சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி அவர்களை சந்தித்து மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டங்களைப் பற்றி பல கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...
பாலியல் வன்கொடுமை அடிப்படையில் பாஜக எம்பியான பிரிஜ்பூஷன் சரண்சிங்கை கைது செய்யக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி, தான் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என்று கூறிய பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்களே?
இந்தியாவிற்காக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீராங்கனைகள் வீதியில் இறங்கி பிரிஜ்பூஷண் சரண்சிங்கை கைது செய்யக் கோரி பல நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் பிரிஜ்பூஷண் புதிய பாராளுமன்ற திறப்பு விழாவுக்கு சென்று போஸ் கொடுத்து வருகிறார். இது போன்ற செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது என்று உலக நாடுகள் பட்டியலிட்டு வருகிறது. இந்தியாவிற்கு செல்லும் படித்த பெண்கள் அல்லது சுற்றுலா செல்லும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் பயப்படும் வகையில் தற்பொழுது இந்தியா காவிகளுடைய ஆட்சியில் மிக மோசமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே, இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழ்நிலையில் தான் இங்குள்ள பெண்கள் வாழ வேண்டிய நிலை உள்ளது.
புகார் கொடுத்தவர்கள் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். புகார் கொடுத்தவுடன் கைது செய்ய முடியாது என்று அண்ணாமலை கூறி வருகிறாரே அது பற்றி உங்கள் கருத்து என்ன?
காவல்துறை முதல் நீதிமன்றம் வரை அனைத்து இடத்திற்கும் சென்று புகார் அளித்து உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து அதற்கு நீதி கிடைக்காததனால் தான் மல்யுத்த வீராங்கனைகள் இத்தனை நாள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் பாஜகவில் இருக்கின்ற கே.டி.ராகவன் தொடங்கி எடியூரப்பா வரை அனைவரது பெயரிலும் பாலியல் வழக்கு உள்ளது. ஆனால் இந்த பாஜக இவர்களின் மீது என்ன நடவடிக்கை எடுத்தது? பாஜகவில் நெடுநாட்களாக இருந்த காயத்ரி ரகுராம் அளித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல் அவரை கட்சியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அவரை தரக்குறைவாகப் பேசியவர் தான் இந்த அண்ணாமலை. புகார் அளித்தவர்களில் ஒருவர் 18 வயதுக்கு கீழ் உள்ள ஒரு வீராங்கனை ஆவார். அவர் அளித்த புகாரின் பேரில் உடனடியாக போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்வது தானே சட்டம். ஆகவே, இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக பல யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க விசயமாகப் பார்க்கப்படுகிறது.
உலக மல்யுத்த அமைப்பு இதற்கு கண்டனம் தெரிவித்து குறிப்பிட்ட நாளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளதே?
உலக மல்யுத்த அமைப்பு இந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆதரவு தந்திருப்பதை நாம் மிகவும் நல்ல விஷயமாகத் தான் பார்க்க வேண்டும். மேலும், விவசாயத் திட்டத்திற்கு எதிராக ஒரு வருடத்திற்கும் மேலாக பஞ்சாபில் போராடிய விவசாயிகள் இந்த மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், மல்யுத்த வீராங்கனைகள் பதக்கங்களை கங்கையில் வீச முயன்றபோது அவர்களை தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்க மோடிக்கு 5 நாள் கெடு கொடுப்போம் என்று கூறி சமாதானம் செய்துள்ளனர். ஆதலால், மோடி அரசின் மீது மக்களுக்கு எப்போதோ நம்பிக்கை போய்விட்டது. இதுபோன்ற செயல்கள் மீண்டும் அதிகரிக்குமானால் அடுத்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மக்களால் மோடி தூக்கி எறியப்படுவார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
மற்ற விளையாட்டுகளைப் போல தான் இந்த மல்யுத்த விளையாட்டும். ஆனால், மற்ற விளையாட்டு வீரர்கள் எங்களுக்கு குரல் ஏதும் கொடுக்கவில்லையே என்ற ஏக்கம் மல்யுத்த வீரர்களுக்கு இருக்கிறதே?
துப்பாக்கிச் சூட்டில் தங்கம் வென்றவர், வில்வித்தையில் தங்கம் வென்றவர், பிரபல கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே உட்பட சிலர் இந்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதே சமயத்தில் மக்களால் கொண்டாடப்படும் மற்ற வீரர்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்காதது, நமக்கு அரசியல் வேண்டாம் எனவும், மீறி இதுபோன்ற செயலுக்கு ஆதரவு தெரிவித்தோமேயானால் தமக்கு வாய்ப்பு தர மறுக்கப்படுமோ என்ற அச்சத்தில் தான் இருப்பார்கள். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தான் பெண்கள் இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு பதக்கங்களை வென்று வருகின்றனர். மல்யுத்தம் என்ற விளையாட்டு மட்டுமல்ல. மற்ற விளையாட்டுகளில் கூட பெண்கள் கவனிக்கப்படுவதில்லை. மீறி சில பெண்கள் அவ்வப்போதும் இந்த மாதிரி விளையாட்டுகளில் கலந்துகொள்ள நினைத்தாலும் அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என நினைத்து மற்ற வீரர்களும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.