'இதய தெய்வம், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் தலைமையிலான ஓராண்டு சாதனை... என்ற பெயரில் சிலநாட்களுக்கு முன்பு கிட்டத்தட்ட எல்லா செய்தித்தாள்களிலும் வந்தது. அதோடு முடிந்தது என்று நினைத்தால், திரையரங்குகளில் ஓடும் பழைய படங்களைப் பார்க்கப் போனால் அங்கும் முதல்வர் எடப்பாடியாரின் ஒரு வருட சாதனை புராணம். இதற்கெல்லாம் மேலாக சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வந்திருக்கிறது, 300 ரூபாய் விலையாம். ஆம், அவர் 'அம்மா ஆட்சி'யைதான் நடத்துகிறார், விளம்பரம் செய்வதிலும், செல்லும் இடத்துக்கெல்லாம் நூற்றுக்கணக்கில் காவல்துறையினரை அலைக்கழிப்பதிலும் சற்றும் குறைவில்லாத அம்மா ஆட்சிதான் நடத்துகிறார்.
வருடம் முழுவதும் நடந்தது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, பல நூறு கோடிகள் செலவில். ஆனால், உழவரானாலும் ஒகி புயலானாலும் ஒருமுறை கூட சரியாக நடக்கவில்லை நிவாரண உதவி செயல்பாடுகள். ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின்போது பணம் பட்டுவாடா செய்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரி சோதனையை நடந்தது. அப்போது விஜயபாஸ்கர் நான் கைதானால் ஆட்சி கவிழும் எனும் அளவுக்குப் பேசினார். அந்த வழக்கில் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியும் சம்மந்தப்பட்டிருக்கிறார்.
சர்ச்சைக்குரிய நபரான சேகர் ரெட்டியின் டைரியில் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் பெயர் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்ட விரோதமாக குட்கா விற்ற கும்பலை வருமான வரித்துறையினர் இரண்டாண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தனர். அதில் மாதவ் ராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயர் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மின்சாரத்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன், சூரிய மின் உற்பத்தி திட்டத்தில் அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்க பணம் வாங்கி முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. மக்களின் குட்புக்சில் இடம் பெறாத இவர்கள் இது சேகர் ரெட்டி, மாதவ்ராவ் போன்ற ஆட்களின் டைரிகளில் போட்டி போட்டு இடம் பிடிக்கிறார்கள்.
அரசைத் தான் சரியாக நடத்தவில்லை, அரசு ஊழியர்களையாவது பாதுகாத்தார்களா என்றால் அதுவும் இல்லை. போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்காதது, ஊழியர்களின் சம்பள உயர்வு போன்றவை தொடர்பாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும், மதுக்கடைகளை நெடுஞ்சாலைகளில் அமைக்கத் தடைவிதித்து 500 மீட்டர்கள் உள்ளே அமைக்க உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம். உடனடியாக மூளையை பிழிந்து சிந்தனை சாறு எடுத்த அரசும் அதிகாரிகளும், கடைகளின் வாசலை திறமையாக மாற்றியது. அம்மாவின் ஆசிபெற்றவர்கள் தானே, அம்மா போட்டோ ஒட்ட சொன்னார். அவர்களின் வழித்தோன்றல்கள் 500 மீட்டர் சுற்றுச்சுவர் வைத்து மதுபான கடைகளை அமைத்தனர். சில இடங்களில், மதுபானக்கடைகளுக்காக ஊராட்சி எல்லைகளையே மாற்றி அமைத்தார்கள்.
விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரி சோதனை
சத்துணவு முட்டையில் தினமும் பல கோடிகள் ஊழல் நடக்கும் தகவல் சமீபத்தில் வெளிவந்தது. தஞ்சாவூரில் கட்டப்பட்ட மேம்பாலம் ஓரு வருடத்திற்குள்ளாகவே விரிசல் விட்டது. முன்பெல்லாம் செலவுபோக மிச்சத்தில் ஊழல் செய்தார்கள். ஆனால் இப்போது ஊழல் செய்தது போகத்தான் செலவு செய்கிறார்கள் என்பதை அது நினைவூட்டியது. தமிழ்நாட்டில் தொடங்கப்பட வேண்டிய ஃபாக்ஸ்கான் போன்ற பல நிறுவனங்கள் ஆந்திராவின் நெல்லூருக்கும் பிற மாநிலங்களுக்கும் போயின. அதற்கு காரணம் இந்த அமைச்சர்களின் அதீத எதிர்பார்ப்பும் அரசியலும்தான்.
கன்னியாகுமரியில் ஒகி புயலின் போது இவர்களின் நிர்வாகத் திறனும், மீட்பு நடவடிக்கைகளின் திறனும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. இந்த அரசால் இன்றுவரை அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை என்பதை விட முயலவில்லை என்று கூறுவதே சரியாக இருக்கும். அதுவரை கண்டும் காணாமல் இருந்த எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடி வந்த போது சென்று பின் வரிசையில் நின்று கொண்டார். ஆனால் அதன்பின் இவர்கள் வெளியிட்ட ஒகி விளம்பர வீடியோக்கள் பார்ப்பவரை எரிச்சலூட்டுவதாக அமைந்தன.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியத்தை பெருக்கியது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழக அரசின் செயல்பாடு, அவர்களின் பேச்சு மீதம் இருந்த நம்பிக்கையையும் கெடுத்தது. தூத்துக்குடியில் உலகமே அறிந்த ஆபத்தான தொழிற்சாலையான ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அங்குள்ள கிராம மக்கள், ஐம்பது நாட்களை கடந்து நடத்துகின்றனர். சூழலியல் கேடு, கண் முன்னே நடக்கையில், போராட்டத்தை சற்றும் கண்டுகொள்ளாத அரசு, நமக்கு பாடம் எடுக்கிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த ஓராண்டு, எடப்பாடிக்கு சாதனை ஆண்டாக அமைந்ததோ என்னவோ தெரியாது, ஆனால் மக்களுக்கு இது சோதனை ஆண்டாக அமைந்தது என்பதை உறுதியிலும், உறுதியாகக் கூறமுடியும். தண்ணீர் தேவை, இயற்கை வளம், விவசாயம், கல்வி, வேலைவாய்ப்பு என மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகளுக்கு எந்த ஆக்கபூர்வமான தீர்வுகளையும் காணாமல், நலத் திட்டங்களையும் இலவச உதவிகளையும் தங்களது சாதனைகளாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.
இவை வெறும் அடிப்படையான செய்திதான். இன்னும், துணை வேந்தர் நியமனங்களில் இருந்து காவிரி மேம்பாட்டு ஆணையம் வரை மாநிலத்தின் உரிமைகளை பறிகொடுத்துவிட்டு அதை அழுத்தமாகக் கேட்கவும் தகுதியற்ற அரசாகத்தான் இது இருக்கிறது. இந்த நிலையில் நாம் காணும் இந்த விளம்பரங்கள் வெந்த புண்ணில் ஆசிட் அடிப்பது போன்றிருக்கிறது.