Skip to main content

“மக்களின் நாடி பிடிக்கும் மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவர்!”- மருத்துவக் கல்லூரி விழாவில்‘ஐஸ்’மழை!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டுவிழா ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து விருதுநகர் மாவட்டம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விருதுநகரில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான பூமி பூஜையில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். 

virudhunagar medical college cm function speech

சட்ட விரோத கட்- அவுட்டுகள்!

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இ.பி.எஸ்., ஒ.பி.எஸ். என அதிமுக தலைவர்களின் கட்- அவுட்டுகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திலிருந்து விழா நடைபெறும் இடம் வரையிலான அணுகு சாலையில் வைக்கப்பட்டுள்ளதைப் பார்த்த டிராபிக் ராமசாமி, “காவல்துறையினரே சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள கட்- அவுட்டுகளுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை மீது நான் வழக்கு தொடர்வேன்.” என்று வழக்கம்போல் அதிரடி காட்டிவிட்டுச் சென்றார். 

virudhunagar medical college cm function speech


குஷிப்படுத்திய குத்தாட்டம்!

விருதுநகர் மாவட்டம் முழுவதும் இருந்து, பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள், பட்டாசு ஆலைகளுக்குச் சொந்தமான பேருந்துகள் மூலம், ஆட்களை அழைத்துவந்து விருதுநகரில் குவித்திருந்தனர். 

virudhunagar medical college cm function speech

அரசு விழா என்றாலும், முதலமைச்சர் வருவதற்குமுன் பார்வையாளர்கள் கிளம்பிவிடக் கூடாது என்பதற்காக, அவர்களை  குஷிப்படுத்தியே ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு, நடிகர் போண்டா மணி வழங்கிய ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சி கலைஞர்களைக் குத்தாட்டம் போட வைத்தனர். 

 ஒரே பாலில் 11 ரன்!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் நடந்த அடிக்கல் நாட்டு விழா மேடையில் ‘மைக்’ பிடித்த விருதுநகர் மாவட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, இந்தியாவின் இரும்பு மனிதன் நரேந்திரமோடி என்றும், அள்ளிக்கொடுக்கும் எடப்பாடி ஆட்சி என்றும் தூக்கிவைத்துப் பேசினார். 

virudhunagar medical college cm function speech

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். “விருதுநகர் மாவட்ட மக்களுடைய நாடியைப் பிடித்துப் பார்த்த மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவராக இருக்கக்கூடிய மக்களின் மருத்துவர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற ஜெயலலிதாவின் கனவை தாயுள்ளத்தோடு நிறைவேற்றியிருக்கிறார். சுகாதாரத்துறையில் 15 ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டிய திட்டத்தை, ஒரே ஆண்டில், அதுவும் ஆறே மாதங்களில் செய்திருக்கிறார். ஒரே பந்தில் 11 ரன் எடுக்கக்கூடியவராக இருக்கிறார் எடப்பாடி.” என்று புகழ்ந்து தள்ளினார். 

அரசு விழாவில் அரசியல்!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சினிமா பாடல் வரிகளைக் குறிப்பிட்டு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மண்வெட்டியோடு ஒப்பிட்டார். சுயநல சிந்தனை கொண்டவர், நப்பாசை பிடித்தவர், பகல் கனவு காண்பவர் என்று ஒரேயடியாகத் தாக்கினார்.

virudhunagar medical college cm function speech

“11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் துவங்கவிருப்பது அம்மா அரசின் சாதனை. அகில இந்திய அளவில் எந்த மாநிலமும் செய்யாத சாதனை. அதனை தலைமை தாங்கி நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி..” என்று சிக்கனமாகப் பாராட்டிவிட்டு, அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து பேசியபோது “துறுதுறுன்னு ஒரு நிமிஷம்கூட சும்மா இருக்க மாட்டார். எங்கே பார்த்தாலும் விஜயபாஸ்கராகத்தான் தெரிவார். எடுத்த காரியத்தை முடிக்காமல் தூங்க மாட்டார்.” என்று தாராளம் காட்டினார். 
 

மத்திய அமைச்சர் பேச்சு! காற்றோடு போச்சு!

10 நிமிடங்கள் 52 நொடிகள் பேசினார், மத்திய அமைச்சர், ஹர்ஷ் வர்தன். அவர் பேசியதை மேடையிலிருந்தவர்களே கவனிக்காமல், தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். கூட்டமோ, மத்திய அமைச்சர்  எப்போது பேச்சை முடிப்பார் என்று கொட்டாவி விட்டபடியே இருந்தது. விசிலடித்தும், கைதட்டியும் கூட பார்த்தார்கள். ஆனாலும், அவர் பேச்சை தொடர்ந்தபடியே இருந்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அமைச்சர் செல்லூர் ராஜு கை தட்ட, எதற்காக அவர் கை தட்டுகிறார் என்பதே தெரியாமல், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் போன்றவர்களும் கை தட்டினார்கள். அதன்பிறகே, தன்னுடைய பேச்சை நிறைவு செய்தார், ஹர்ஷ் வர்தன். 

virudhunagar medical college cm function speech

“இங்கே மேடை முன்பாக பெரும் கூட்டம் கூடியிருக்கிறது. திடலுக்கு வெளியிலும் இதைவிட அதிக கூட்டம் இருப்பதைப் பார்க்கிறேன்.  என் அரசியல் வாழ்க்கையில், ஒரு அடிக்கல் நாட்டு விழாவுக்கு இத்தனை பேர் திரண்டிருப்பதை இப்போதுதான் நான் காண்கிறேன்.” என்று வியந்த மத்திய அமைச்சர், போலியோ குறித்து ‘ஸ்டோரி’ கூட சொன்னார். பார்வையாளர் பகுதியிலிருந்து ‘நோ ரெஸ்பான்ஸ். காரணம். அவர் உரை நிகழ்த்தியது ஆங்கிலத்தில். விழாவில் இத்தனை பிரம்மாண்டம் காட்டியவர்கள், அவரது பேச்சை மொழி பெயர்ப்பதற்கு யாரையும் ஏற்பாடு செய்யவில்லை. இத்தனைக்கும், தம்பிதுரை, தளவாய் சுந்தரம் போன்றவர்கள் மேடையில் இருந்தார்கள். அட, விஜயபாஸ்கராவது அதைச் செய்திருக்கலாம். மொழிபெயர்க்க யாரும் முன்வராததால்,  மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனின் மொத்த பேச்சும் விழலுக்கு இறைத்த நீர்போல், மக்களைச் சென்றடையாமலே காற்றில் கரைந்தது.  

virudhunagar medical college cm function speech

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனின் விசுவாசிகள்,  இருவரின் பெயரும் மேடையில் உச்சரிக்கப்பட்ட போதெல்லாம் விசிலடித்து, ஆரவாரம் செய்து, ஆதரவு பலத்தைக் காட்டினார்கள்.  
 

“இது ஒரு சரித்திர சாதனை.. மருத்துவத்துறையில் இது ஒரு மைல் கல்” என்று சிலாகித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார். “சிறுபான்மையினர் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உங்களுக்கு பாதுகாப்பாக நாங்கள் இருக்கிறோம்.” என்று பேச்சை நிறைவு செய்தார். 
 

விருதுநகர் மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி வரவேண்டும் என்பது மக்களின் ஏக்கமாக இருந்ததென்னவோ, உண்மைதான்! ஆனால், மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில், இயல்பான எழுச்சியை மக்களிடம் காண முடியவில்லை. 


 

சார்ந்த செய்திகள்