகுமார் அந்த வாக்காளர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டுள்ளார். அதன் பின்னர் வாக்காளரும் பதிலுக்கு எம்.எல்.ஏ. சிவகுமார் மீது அறை விட்டுள்ளார். இதனையடுத்து எம்.எல்.ஏ. சிவகுமாரின் ஆதரவாளர்கள் அந்த வாக்காளரை கடுமையாக தாக்கினர். இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்