Skip to main content

அரசு அதிகாரியைப்போல் கம்ப்யூட்டரில் உட்கார்ந்திருக்கும் புரோக்கர்கள்! -அதிர்ச்சி வீடியோ ஆதாரம்!

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

                                     
 

sub registrar office neelankarai


வி.ஏ.ஓ. அலுவலகத்தில் ஆரம்பித்து தாசில்தார், கலெக்டர் அலுவலகங்கள்வரை லஞ்சம் வாங்குவதற்காகவே நியமிக்கப்பட்ட புரோக்கர்கள் உலாவுவது சர்வசாதாரணம். பத்திரப்பதிவுத்துறை பதிவாளர் அலுவலங்களிலும் இதேநிலைமைதான். ஆனால், அதிகாரியைப்போலவே அரசு அலுவலக கணிப்பொறியில் புரோக்கர்கள் உட்கார்ந்து வேலை பார்ப்பதாக நமக்கு கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை உண்டாக்க விசாரிக்க ஆரம்பித்தோம்.    
 

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத சார் பதிவாளர் ஒருவர் நம்மிடம், “லஞ்சம் வாங்கினால் மாட்டிக்கொள்வோம் என்பதற்காக அரசு அதிகாரிகள் தங்களுக்கு பதிலாக லஞ்சம் வாங்குவதற்காகவே வைத்திருக்கும் புரோக்கர்கள் அரசு அலுவலகங்களில் இருப்பது காலங்காலமான ஒன்றுதான். ஆனால், பதிவுத்துறை அலுவலங்களில் புரோக்கர்களை அரசு ஊழியர்களைப்போலவே உட்காரவைத்து லஞ்சம் வாங்கவைத்துக்கொண்டிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. ஒரு ஆவணத்தை பதிவுசெய்வதா? வேண்டாமா? என்பதை இந்த புரோக்கர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். ஸ்டார் 2.0 என்ற ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்திக்கொண்டிருக்கிறது தமிழகம். இதனால், அலுவலகப்பணிகள் எளிதாக்கப்பட்டுவிட்டன.

 

sub registrar office

ஆன்லைனில் செய்ய வேண்டிய பணிகளை அலுவலகத்தில் செய்யும் உதவியாளர் முத்து அழகேசன்
 

இருந்தாலும், ஒருசில சார் பதிவாளர்களுக்கு கம்ப்யூட்டரோ, ஆன்லைன் தொடர்பான புரிதலோ இல்லாததாலும் லஞ்சப்பணத்தை பெற்றுத்தரும் புரோக்கர்களை அரசு அலுவலகத்தில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதனால், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். உதாரணத்துக்கு, நீலாங்கரை சார்பதிவாளரை எடுத்துக்கொண்டால் சொத்து தொடர்பான வில்லங்கம், மதிப்பு நிர்ணயம் உள்ளிட்ட விவரங்களை புரோக்கர் கமலக்கண்ணன் என்பவர்தான் தெரிவிக்கிறார். அதுவும், அந்த அலுவலகத்திலுள்ள கம்ப்யூட்டரில் அமர்ந்துகொண்டு பரிசோதிப்பதே இவர்தான்.

சார் பதிவாளர் ஆறுமுக நவராஜோ கம்யூட்டரை பயன்படுத்துவதே கிடையாது. ஒரு அக்கவுண்ட் நோட்டை வைத்து எழுத்திக்கொண்டிருக்கிறார். மனைமதிப்பு நிர்ணயம், இட ஆய்வு போன்ற பணிகளை கேமரா ஆபரேட்டராக பணிபுரியும் பழனிவேல்தான் செய்கிறார். ஒவ்வொரு இட ஆய்வுக்கும் 2,000 ரூபாய்க்குமேல் கைமாறுகிறது. அதேபோல் பணம் வாங்கிக்கொடுக்கும் புரோக்கராக இருப்பவர்கள் கண்ணன், பிரபு, ராஜா ஆகியோர். இதில், பிரபுவும் ராஜாவும் வெளியில் டீ வாங்கிக்கொடுப்பவர்கள்போல நின்றுகொண்டு சந்தேகப்படக்கூடிய நபர்களோ அல்லது லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்தோ அரசு அலுவலத்துக்குள் வருகிறார்களா? என்பதை கண்காணிப்பதுதான் வேலை.

 

sub registrar office

                                                       சார்பதிவாளர் ஆறுமுகநவராஜ்

ஆன்லைன் வில்லங்கச் சான்று, நகல் மற்றும் திருமணச்சான்று போன்றவை ஆன்லைனில் விண்ணப்பம் செய்திருந்தாலும் உதவியாளர் முத்து அழகேசனிடம்  சென்று பணம் கொடுத்தால்தான் அதற்கான பணிகள் நடக்கும் என்ற நிலை உள்ளது. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழலை கட்டுப்படுத்தடுத்தான் ஆன்லைன் முறையை கொண்டுவந்தது அரசு. அதிலும், இவர்கள் லஞ்ச வேட்டை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று குற்றஞ்சாட்டுகிறார்.
 

இது, உண்மைதானா? என்பதை ஆராய பதிவுத்துறை தொடர்பான ஆவணத்தை தயார் செய்துகொண்டு நீலாங்கரை சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் நுழைந்தோம். சார் பதிவாளரிடம் கூட்டம் அதிகமாக இருந்ததால் உதவியாளர் முத்து அழகேசனின் டேபிளுக்கு சென்றோம். திருமணப்பதிவுகள் ஆன்லைனில் வந்துவிட்ட நிலையிலும் அவரிடம் பலர் நேரில் வந்து பதிவுசெய்துகொண்டிருந்தார்கள். நாம் தயாரித்த ஆவணத்தை காண்பித்து  ‘இந்த ஆவணத்தில் தடங்கல் இருக்கிறதா? இதன் கெய்டுலைன் வேல்யூ என்ன? என்று நாம் கேட்டபோது, “உதவியாளரை போய் பாருங்க” என்கிறார் ஒரிஜினல் உதவியாளர் முத்து அழகேசன். அதுவும் நாம், அவர் பெயர் என்ன? என்று கேட்டபோது, ‘கமல்’ என்றார். பக்கத்தில் வந்த பொதுமக்களில் ஒருவரோ,  “கமலக்கண்ணனை போயி பாருங்க” என்று தெள்ளத்தெளிவாக கூறி அனுப்புகிறார்கள்.
 

நாம், தேடிச்சென்றபோது அதே அலுவலகத்தில் கம்ப்யூட்டர்கள் புடைசூழ உட்கார்ந்திருக்கும் கமலக்கண்ணனை கை காட்டுகிறார்கள். அவரிடம், நமது ஆவணத்தைக் காண்பித்து அதேக்கேள்விகளை கேட்டபோது கம்ப்யூட்டரில் பரிசோதித்து பதில் சொல்கிறார். நாம், அதிர்ச்சியாகிப்போய், நம்மிடம் தகவல் சொன்னவரிடம் சொன்னபோது, “புரோக்கர்கள் திருந்திட்டாங்களா? லஞ்சம் கேட்கலையேன்னு நினைக்கிறீங்களா? இப்போ, உங்கக்கிட்ட காசு கேட்கமாட்டாங்க. ஒரிஜினல் டாக்குமெண்டோட போகும்போதுதான் கேட்பாங்க. அதுவும், அலுவலகத்துக்குள்ள வாங்கமாட்டாங்க. வெளியிலயே வாங்கிடுவாங்க” என்று அதிர்ச்சியூட்டுகிறார்.

 

sub registrar office

                                              பதிவுத்துறை துணைத் தலைவர் ஜனார்த்தனன்
 

கமலகண்ணன் என்பவர் அலுவலகத்திற்குள்ளேயே உட்கார்ந்திருக்கிறாரே யார்? என்று நாம் சார் பதிவாளர் ஆறுமுக நவராஜிடம் கேட்டபோது, “ஆள் பற்றாக்குறை சார். சும்மா வெளியில உட்கார்ந்து எடுபுடி வேலை செய்வான் சார்” என்றார். அதே, கேள்வியை உதவியாளர் முத்து அழகேசனிடம் கேட்டபோது, “கமலக்கண்ணன் டி.இ.ஓ.( டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்) வாக உள்ளார்” என்று சொல்லி அதிர்ச்சியடைய வைத்தார். காரணம், பாபு, பிரியா என்ற இரண்டு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்கள் உள்ளனர். கமக்கண்ணனுக்கு ஒப்பந்த அடிப்படையில் கூட எந்தப்பணியும் அலுவலகத்தில் வழங்கப்படவில்லை.

 

rrrr

                               அரசு அலுவலக கணிப்பொறியில் புரோக்கர் கமலக்கண்ணன்
 

ஒரு அரசு அலுவலகத்தில் இப்படி அரசு ஊழியரைப்போலவே உட்கார்ந்திருக்கிறார் என்றால் எத்தனை எத்தனை பேர் அரசு அலுவலங்களில் உட்கார்ந்திருப்பார்கள்? இதுகுறித்து, பதிவுத்துறைத்தலைவர் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ். மற்றும் சென்னை மாவட்ட துணை பதிவுத்துறைத்தலைவர் ஜனார்த்தனனின் கவனத்துக்கு கொண்டுசென்றபோது,  உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்கள்.
 

நக்கீரனின் சீக்ரெட் கேமராவில் சிக்கியவர்கள் இவர்கள்… இன்னும் சிக்காதவர்கள் தமிழகத்திலுள்ள அனைத்து வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உலாவிக்கொண்டிருக்கிறார்கள் மக்களிடம் லஞ்சம் வாங்க!!!