Skip to main content

சாதிய வன்கொடுமை; சத்தமில்லாமல் சாதித்த நாங்குநேரி மாணவர்!

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
Nanguneri student who achieved without noise!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் சாதிய வன்முறை காரணமாக அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (06.05.2024) காலை 09.30 மணிக்கு வெளியானது. தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து வருகின்றனர். 

Nanguneri student who achieved without noise!

இத்தகைய சூழலில் இந்த கொடூர தாக்குதலுக்கு ஆளான மாணவர் சின்னதுரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த தேர்வில் அவர், தமிழ் - 71, ஆங்கிலம் - 93, பொருளியல் - 42, வணிகவியல் - 84, கணக்குப்பதிவியில் - 85, கணினி அறிவியல் - 94 என மொத்தம் 469  மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து சின்னதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், “சாதீய வன்கொடுமை காரணமாக பாதிக்கப்பட்டேன். 4 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். படிப்பதற்கு ஆசிரியர்கள் உதவி செய்தனர். அதன் பின்னர் பள்ளிக்குச் சென்று படித்தேன். அங்கேயும் நன்றாக படிக்க சொல்லி கொடுத்தனர். மாணவர்களும் உதவி செய்தனர். 469 மதிப்பெண்கள் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வணிகவியல் (COMMERCE) படிப்பை முடித்துவிட்டு பட்டய கணக்கர் (C.A.) ஆக வேண்டும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்