Skip to main content

ஸ்டீவ் ஜாப்ஸ்: சாதனை மனிதனின் சர்ச்சைகளும், சறுக்கல்களும்..!

Published on 05/10/2019 | Edited on 11/10/2019

நிதானிக்க நேரமில்லாமல் எதையோ துரத்தி ஓடிக்கொண்டிருக்கிற இன்றைய இந்த தலைமுறையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து, அவர்களது முன்னேற்றத்திற்கு துணைபுரிவது என்றால் அது தொழில்நுட்பங்கள் தான். இப்படி உலகையே இயங்க வைத்துக்கொண்டிருக்கும் இந்த தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர்களாக இருவரை கூறலாம். ஒருவர் அமைதியானவர், பணம் சம்பாதிப்பதில் குறியானவர், சிறந்த தலைமை பண்புடையவர் என பெயரெடுத்தவர்.  மற்றொருவர் கரடுமுரடானவர், வளர்ச்சியில் குறியானவர், எதேச்சதிகார பண்புடையவர் என பெயரெடுத்தவர். இதில் முதல் நபர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். இரண்டாவது நபர் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ். 

பிறந்தது முதலே பல்வேறு துன்பங்கள், சறுக்கல்கள், சர்ச்சைகள் என பலவற்றை கடந்து தொழில்நுட்ப உலகையே கட்டி ஆட்சிபுரிந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அவர் பிறந்த இரண்டாவது மாதமே அவரது வாழ்க்கையை சர்ச்சைகள் ஆட்கொள்ள தொடங்கிவிட்டன எனலாம்.  1955, பிப்ரவரி 24 ஆம் தேதி இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த அப்துல்பட்டா ஜந்தாலி- ஜோன் சிம்ப்சன் ஆகிய இருவருக்கும் பிறந்தவர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இவரது தந்தை சிரியாவை சேர்ந்தவர், தாய் ஜெர்மன் வம்சாவளியை சேர்ந்தவர். இவர்கள் இருவரின் காதலுக்கு ஜோன் சிம்ப்சனின் குடும்பம் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குடும்ப சூழல் காரணமாக ஸ்டீவ் ஜாப்ஸை தத்துக்கொடுக்க முடிவெடுத்தார் அவரது தாய். கணவர் அப்துல்பட்டா ஜந்தாலிக்கு தெரிவிக்காமல் அதற்கான ஏற்பாடுகளை செய்த அவர், பால்-கிளாரா தம்பதிக்கு ஜாப்ஸை தத்துக்கொடுத்தார். 2 மாத குழந்தையான ஸ்டீவ் பல்வேறு சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குக்கு பின்னர் பால்-கிளாரா தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டார். 

 

steve jobs life history

 

 

சிறு வயது முதலே தொழில்நுட்பங்களில் ஆர்வம் கொண்டிருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் புத்தகங்களை கடந்து மனிதர்களையும், தொழில்நுட்பங்களையுமே அதிகம் பயின்றார் எனலாம். முன்கோபமும், பிடிவாதமும் ஒருங்கே கொண்ட ஸ்டீவ் ஜாப்ஸ், தனது இந்த குணங்களால் பலமுறை பள்ளி, கல்லூரிகளில் இருந்து இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மீதான ஆர்வம் குறைந்துகொண்டே சென்ற அதே நேரத்தில், தொழில்நுட்பம் குறித்த கனவுகள் அவரை தூக்கமில்லாமல் புரளச்செய்தன. தொழில்நுட்பத்தை கொண்டு சாதிக்க முடிவெடுத்த ஸ்டீவ், தனது கல்லூரி படிப்பை உதறித்தள்ளினார். 

1976, ஏப்ரல் 1, தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தின் அசைக்கமுடியாத சக்தியாக மாறப்போகும் ஒரு நிறுவனத்தை, தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மிக எளிமையாக ஆரம்பித்தார் ஸ்டீவ். அதற்கு ஆப்பிள் என பெயரும் வைத்தார். அலுவலகங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த விலை உயர்ந்த கம்ப்யூட்டர்களை பொதுமக்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் கொண்டுசேர்க்க நினைத்தார் ஸ்டீவ். ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கிய 10 ஆவது நாளில், அதன் முதல் கம்ப்யூட்டரான ஆப்பிள் 1 ஐ உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தார் ஸ்டீவ். அங்கு தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிப்பயணம் 1985 ஆம் ஆண்டு வரை யாரும் நெருங்க முடியாத அளவு வேகமாக பாய்ச்சல் எடுத்தது. இந்த வெற்றிப்பயணத்தின் நடுவே அவரால் எடுக்கப்பட்ட சில முடிவுகள் அவருக்கே பாதகமாக அமையப்போவது அறியாமல், தனது கனவுகளை நோக்கி பயணித்து கொண்டிருந்தார் ஸ்டீவ். 

 

steve jobs life history

 

அப்படி அவர் எடுத்து முடிவு ஒன்று தான் 1985 ல் அவரை ஆப்பிள் நிறுவனத்தை விட்டு வெளியே அனுப்பியது என்று கூறலாம். 1983 ஆம் ஆண்டு பெப்சி நிறுவனத்திலிருந்த ஜான் ஸ்கல்லி என்பவரை, ஆப்பிள் நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார் ஸ்டீவ். ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ வாக ஜான் ஸ்கல்லி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த சூழலில் 1985 ஆம் ஆண்டு ஆப்பிள் 2 தொடர்பாக ஸ்டீவ் மற்றும் ஜான் ஸ்கல்லி இடையே ஏற்பட்ட ஒரு கருத்து வேறுபாடு, ஸ்டீவை ஆப்பிள் நிறுவனத்தை விட்டு வெளியேற வைக்கும் அளவு விஸ்வரூபம் எடுத்தது. இந்த கருத்து மோதலின் விளைவாக தன்னால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து, தான் வேலைக்கு சேர்த்த ஜான் ஸ்கல்லியாலேயே வெளியேற்றப்பட்டார் ஸ்டீவ். ஜான் ஸ்கல்லியின் இந்த முடிவிற்கு ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் என அப்போது அந்நிறுவனம் அறிந்திருக்கவில்லை.

வெளியே வந்த ஸ்டீவ், நெஸ்ட் என்ற நிறுவனம் ஒன்றை தொடங்கினார். நெஸ்ட் நிறுவனம் எதிர்பாராத தோல்விகளை ஸ்டீவுக்கு பரிசாக அளித்தது. ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேறியது, நெஸ்ட் சோபிக்காதது என அடுத்தடுத்த சறுக்கல்களை சந்தித்திருந்த ஸ்டீவ், திரைத்துறை நோக்கி தனது பார்வையை திருப்பினார். பிக்ஸார் கிராஃபிக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தார். அந்நிறுவனத்தில் எடுக்கப்பட்ட 'டாய் ஸ்டோரி' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. துவண்டிருந்த ஸ்டீவ் மீண்டும் வெற்றியை நோக்கி ஓட ஆரம்பித்த காலம் அது. பிக்ஸார், நெஸ்ட் என துவண்டிருந்த ஸ்டீவின் சாம்ராஜ்யம் மீண்டும் ஏறுமுகத்தில் பயணித்தது. ஆப்பிள் நிறுவனத்தை விட்டு வெளியே வந்த ஸ்டீவ், மீண்டும் ஒரு முதன்மை தொழில் நிறுவனத்தை கட்டமைத்து எழுப்புவதில் வெற்றிகளை குவித்துக்கொண்டிருந்தார். ஆனால் ஸ்டீவை இழந்த ஆப்பிள் நிறுவனமோ திவால் அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. 

 

steve jobs life history

 

1996, திவால் விளிம்பில்  தத்தளித்து கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனம் மீண்டும் ஸ்டீவை தேடியது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 1997ஆம் ஆண்டு தனது நெஸ்ட் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனத்துடன் இணைத்தார் ஸ்டீவ். சரிந்துகொண்டிருந்த ஆப்பிள் நிறுவனத்தை மீண்டும் தூக்கிநிறுத்த அவருக்கு ஒரு மிகப்பெரிய துணை தேவைப்பட்டது. அப்போது அவருக்கு கை கொடுத்தவர்தான் பில் கேட்ஸ். மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒரே காலகட்டத்தில் துவங்கப்பட்ட நிறுவனங்கள்தான். தொடக்க காலத்தில் இரண்டு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றினாலும் பின்னர் இந்த உறவில் விரிசல் ஏற்பட்டது.

"மைக்ரோசாப்ட் நிறுவனம் ரசனையில்லாதது. மூன்றாம் தர தயாரிப்புகளை மக்களுக்கு தருபவை" இவை 1996 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் குறித்து ஸ்டீவ் கூறியவை. இரு நிறுவனங்களும் பரஸ்பரம் விமர்சித்துக்கொண்டாலும், ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் பில் கேட்ஸ் தனிமனித நாகரிகத்தை முறையாக கடைபிடிப்பவர்களாகவே இருந்தனர். தொழில் ரீதியாக பல போட்டிகளை சந்தித்தாலும், அன்றைய சூழலில் இணைந்து பணியாற்றுவதே சிறந்தது என முடிவெடுத்தன இரு நிறுவனங்களும். இதன் பலனாக திவால் நிலையில் இருந்த ஆப்பிள் மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணித்தது. 

 

steve jobs life history

 

கணினிகள் தயாரிப்பை கடந்து எதிர்கால தொழில்நுட்பங்கள் சார்ந்த சாதனங்களையும் தயாரிப்பது என முடிவெடுத்தது ஆப்பிள். அதன்படி வாக்மேன்களை தூக்கிக்கொண்டு மக்கள் திரிந்த காலத்தில், பாடல்களை கேட்பதற்காக சிறிய அளவிலான ஐபாட் -ஐ அறிமுகம் செய்தது. இது மிகப்பெரிய வெற்றியை அந்நிறுவனத்திற்கு தேடித் தந்தது. ஐபாட் கொடுத்த வெற்றி உற்சாகத்துடன், 2007ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் துறையில் கால்பதித்தது ஆப்பிள். "ஆடம்பரமாக செலவு செய்யும் பணக்காரர்களுக்கானது இந்த போன்கள்" என கமெண்ட் அடித்தார் பில் கேட்ஸ். அப்படி கூறப்பட்டாலும், விலையும் அதிகமாக இருந்தாலும், அதன் தரம் மக்களை கவர்ந்தது. விளைவு, ஸ்டீவ் எதிர்பார்த்தது போலவே மாபெரும் வெற்றியாக அமைந்தது ஐபோன்.

பெற்றோர் கைவிட்டது, கல்லூரி படிப்பு இடைநிறுத்தம், ஆப்பிள் நிறுவனம் தொடக்கம்,  ஆப்பிளில் இருந்து வெளியேற்றம், நெஸ்ட், பிக்ஸார் கொடுத்த வெற்றிகள், ஆப்பிள் நிறுவனத்தை மீட்டெடுக்க கடின உழைப்பு, ஐபாட், ஐபோன் வெற்றி என வாழ்க்கை முழுவதும் சறுக்கல்களையும், சாதனைகளையும் மாறிமாறி சந்தித்த ஸ்டீவ் ஜாப்ஸ் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் வீழ்ந்தார். பின்னர் ஏற்பட்ட நோயின் கடுமையான தாக்கத்தால் 2011, அக்டோபர் 5 அன்று உயிரிழந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். 

 

steve jobs life history

 

பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் வாழ்ந்தவர் ஸ்டீவ். தொழில் ரீதியாக ஐ.பி.எம், மைக்ரோசாப்ட் உடன் ஏற்பட்ட பிரச்சனை அவர் மீது சர்ச்சையை ஏற்படுத்தியது என்றால், தனது காதலிக்கும், தனக்கும் பிறந்த மகளை, தனது மகள் இல்லை என ஸ்டீவ் கூறி, அது நீதிமன்றம் வரை சென்றது அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் சர்ச்சையாக்கியது. 27 ஆண்டுகால தேடுதலுக்குப் பின் கண்டறிந்த தனது சகோதரிக்கு அவர் காட்டிய பாசம் பலரையும் பாராட்ட வைத்தாலும், மறுபுறம் தனது உண்மையான தாய், தந்தையை விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இப்படி சர்ச்சைகளுக்கும், சறுக்கல்களுக்கும் பஞ்சமில்லாமல் வாழ்ந்தாலும், இன்றைய நவீன உலகில் அவர் ஏற்படுத்திய விஞ்ஞான புரட்சியும், அவர் வெளிப்படுத்திய கடின உழைப்பும், தொழில்நுட்பம் என்ற ஒன்று உள்ளவரை இளைஞர்களின் கனவுகளுக்கு உயிராகவும், உரமாகவும் இருக்கும் என்பது மிகையாகாது.