Skip to main content

ஆபாச வீடியோக்கள் விவகாரம்; “டி.கே.சிவக்குமார் ரூ.100 கோடி பேரம் பேசினார்” - பா.ஜ.க நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 18/05/2024 | Edited on 18/05/2024
BJP executive sensational allegation on DK Sivakumar bargained for Rs 100 crore

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையும், தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சமையலரின் மகன், தனது தாய் கடத்தப்பட்டிருப்பதாக புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில், எச்.டி ரேவண்ணா மீதும், அவரது உறவினர் சதீஷ் பாவண்ணா மீதும் ஆபாச வீடியோ, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் எச்.டி.ரேவண்ணா அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் தேவராஜ் கவுடா பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் தொடர்பாக பாஜக தலைமைக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர், பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் ஓட்டுநர் கார்த்திக் என்பவர் ஆபாச படம் தொடர்பான பென் டிரைவை காங்கிரஸ் கட்சியிடம் கொடுத்திருப்பார் எனத் தெரிவித்திருந்தார். இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பென் டிரைவை பா.ஜ.க மூத்த தலைவர் தேவராஜ் கவுடாவிடம் வழங்கியதாகவும், அவரைத்தவிர வேறு யாரிடமும் அந்த வீடியோவை வழங்கவில்லை என்றும் டிரைவர் கார்த்திக் தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில் கர்நாடக பா.ஜ.க நிர்வாகி தேவராஜ் கவுடா மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சொத்து விவகாரத்தில் உதவுவதாக கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதில், கடந்த 10 மாதங்களாக தன்னை மிரட்டி தேவராஜ் கவுடா பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியிருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், பா.ஜ.க மூத்த தலைவர் தேவராஜ் கவுடாவை போலீசார் கடந்த 11ஆம் தேதி அதிரடியாக கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, நேற்று (17-05-24) அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

BJP executive sensational allegation on DK Sivakumar bargained for Rs 100 crore

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தேவராஜ் கவுடா, “நான் வாய்ப்பை மறுத்ததால், என் மீது போலீஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நான் கைது செய்யப்பட்டேன். நான் விடுதலையானவுடன் டி.கே. சிவக்குமாரை அம்பலப்படுத்த தயாராக இருக்கிறேன். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு கவிழும். ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ்களை பரப்பியவர் ஹெச்.டி.குமாரசாமிதான் என்று என்னிடம் அறிக்கை விடச் சொன்னார்கள். ஆனால், பிரஜ்வல் ரேவண்ணாவிடம் டிரைவராக பணியாற்றிய கார்த்திக் கவுடாவிடம் இருந்து பென் டிரைவை பெற்று, முழு எபிசோடையும் வெளியிட திட்டமிட்டவர் டி.கே.சிவகுமார். 

பிரதமர் மோடிக்கும், எச்.டி.குமாரசாமிக்கும், பா.ஜ.க.வுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பெரிய அளவில் திட்டமிட்டனர். அதற்கு எனக்கு ரூ.100 கோடி வழங்க முன்வந்தார்கள். அதன் பின்னர், பவுரிங் கிளப்பில் உள்ள அறையில் இருந்த போது உள்ளூர் தலைவர் மூலம் எனக்கு ரூ.5 கோடியை முன்பணமாக அனுப்பினார்கள். நான் அவர்களின் திட்டங்களில் ஒரு பகுதியாக இருக்க மறுத்தபோது, ​​அவர்கள் முதலில் என்னை ஒரு வழக்கில் சிக்க வைத்தார்கள், ஆனால் எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர், என்னை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்க வைத்தார்கள். இந்தத் தந்திரமும் தோல்வியடைந்ததால், என் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர். நான் நான்கு நாட்கள் விசாரிக்கப்பட்டேன். ஆனால் அவர்களால் எதையும் பெற முடியவில்லை. சிவகுமாரின் உரையாடல்களின் ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது. நான் அதை வெளியிடுவேன். நான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் காங்கிரஸ் அரசு கவிழும்” என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியே வர காரணமாக இருந்தவர் தேவராஜ் கவுடா என்பதும் கவனிக்கத்தக்கது. 

சார்ந்த செய்திகள்