உயர்சாதிக்குத்தான் உயர்கல்வியா?
ஆரியர்கள் மட்டுமே படிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுக்கு கல்வி? ஆரியர்களுக்கு சேவகம் செய்தால் போதும். இப்படியும் சொல்லுகிற காலம் வந்துருமோ என்ற பயம் உருவாகத் தொடங்கிவிட்டது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்படித்தான் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஆரியர்களின் அடிமைகளாய் அய்யா, சாமி என்று அடிபணிந்து வாழ்ந்தார்கள்.
வெள்ளையர் இந்த மண்ணில் வந்த பிறகு, கிறிஸ்தவம் இந்த மண்ணில் வேரூன்றத் தொடங்கிய பிறகுதான் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்கண் திறந்தது.
ஆரியமாயை இருள் விலகத் தொடங்கியது. பரந்த உலகம் புரியத் தொடங்கியது.
அடுத்தவர் நாகரிகத்தை தனதென்று ஆக்கிய, அடுத்தவர் உழைப்பில் உண்டு கொழுத்த ஆரியரின் சூழ்ச்சிகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கின.
எதிலும் உனக்குச் சளைத்தவர் இல்லை என்று கல்வியில் சாதிக்கத் தொடங்கியதும் ஆரியரின் புளுகுமூட்டைகள் குப்பைக்கு போயின.
தந்தை பெரியாரும், அம்பேத்கரும், நாராயணகுருவும், மார்க்சும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் அரண்களாக இருந்து அவர்களுக்கு எழுச்சியூட்டினர்.
இந்தியாவில் ஆரியரின் முகமூடிகளை கிழித்து அம்பலப்படுத்தியது திராவிடம்தான் என்பதால், தெற்கின் மீது ஆரியர்களுக்கு ஒரு விரோதம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
வர்ணாசிரமத்தை நிலைநாட்டுவதையும் சாதிப் பாகுபாடுகளை காப்பாற்றுவதையும் கோட்பாடாக கொண்டுள்ள அமைப்பு ஆர்எஸ்எஸ். அந்த அமைப்பு தனது திட்டங்களை நிறைவேற்றி பழைய காலத்திற்கு நம்மை கொண்டு செல்ல துடிக்கிறது.
மத்தியில் பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்த பாஜக அரசின் மூலமாக அது தனது நச்சுத் திட்டங்களை அமுல்படுத்த முயற்சிக்கிறது.
மாடுகளுக்காக மனிதர்களை கொல்லத் துணிந்தது. உயர்கல்வி நிலையங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் முற்போக்கு மாணவர்களை அடக்கியாள முயற்சித்தது.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவை முதல் பலியாக்கியது.
2014ஆம் ஆண்டு மோடி தலைமையில் மத்தியில் பாஜக அரசு அமைந்தவுடன் கல்வி நிலையங்களில் பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான ஏபிவிபியைக் கொண்டு சாதிவெறியைத் தூண்டிவிட்டார்கள்.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக படி்ததுக் கொண்டிருந்தவர் ரோஹித் வெமுலா. இவர் அம்பேத்கர் மாணவர் அமைப்பின் சார்பில் சில பிரச்சனைகளுக்காக் போராட்டம் நடத்தினார் என்பதற்காக, 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவருக்கு வரவேண்டிய உதவித் தொகை ரூ.25 ஆயிரத்தை பல்கலைக்கழக நிர்வாகம் நிறுத்தியது.
உதவித்தொகையை மட்டுமே நம்பிப் படித்த வெமுலாவையும் மற்ற தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை மாணவர்களை மிரட்டும் நடவடிக்கையாக இது கருதப்பட்டது.
இதற்கு அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் 3 ஆம் தேதி யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை எதிர்த்தும், முஸாபர் நகரில் இஸ்லாமியர்கள் மீது பாஜகவினர் நடத்திய தாக்குதலை கண்டித்தும் அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதிலும் வெமுலா உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து ஏபிவிபியின் உள்ளூர் தலைவர் நந்தனம் சுசீல் குமார், வெமூலா உள்ளிட்டோரை கூலிப்படைகள் என்று திட்டினார்.
அடுத்தநாள் அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகி குடல்வால் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். ஆனால், அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் 40 பேர் தன்னை கடுமையாக தாக்கியதாக அவர் புகார் செய்தார்.
அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் தாத்தரேயா இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கடிதம் எழுதினார். அவரும் உடனடியாக ஹைதராபாத் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து துணைவேந்தர் அப்பாராவ், வெமுலா உள்ளிட்ட 4 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து, ஹாஸ்டலை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார். அந்த உத்தரவை எதிர்த்து 4 பேரும் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர்.
கண்டுகொள்ளாத நிலையில், 2016 ஜனவரி 17 ஆம் தேதி தனது அறையிலேயே வெமுலா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தாழ்த்தப்பட்டவனாய் பிறந்ததுதான் தனது தவறு என்று உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். அம்பேத்கர் மாணவர் அமைப்பின் பேனரை பயன்படுத்தி அவர் தூக்கிட்டுக் கொண்டிருந்தார்.
அந்தச் சாவுக்கு எப்படி ஆளும் மத்திய பாஜக அரசு வெமுலாவை துரத்தியதோ, அதேபோன்றுதான் தமிழ்நாட்டில் மாணவி அனிதாவையும் சாவுக்கு துரத்தியடித்தது பாஜக அரசு.
மத்திய அரசு மட்டுமின்றி அதன் அடிமையாக மண்டியி்டடு சேவகம் புரியும் மாநில அதிமுக அரசுக்கும் இந்தச் சாவில் பங்கிருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
வெமுலா மரணத்திலிருந்து மத்திய பாஜக அரசு ஒரு பாடம் கற்றுக்கொண்டதாக நினைத்துவிடாதீர்கள். வெமுலா மரணத்துக்கு நீதி கேட்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உடனடியாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை 7 மாணவர்கள் தொடங்கினார்கள். அவர்கள் மயக்கமடைந்து மரு்ததுவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அடுத்து 7 பேர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் தொடர்ந்து மைதானத்தில் அமர்ந்திருந்தனர். ஹைதராபாத்திலும் டெல்லியிலும் போராட்டம் தீவிரமடைந்தது. உயர்கல்வி நிலையங்களில் காவிகளின் தலையீட்டை எதிர்த்து கட்சி சார்பில்லாமல் சாதி, மதம் சார்பில்லாமல் மாணவர்கள் ஓரணியில் திரண்டு போராடினார்கள்.
ஏற்கெனவே, 2013 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் முஸாபர் நகரில் பாஜகவினர் நடத்திய மதவெறி தாக்குதல் தொடர்பான விடியோவை பாஜக எதிர்ப்பை மீறி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திரையிட்டார்கள்.
இந்த தீவிரத்தன்மை அனைத்துக்கும் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார்தான் காரணம் என்று பாஜக மாணவர் அமைப்பு கருதியது. இதையடுத்து அவர் மீது குறிவைக்கப்பட்டது.
2016 பிப்ரவரி 8 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில், நாடாளுமன்றத் தாக்குதலில் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த ஒரு பிரிவு மாணவர்கள் ஏற்பாடு செய்தார்கள். அந்தக் கூட்டத்தை நடத்த அனுமதிக்கக்கூடாது என்று பாஜக மாணவர்கள் சிலர் நிர்வாகத்திடம் கூறினார்கள்.
அதைத்தொடர்ந்து மைக்கே இல்லாமல் அந்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போதும் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வந்து ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் இந்த நிகழ்ச்சியில் தேசவிரோத முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்த புகார் அடிப்படையில் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரை போலீஸார் கைது செய்தனர். நான்கு நாட்கள் அவர் போலீஸ் காவலில் வைக்கப்ப்டடிருந்தார். போலீஸ் நிலையத்திற்குள் கன்னையா குமாரை பாஜகவினர் சிலர் வழக்கறிஞர்கள் போல உடையணிந்து தாக்கினர்.
அவரை பார்க்க போலீஸ் நிலையம் வந்த மாணவர்களை பாஜக குண்டர்கள் வழக்கறிஞர்களைப் போல கூட்டமாக வந்து தாக்கினர்.
கன்னையா குமாருக்கு ஆதரவாகவும், ரோகித் வெமுலாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் டெல்லியில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் முழங்கப்பட்ட முழக்கங்கள் மோடி அரசுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் இருந்தன.
"எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய நாங்கள்தான் இந்த மண்ணின் சொந்தக்காரர்கள்...
தொழிலாளர்கள், தலித்துகள், விவசாயிகள் என்ற நாங்கள்தான் இந்த தேசத்தின் உண்மையான புதல்வர்கள்...
பசியிலிருந்து விடுதலை, ஆர்எஸ்எஸ்சிடமிருந்து விடுதலை, நிலப்பிரபுக்களிடமிருந்து விடுதலை, முதலாளித்துவத்திடமிருந்து விடுதலை, பிராமணியத்திடமிருந்து விடுதலை..."
இந்த முழக்கங்கள் டெல்லியை கலங்கடித்தன.
பேரணி முடிவில் அனைத்து கட்சித் தலைவர்களும் மோடி அரசாங்கத்தை கண்டித்துப் பேசினர். மாணவர்களுடன் மோதல் போக்கை தொடர்ந்தால் அவர்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் எச்சரித்தார்கள்.
கன்னையா குமார் மீதான புகார்களுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் அவரை இடைக்கால ஜாமீனில் விடுவித்தது. அதன்பிறகு அவர் பல்கலைக்கழக வளாகத்தில் பேசும்போது, "நாம் இந்தியாவிடமிருந்து விடுதலை கோரவில்லை. ஆனால், இந்தியாவுக்குள் விடுதலை வேண்டுகிறோம்." என்று முழங்கினார்.
காவிகள் சேர்ந்து அருமையான இளம் அரசியல் நட்சத்திரத்தை உருவாக்கிக் கொடுத்திருப்பதாக இடதுசாரி தலைவர்கள் நன்றி தெரிவித்தனர். ஆனால், அவருக்கு தொடர்ந்து காவிகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்தன.
அவருடைய நாக்கை அறுத்து வருபவர்களுக்கு 5 லட்சம் பரிசு என்று பாஜக இளைஞர் அணித் தலைவரும், அவரை சுட்டுக் கொல்பவர்களுக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு என்று இன்னொரு பாஜக தலைவரும் அறிவிப்பு வெளியிட்டனர்.
இவ்வளவு நடந்த பின்னரும் பல்கலைக்கழக நிர்வாகம் ஒரு கமிட்டி அமைத்து, கன்னையா குமார் மற்றும் 19 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
உயர்கல்வி நிலையங்களில் காவிச்சிந்தனையை புகுத்த அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு வேறு சான்றுகளே தேவை இல்லை.
உயர்கல்வி என்பது உயர்சாதிக்கு மட்டுமே இருக்க வேண்டும். உயர்ந்த இடம் அனைத்தையும் தாங்களே ஆக்கிரமிக்க வேண்டும் என்ற பேராசைப் பேய் அவர்களைப் பிடித்தாட்டுகிறது.
அந்தப் பேராசைக்கு சாமானிய ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயமான ஆசைகளையும் நிராசை ஆக்குகிறார்கள்.
-ஆதனூர் சோழன்