Skip to main content

பாஜக வெல்ல முடியாத கட்சியா? அந்தக் கட்சி இழந்ததும் பெற்றதும்!

Published on 19/03/2018 | Edited on 19/03/2018

பாஜக சந்தித்த இடைத்தேர்தல்களின் முடிவுகளையும், மாநில சட்டமன்ற தேர்தல்களில் அந்தக் கட்சி கையாண்ட தந்திரங்களையும் கவனித்தால் இந்த உண்மை புரியும்.

 

Narendra modi

 

மோடி பதவியேற்ற 100 நாட்கள் முடிந்த நிலையிலேயே 10 மாநிலங்களில் 33 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உ.பி., குஜராத், தெலங்கானா மாநிலங்ளைச் சேர்ந்த 3 மக்களவை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 33 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜகவுக்கு சொந்தமான 24 தொகுதிகள் இருந்தன. இவற்றில் 13 தொகுதிகளை அது இழந்தது. உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் ராஜினாமா செய்த மக்களவைத் தொகுதியில் அவருடைய உறவினரே வெற்றி பெற்றார். தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ராஜினாமா செய்த தொகுதியில் அவருடைய கட்சியும், குஜராத்தில் மோடி ராஜினாமா செய்த வதோதரா தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றன. குஜராத்தில் பாஜகவுக்கு சொந்தமான 3 தொகுதிகளையும், ராஜஸ்தானில் பாஜகவுக்கு சொந்தமான 3 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது.

 

2015 ஆம் ஆண்டு தெலங்கானா, ம.பி.யில் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், டிஆர்எஸ்சும், காங்கிரஸும் தலா ஒரு தொகுதியை கைப்பற்றின. இதில் ம.பி.யில் பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியது.

 

2016ல் மேற்குவங்கம், அசாம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிங்களில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் இரண்டு தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸும், ம.பி., அசாமில் தலா ஒரு தொகுதியை பாஜகவும் தக்கவைத்துக் கொண்டன.

 

amit shah

 

2016ல் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, புதுவை, அசாம், ஆகிய 5 மாநிலத் தேர்தல்களில் அசாமில் மட்டுமே பாஜகவின் கூட்டணி தந்திரம் வெற்றிபெற்றது. தேர்தலுக்கு முன், காங்கிரஸில் நீண்டகாலம் இருந்த தலைவர்கள் பலரை பதவி ஆசைகாட்டி பாஜக தன்பக்கம் இழுத்திருந்தது. இருந்தாலும் தனது தலைமையிலான கூட்டணி அரசு என்று அது சொல்லிக் கொண்டது. மற்ற நான்கு மாநிலங்களில் பாஜகவின் ஜம்பம் பலிக்கவில்லை.

 

அதன்பிறகு 2017ல் கோவா, குஜராத், ஹிமாச்சலபிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.

 

இந்த மாநில தேர்தல்களில் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி புது எழுச்சி பெற்றது. சொந்த மாநிலத்திலேயே பலவிதமான நாடகங்களை அரங்கேற்ற வேண்டிய நிலைக்கு மோடி தள்ளப்பட்டார். முந்தைய தேர்தலில் பெற்றிருந்த 115 இடங்களில் 99 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

 

இமாச்சலப்பிரதேசம், உ.பி., உத்தரகாண்ட் மாநிலங்களில் தனியாக ஆட்சி அமைத்த பாஜக, கோவா, மணிப்பூர், மாநிலங்களை ஆளுநர் உதவியோடு விலைக்கு வாங்கியது. இந்த களேபரத்தில், பஞ்சாபில் காங்கிரஸ் பெற்ற முக்கியமான வெற்றி மறைக்கப்பட்டது.

 

2017ல் பஞ்சாபில் குருதாஸ்பூர், ராஜஸ்தானில் ஆல்வர், ஆஜ்மீர், ஆகிய மூன்று மக்களவை தொகுதிகளிலும் பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்தது. மேற்கு வங்கத்தில் உலுபேரியா மக்களவை தொகுதியில் திரிணாமுல் வெற்றிபெற்றது.

 

இப்படிப்பட்ட நிலையில்தான், 2018ல் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 25 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கையில் இருந்த திரிபுராவில் ஆளுங்கட்சிக்கு எதிரான முதலாளிகள், மற்றும் பழங்குடியினரின் எதிர்ப்புணர்வை கார்பரேட்டுகளின் உதவியோடு பணத்தை வாரியிறைத்து பாஜக அறுவடை செய்தது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியையும், அதன் 38 சதவீத வாக்குகளையும் மொத்தமாக பாஜக விலைக்கு வாங்கியிருந்தது.

 

மேகாலயாவில் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற பாஜக, 21 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸை பின்னுக்கு தள்ளி, ஆளுநர் உதவியோடு மாநிலக்கட்சி ஆட்சி அமைக்க உதவியது. அதோடு அந்த அரசில் இடம்பெற்று பாஜக கூட்டணி அரசு என்று சொல்லிக்கொண்டது. நாகாலாந்திலும் இதே டெக்னிக்கை பயன்படுத்தியது.

 

இந்நிலையில்தான், உ.பி., பிகாரில் நடைபெற்ற 3 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இவற்றில் கோரக்பூர், புல்பூர் தொகுதிகள் முதல்வர் யோகி, துணை முதல்வர் மவுரியா ஆகியோர் வெற்றிபெற்ற தொகுதிகள் ஆகும். பிகாரில் அராரியா தொகுதியில் லாலுவின் ஆர்.ஜே.டி. வெற்றிபெற்றதன் மூலம் பாஜகவுடன் நிதிஷ்குமார் அமைத்த கூட்டணிக்கு மக்கள் பதிலடி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

2019 தேர்தலில் மீண்டும் மோடிதான் ஜெயிப்பார் என்று பாஜக கூறிவரும் நிலையில், இந்தத் தோல்விகள் அந்தக் கட்சியை இடிபோல தாக்கியிருக்கிறது. அதாவது, தற்போதைய நிலையில் மக்களவையில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடத்தைக் காட்டிலும் ஒரு இடம் குறைவாகவே வைத்திருக்கிறது.