Skip to main content

"எல்லா ரவுடிகளும் சேர்ந்து பேரணி நடத்துகிறோம் என்றால் அனுமதி வழங்குவார்களா..?" - வன்னி அரசு பொளேர்

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

hjk


ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் நீண்ட வருடங்களாக பேரணி நடத்த முயன்று வந்த நிலையில், அதற்குத் தமிழகத்தில் இதற்கு முன் ஆட்சியிலிருந்த ஜெயலலிதா மற்றும் கலைஞர் ஆகியோர் அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாகப் பேரணி தொடர்பான அறிவிப்பு வெளியாகு கூடவே பேரணிக்கு தடை என்ற அறிவிப்பும் தமிழக அரசு சார்பில் வெளியாகும். நீதிமன்றத்திலும் தமிழக அரசின் வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த அமைப்புக்கு இதுவரை பேரணி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் முதல்முறையாகக் கடந்த மாதம் இறுதியில் தமிழகத்தில் குறிப்பிட்ட 50 இடங்களில் பேரணி நடத்தச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

 

இதற்கிடையே தமிழகத்தில் தற்போதைக்கு பேரணி நடத்த அனுமதி வழங்க முடியாது என்று தமிழக காவல்துறை உயர்நீதிமன்றத்தை மீண்டும் நாட, பேரணியை அடுத்தமாதம் நடத்த உயர்நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக வரும் 31ம் தேதிக்குள் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த நிமிடமே பாயும் என்ற எச்சரிக்கையும் நீதிபதி இளந்திரையன் வழங்கியுள்ளார். ஆர்எஸ்எஸ் பேரணி தமிழ்நாட்டுக்கு தற்போது தேவையான ஒன்றா? இந்த பேரணியால் தமிழ்நாட்டுக்கு சங்பரிவார் அமைப்புக்கள் என்ன சொல்ல வருகின்றன? இதுபோன்ற கேள்விகளுக்கு தனக்கே உரியப் பாணியில் பதிலளிக்கிறார் விசிக கட்சியின் வன்னி அரசு. நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள்  பின்வருமாறு,  

 


தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த அனுமதி கேட்டுள்ளார்கள். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தற்போது அனுமதி வழங்க மறுத்துள்ளார்கள். ஆனால் அந்த அமைப்புக்கு எப்போதும் அனுமதி வழங்கக் கூடாது, அதனை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறீர்கள். அதற்கு என்ன அடிப்படையான காரணம் இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

 

முதலில் ஒன்றை உங்களிடம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒரு ஜனநாயக அமைப்பு கிடையாது. இதனை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய நேரம் இது. மற்ற அரசியல் கட்சிகளுக்கு இந்த அமைப்புகளுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. தேர்தல் அரசியலில் இந்த அமைப்பு பங்கேற்காது. தேர்தல் அரசியலில் அதற்கு நம்பிக்கை இருந்ததில்லை. பயங்கரவாத சிந்தனை மட்டும்தான் அதற்கு மேலோங்கி இருக்கும். பயங்கரவாத செயல்கள் என்ற அடிப்படையில் காந்தியார் படுகொலையில் அந்த அமைப்புக்குச் சம்பந்தம் இருப்பதாகக் கருதியே 1948ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி அந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்தியாவில் எமர்ஜென்ஸி கொண்டு வரப்பட்ட போது மீண்டும் தடை செய்யப்பட்டது. பிறகு பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அந்த இயக்கம் மீண்டும் தடை செய்யப்பட்டது. இந்தியாவில் ஒரு இயக்கம் மூன்று முறை தடை செய்யப்பட்ட வரலாறு வேறு எதற்காவது இருக்கிறதா? முதல் முறையாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்ட போது படேல் என்ன கூறினார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். 

 

" இந்த அமைப்பு ஜனநாயகத்தின் மீது சிறிதும் நம்பிக்கையில்லாத ஒரு அமைப்பாக இருக்கிறது. இந்நாட்டு மக்களுக்கு எவ்வித பாதுகாப்பையும் அளிக்காது. இதைத் தொடர்ந்து செயல்பட அனுமதித்தால் தேச அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும்" என்றார். அவர் கூறிய காரணம் இன்றளவும் அந்த அமைப்புக்குப் பொருந்தும். அவர்களின் எண்ண ஓட்டம் தற்போதும் அதே எண்ணத்தில் தான் இருக்கிறது. எனவே அந்த அமைப்பு தற்போது செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு செய்தால் விபரீத விளைவுகள் ஏற்பட இந்த அனுமதி காரணமாக அமைந்துவிடும். இதற்கு சிறிய உதாரணம், சில நாட்களுக்கு முன்பு திரிபுராவில் இவர்கள் கொண்டாடிய விழா ஒன்றில், ஏராளமான மசூதிகள் உடைக்கப்பட்டன, தேவாலயங்கள் எரிக்கப்பட்டு நாசப்படுத்தப்பட்டன. பிற மதத்தினர் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த அமைப்பு தமிழ்நாட்டில் அதே செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். அதனால் அதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்று சனாதன எதிர்ப்பு இயக்கங்கள் முயன்று வருகிறோம். 

 


மூன்று முறை தடை செய்யப்பட்டாலும் தற்போது நாங்கள் நல்ல முறையில் ஜனநாயகப்பூர்வமாக செயல்பட்டு வருகிறோம். நாங்கள் மக்களுக்கான அமைப்பாகவே தொடர்ந்து இருந்து வருகிறோம். சேவை மனப்பான்மையே எங்களுக்கு முக்கிய நோக்கம். எங்கள் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என்று அவர்கள் தரப்பு கூறுகிறார்களே? 

 

அவர்கள் தடை செய்யப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வில்லை. மூன்று முறை தடை செய்யப்பட்டாலும் சில சக்திகளின் உதவியோடு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. காந்தி படுகொலை செய்யப்பட்ட போது கூட இந்த அமைப்புக்குத் தடை விதிக்க சில காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது வரலாறு. சனாதன சக்திகளுக்கு இந்த மாதிரியான சிலர் காலங்காலமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதில் பெரிய ஆச்சரியம் இல்லை. குறிப்பாக சேவை என்று சொல்கிறீர்கள், இவர்கள் என்ன சேவை செய்கிறார்கள். நாட்டிற்குத் தேவையான எதையாவது செய்கிறார்களா? கெட்ட சேவை செய்ய வேண்டுமானால் இவர்கள் பயன்படலாம், அதைத் தவிர இவர்களால் எதையும் செய்ய முடியாது என்பதுதான் இத்தனையாண்டுகள் அவர்களின் வரலாறு. எனவே வீண் சவடால் அவர்களை மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டும். 

 


எல்லா ரவுடிகளும் சேர்ந்து பேரணி நடத்துகிறோம் என்று அனுமதி கேட்டால் இவர்கள் அனுமதி கொடுத்து விடுவார்களா? இந்தியாவில் அம்பேத்கர் கொண்டுவந்த அரசியலைப்பு சட்டத்தை அழித்து ஒழித்துவிட்டு முழுமையாகச் சனாதனத்தை, வருணா சிரமத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே அவர்களின் அடிப்படை நோக்கம். அதற்காகவே இந்த அமைப்பு தற்போது பேரணி என்ற வடிவத்தில் உள்நுழையப் பார்க்கிறது. ஆனால் அவர்களை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டிருக்கிறது. கொள்கை ரீதியாகவும், இயக்க ரீதியாகவும் இந்த அமைப்பு ஒரு மோசமான இயக்கம். காந்தியாரை கொன்றார்கள், பெருந்தலைவர் காமராஜரை கொல்ல முனைந்தார்கள்.

 

காமராஜர் அவர்கள் இந்த மாதிரியான ஒரு மோசமான அமைப்பு இந்தியாவில் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்று ஏற்கனவே கூறியிருக்கிறார். இவர்கள் ராம ராஜ்ஜியம் அமைப்போம் என்கிறார்கள் என்றால் இவர்களின் நோக்கம் என்னவாக இருக்கிறது. மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில் மன்னராட்சியைக் கொண்டு வருவோம் என்று கூறுகிறார் என்றால் இந்திய அரசியலமைப்பையே அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றுதான் நாம் நினைக்கவேண்டி இருக்கிறது. ஆகையால் இந்த அமைப்பு தடை செய்வதைத் தவிர வேறு எந்த வாய்ப்புக்களையும் நாம் அவர்களுக்கு வழங்கக் கூடாது.