Skip to main content

சிறைத்துறை ஒழுங்கீனங்கள்! -மத்தியசிறை ஒன்றில் மட்டமான செயல்கள்!

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

ஆறு மாவட்ட நீதி எல்லைகளைக்கொண்ட அந்த மத்திய சிறைச்சாலை குறித்து, பல விவகாரங்களை விரிவாக எழுதி அனுப்பியிருந்தார் சிறைத்துறை வட்டாரத்தில் உள்ள நக்கீரன் வாசகர் ஒருவர்.
 

jail


இதுகுறித்து, சிறைத்துறை டி.ஐ.ஜி.யிடம் நாம் விவரித்தபோது,  அனைத்தையும் உள்வாங்கிக்கொண்ட அவர், “இந்த விவகாரத்தையெல்லாம் போனில் எப்படி பேசுவது?” என்று மிகவும் தயங்கினார்.  பேசுவது ரெகார்ட் ஆகி வலைத்தளங்களில் லீக் ஆகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான் அவரைப் பேசவிடாமல் தடுத்தது.  


கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வில்லங்க விவகாரங்கள் இவைதான் -


அந்த மத்திய சிறைச்சாலையின் உயர் பொறுப்பிலுள்ள பெண் அதிகாரிக்கு, இத்துறைக்கு வருவதற்கு முன்பாகவே, திருமணமாகி, இரண்டு வருடங்களுக்குமுன் கணவர் இறந்துபோனார். தமிழகத்தில் சினிமா சம்பந்தப்பட்ட அந்தப்  படிப்புக்கு மொத்தம் ஐந்து இருக்கைகளே உள்ள கல்லூரியில் பெண் அதிகாரியின் மகனுக்கு சீட் கிடைக்கச் செய்தார் தலைமைச் செயலகம் வரையிலும் நெருக்கமாக உள்ள ஒருவர்.


தமிழ்க்கடவுளின் ஆயுதமான வேல் இவருடைய பெயரின் பிற்பாதியாகும். இவரும் அதே மத்திய சிறைச்சாலையில்தான் பணிபுரிகிறார். பெயருக்குத்தான் ஸ்டோர் கீப்பர் வேலை. மற்றபடி ஆல்-இன்-ஆல் அழகுராஜாவாக அந்தப் பெண் அதிகாரியை ஆட்டுவிப்பது இவர்தான். இத்தனைக்கும் அந்தப் பெண் அதிகாரி தவறான வழியில் பணம் சேர்க்க விரும்பாத  நேர்மையானவர். அவருக்குக் கீழ் பணிபுரிபவர்கள் அப்படி கிடையாது.  பணமே பிரதானம் என்று நாளும் லஞ்சத்தில் திளைப்பவர்கள். அந்தச் சிறையில் சுமார் 1400 கைதிகள் இருக்கிறார்கள். சாப்பாடு முதலிய செலவினங்களுக்கு ஒரு நாளில் ஒரு கைதிக்கு இவ்வளவு என்று அரசு ஒதுக்கீடு செய்யும் தொகையில் பெருமளவு சுரண்டப்படுகிறது. அதனால், கைதிகளுக்குக் கிடைக்கின்ற உணவு தரமானதாக இருப்பதில்லை. 

 

jail


சூப் குடித்ததற்கு டிப்ஸ் ரூ.12000?

ஸ்டோர் கீப்பரான வேல், அந்த மாநகரத்தின் பிரபலமான ‘டிங்-டாங்’ ஓட்டலுக்கு, நள்ளிரவு வேளையில் சென்றார். நிதானத்தில் இல்லாத அவர், “சூப் கொண்டு வா..” என்று உத்தரவிட்டார். “ட்யூட்டி முடிச்சி எல்லாரும் போயிட்டாங்க.. கதவைப் பூட்டப்போறோம்” என்று அங்கிருந்தவர் சொல்ல, “அதெல்லாம் முடியாது. எல்லாரையும் வரச்சொல்லு.. வரலைன்னா.. பக்கத்துலதான் இருக்கு ஜெயிலு.. எல்லாரையும் உள்ளே தள்ளிருவேன்.” என்று உளற, வெலவெலத்துபோன அந்த ஓட்டல் ஊழியர், சூப் தயார் செய்யும் ஊழியர்களுக்கு போன் போட்டார். அவர்களும் பதறியடித்து வந்து  சூப் போட்டுக் கொடுத்தனர்.

சூப்பை உறிஞ்சிய வேல், “இதுதான்டா சூப்பு” என்று சப்புக்கொட்டி பாராட்டித்தள்ளியதுடன், பேன்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு இரண்டாயிரம் ரூபாய்த் தாள்களை எடுத்து, ஊழியர்களிடம் இறைத்தார். அதில் ஒரு ஊழியருக்குக் கிடைத்தது ஆறு இரண்டாயிரம் நோட்டுக்கள். “ஒரு சூப்புக்கு எனக்கு மட்டும் 12000 ரூபாய் டிப்ஸா?” என்று வியந்தார் அந்த ஊழியர். அந்த ஓட்டலுக்குச் செல்லும்போதெல்லாம் தன்னை நன்றாக கவனித்த ஒருவருக்கு,  மத்திய சிறையில் சிபாரிசு செய்து அரசு வேலை வாங்கித் தந்தார். அதனால், வேலின் குடும்பத்தினர் அந்த ஓட்டலுக்கு போகும்போதெல்லாம் விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள் அதன் ஊழியர்கள். இந்த அளவுக்கு ஒரு மத்திய சிறையின் ஸ்டோர் கீப்பரால் பணத்தில் தாராளம் காட்ட முடிகிறதென்றால், அவர் முறைகேடாக எந்த அளவுக்குச் சம்பாதித்து வருகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம்.

தற்கெல்லாம் துணையாக இருப்பது அந்த பெண் அதிகாரியுடன் இருக்கும் மிக நெருக்கமான நட்புதான் என்று கூறி ‘ஒரு பெண் அதிகாரியின் அந்தரங்க வாழ்க்கை குறித்து விமர்சிப்பது எங்கள் நோக்கமல்ல. சிறை என்பது எதற்காக? பொதுமக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சட்டமுறைக்கு எதிரானவர்கள் செய்யும் தீய செயல்களுக்காக, சிறைத் தண்டனைக்குள்ளானவர்களை மனிதநேயத்துடன் நல்வழிப்படுத்துவதற்காகத்தான். சிறைவாசத்துக்குப் பிறகு,  சமுதாயத்தில் வாழ்வதற்கு  முழுத்தகுதி உள்ளவராக மாறி,  அவர் விடுதலை பெறவேண்டும் என்பதுதானே சிறைவாசத்தின் நோக்கம். கைதிகள் அடைபட்டிருக்கும் சிறைச்சூழலில், அவர்கள் கண்முன்னே உறுத்தும் அளவுக்கு அதிகாரிகள் நடந்துகொள்வது தவறல்லவா? இதுபோன்ற ஒழுங்கீனங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான், பெண் அதிகாரியின் அந்தரங்க விஷயத்தையும் இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறேன்’ என்று அந்தக் கடிதத்தில் தனது வருத்தத்தையும் பதிவு செய்திருந்தார் வாசகர்.  

 

jail


பழகிப் பழகிப் பணம் குவிக்கின்றனர்!

சிறைத்துறை உயரதிகாரிகளுக்கு தீபாவளி பட்டாசு வேண்டுமென்றால்,  வேல் மூலமாக பார்சல் பார்சலாக சென்னையில் போய் குவியும். விஜிலன்ஸ் ரெய்டில் சிக்கி சிறைக்கு வரும் வருவாய்த்துறை அதிகாரிகளை வளைத்துப் போட்டுக்கொள்வார். அப்போது சிறையில் இவர் மூலம் கிடைத்த சலுகைகளுக்காக, காலமெல்லாம் நன்றிக்கடன் செலுத்துவார்கள் அந்த அதிகாரிகள். அதிர்ஷ்டம் என்ற பொருளில், தனது டிராவல்ஸ் நிறுவனத்துக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்திருக்கும் அந்தப் பெரும் செல்வந்தருக்கு சிறையில் அடைபட வேண்டிய நிலை ஏற்பட்டது.  அப்போது, சிறையில் சொகுசாக அவர் வாழ்வதற்கு ஏற்பாடு செய்தனர்.

அந்த ஈர்ப்பில், சிறைத்துறை டி.ஐ.ஜி., எஸ்.பி., மற்றும் ஸ்டோர் கீப்பரை, தங்கள் வீட்டு திருமணத்துக்கு அழைத்திருந்தார் அந்த டிராவல்ஸ் அதிபர். அந்தத் திருமணத்தில் சிறப்பு விருந்தினர்களாக சகல மரியாதையுடன் இம்மூவரும் கலந்துகொண்டது, அந்த மாநகரத்தில் உள்ள காக்கிகளால் கடும் விமர்சனத்துக்கு ஆளானது.  மத்திய சிறைக்குள் வந்துவிட்டுப்போன முக்கிய பிரமுகர்களிடம், வெளிவட்டாரத்திலும் பழகிப்பழகி பணம் குவிப்பதெல்லாம் நடைமுறையாகிவிட்டது. மத்திய சிறைச்சாலைகள் சிலருக்குப் பணம் காய்ச்சி மரங்களாக இருக்கின்றன. மத்திய சிறைகளுக்கு காய்கறிகள் சப்ளை செய்துவருகிறார் ஒரு சகோதரர். அவர் காட்டில்தான் பணமழை. அந்த மத்திய சிறையின் கீழ் உள்ள மூன்று மாவட்ட சிறைகளுக்கும் பதினெட்டு கிளைச்சிறைகளுக்கும் காய்கறி, பலசரக்கு என சகலமும் சப்ளை செய்துவருபவர் அந்தச் சகோதரர்தான். இவரது கவனிப்பிலும் குளிர்கிறார்கள் சிறைத்துறை அதிகாரிகள். 
 

குண்டர் சட்டத்தை உடைப்பதற்கான ரூட்!

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைதாவதும், எளிதாக உடைத்து விடுதலை ஆவதும் தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது. இதற்குக் காரணம் சிறைத்துறைதான். குண்டாஸில் சிறையில் அடைபடும் கைதியின் பெயரில் சிற்றேடுகள் (book-let) மூன்று தயாராகும். அவற்றில் ஒன்று கைதியிடம் சேர்க்கப்படும். இன்னொன்று ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட துறைக்குப் போய்விடும். மற்றொன்று காவல் நிலையத்தின் வசம் இருக்கும். குண்டாஸ் கைதிக்கும் மாநகர வழக்கறிஞரான பியூட்டி பெல்லுக்கும் லிங்க் ஏற்படுத்தித் தருவது அந்த மத்திய சிறையில் அலுவலராகப் பணிபுரியும் அமெரிக்க அதிபரின் பெயரைக் கொண்டவர்தான். “பியூட்டி பெல்கிட்ட போங்க.. குண்டாஸை ஈஸியா உடைச்சிருவார்” என்று கைதியிடம் சிபாரிசு செய்வதற்காக, நல்ல தொகை அந்த அலுவலருக்குக்  கமிஷனாகக் கிடைத்துவிடும். 

 

jail



மகளிர் சிறைகளுக்கு இரவு நேரத்தில் தொல்லை 

இதே சிறையில் அதிகாரியாக இருக்கும் ஜெயமானவர், உளறல் அமைச்சர் என்று பெயர் பெற்றவரின் சம்பந்தி ஆவார். இவருக்காக லஞ்சம் பெற்றுத்தான் தலைநகரில் கைதானார் சிறைக்காவலர் ஒருவர். . கைதாகி சிறையில் காலத்தைக் கழிக்க வேண்டிய ஜெயமானவர்,  அமைச்சரின் உறவினர் என்பதால்,  மாற்றலாகி இந்த மத்திய சிறைக்கு அதிகாரியாக வந்திருக்கிறார். இவர் வந்தபிறகு, கஞ்சா புழக்கம் இந்தச் சிறையில் அதிகமாகிவிட்டது. 

மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் பெண் கைதிகளிடம் சில்மிஷம் செய்து மாட்டிக்கொண்டார் சாமியான ஒரு டாக்டர். அதன்பிறகு, அந்தமாதிரி புகார்கள் எதுவும் இல்லை. ஆனாலும், பெண் கைதிகளைப் பார்ப்பதற்கு வரும் உறவுக்காரப் பெண்களை ‘மதினி’ என்றழைக்கும் சுந்தரமான ஒரு வார்டனின் தவறான தொடர்புகளால் அவ்வப்போது பிரச்சனைகள் எழுவதுண்டு. இரவு நேரங்களில் மகளிர் சிறைகளுக்குப் போன் செய்து, இரட்டை அர்த்தத்தில் பேசி அவர் ஜொள்ளு விடுவது வாடிக்கையாக நடப்பதுதான். மாவட்ட சிறைகளில் இருந்து மாமூல் பெறுவதிலும் இவர் கில்லாடி. 
 

பெர்சனல் வேண்டாம்! ப்ளீஸ்!

மத்திய சிறைச்சாலை பெண் அதிகாரியைத் தொடர்புகொண்டோம். பேசுவதை அவர் தவிர்த்த நிலையில், நமது லைனில் வேல் வந்தார். ஓட்டல் ஊழியர்களுக்கு இரவு நேரத்தில் பணம் கொடுத்தது உண்மைதான். பிள்ளைகளின் படிப்புச் செலவுக்குப் பணம் கேட்டார்கள். கடனாகத்தான் கொடுத்தேன். அந்த அதிகாரிக்கும் எனக்கும்…? வேணாம்ங்க.. அதெல்லாம் பெர்சனல் சமாச்சாரம்.. விடுங்க. ப்ளீஸ்.” என்று கேட்டார்.  

மத்திய சிறைகளில் இத்தனை மட்டமான காரியங்கள் நடக்கின்றனவா? கொடுமைதான்!