Skip to main content

திராவிட இயக்கத்தின் மறுபதிப்பு மேல்மருவத்தூர்!

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

spiritual Revolution and Dravidian Thought of Melmaruvathur Bangaru Adigalar

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூரில் வசித்து வந்தவர்கள் கோபால நாயக்கர் மீனாம்பாள் தம்பதி. இந்த தம்பதிக்கு 1941ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி இரண்டாவது குழந்தையாக பிறந்தவர் பங்காரு அடிகளார். இவருக்கு ஒரு சகோதரியும் ஒரு தம்பியும் உடன் பிறந்தவர்கள். அடிப்படையில், கோபால நாயக்கர் குடும்பம் மிகவும் செல்வாக்கு வாய்ந்த குடும்பமாக அந்த காலத்திலேயே இருந்துள்ளது. ஊரில் நல்லது கெட்டது அனைத்திலும் கோபால நாயக்கரிடம் கலந்து பேசாமல் மேல்மருவத்தூர் மக்கள் செய்யமாட்டார்கள் எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பங்காரு அடிகளாரை அவரது பெற்றோர் அன்புடன் வளர்த்து வந்துள்ளனர். அதனடிப்படையில், பங்காரு அடிகளாரை, தொடக்கக் கல்வியை சோத்துப்பாக்கத்திலும், உயர்கல்வியை அச்சிறுப்பாக்கத்திலும் படிக்க வைத்துள்ளனர். 

 

ஐம்பதுகளில் கல்வியே பலருக்கு எட்டாத கனியாக இருந்தபோது, படிப்பில் கெட்டிக்காரராக இருந்த பங்காரு அடிகளார், செங்கல்பட்டு அரசு ஆசிரியர் பள்ளியில், பயிற்சிப் படிப்பையும் முடித்துள்ளார். இதையடுத்து, ஆசிரியராகவும் பணியாற்றத் தொடங்கியுள்ளார். முன்னதாக, அடிகளார் பள்ளிப் பருவத்தில் இருந்தபோது, நடந்த சம்பவம்தான் அடிகளாரின் ஆன்மிக பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது என்று சொல்லப்படுகிறது. அதாவது, அடிகளார் இல்லத்தின் குறுக்கே ஒரு தேவி மாரியம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், குடும்பத்தினர் அம்மனுக்காக இங்கு சிறப்பு புனித விழாக்களை நடத்துவார்கள். அப்போது, இந்த விழாவில் அடிகளாரும் கலந்துகொள்கிறார். திடீரென முதல்முறையாக அடிகளார் மீது தெய்வீக சக்தி ஆட்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, ஆதிபராசக்திதான் அவரது உடலை ஆட்கொண்டதாகவும், அடிகளார் மூலமாக பேசத் தொடங்கிய அம்மன்.. இந்த உலகை காக்க வந்திருப்பதாகவும் மேல்மருவத்தூரில் அற்புதம் நடக்கப்போகிறது எனச் சொல்லியதாகவும் கூறப்படுகிறது. 

 

மேலும், அப்போது தீபாராதனை காட்டுவதற்கு  பயன்படுத்தப்பட்ட கனமான பித்தளைத் தகட்டைப் பிடித்து எளிதில் அடிகளார் வளைத்துள்ளார். இது கடவுளின் சக்தியாக பார்க்கப்படுகிறது. அந்த மென்மையான வயது சிறுவனால் உண்மையில் இதைச் செய்யமுடியாது என அனைவரும் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.  மேலும், குடியிருந்த வீட்டின் பின்புறத்தில் உள்ள வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்துள்ளது. இதைக் கண்ட அடிகளார் இது ஆதிபராசக்தியின் செயல் என கருதினார். இதனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் அந்த வேப்பமரத்திற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். 

 

இந்த நிலையில், 1966ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய கொடூர புயல் என இன்றளவும் நினைவுகூறப்படும் வலுவான புயல் வீசியது. இந்த புயலில் அடிகளார் வீட்டின் பின்புறத்தில் இருந்த வேப்பமரம் முறிந்து விழுந்தது. பின்னர் பெய்த மழையில், மரத்துக்கு அடியில் இருந்து புற்று கரைந்து சுயம்பு கல் ஒன்று வெளிப்பட்டது. அது ஆதிபராசக்தி அம்மன்தான் என உறுதியாக நம்பிய அடிகளார், அந்த இடத்தில் சின்னதாக கொட்டகை ஒன்றை அமைத்தார். ஆசிரியர் பணி நேரம் போக, மீதி நேரமெல்லாம் ஆதிபராசக்தியே கதியென்று கிடந்தார். பின்னர், குறி சொல்லத் தொடங்கினார். அடிகளார் சொல்வது அத்தனையும் நடப்பதாக நம்பிய மக்கள், மருவத்தூர் கோவிலுக்கு சாரை சாரையாக வரத் தொடங்கினர். இதனால், கோவிலை விரிவுபடுத்தத் தொடங்கினார் அடிகளார். 

 

1970ஆம் ஆண்டு ஆதிபராசக்தி ஆலயத்தை பெரிய அளவில் தொடங்குகிறார் அடிகளார். சுற்றுவட்டாரத்தில் இருந்து வந்துகொண்டிருந்த மக்கள் கூட்டம், ஒரு கட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து விரதம் இருந்து மாலை அணிந்துகொண்டு சிவப்பு உடையில் வரத் தொடங்கினர். இவர்கள், செவ்வாடை பக்தர்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.  கோவில் வளர்ந்தது. அடிகளாரின் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவியது. பத்துக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அடிகளாருக்கு பக்தர்கள் இருக்கின்றனர். இதற்கிடையில், 1968 செப்டம்பர் 4 அன்று அடிகளாருக்கு லட்சுமியம்மாளுடன் திருமணம் நடைபெறுகிறது. இந்த தம்பதிக்கு, அன்பழகன், செந்தில்குமார், ஸ்ரீதேவி, உமாதேவி என நான்கு குழந்தைகள் பிறக்கின்றனர். குடும்பத்தை கடந்து கடவுளோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட அடிகளார், தன்னை ஆதிபராசக்தி அம்மனின் வடிவமாக அறிவித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து பக்தர்களும் அவரை 'அம்மா' என்றே அழைத்தனர். 

 

ஆன்மீக சேவையில் மக்கள் அளிக்கும் காணிக்கையை அவர்களுக்கே திருப்பித் தர நினைத்த அடிகளார், ஆதிபராசக்தி அம்மன் பெயரிலேயே கல்வி அறக்கட்டளைகளை நிறுவினார். மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி என பல்வேறு மாணவர்களுக்கு குறைந்த விலையில் கல்வி சேவையை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், கல்வி நிலையங்களின் பெயரைச் சொல்லி நிலங்களை ஆக்கிரமித்துவிட்டார் என அடிகளார் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். கோவிலில் அதிக நன்கொடை, கல்வியிலும் பணம் அதிகம் வசூலிக்கிறார்கள் எனும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதற்காக, சில சமயங்களில் வருமான வரித்துறை ரெய்டுகளுக்கும் சிபிஐ வழக்குகளுக்கும் அடிகளார் ஆளாகவேண்டிய நிலை ஏற்பட்டது. 

 

விமர்சனங்கள் ஒருபுறம் என்றால், அடிகளார் செய்த ஆன்மீக புரட்சி அளவிட முடியாதவை. பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் கோலோச்சிய காலத்தில்தான், அடிகளாரும் மேலெழும்பி வந்தார். கறுப்புச் சட்டை போட்டுக்கொண்டு பெரியாரும் அவரது தொண்டர்களும் என்ன பேசினார்களோ எதற்காக போராடினார்களோ.. அதை, சிவப்புச் சட்டை போட்டுகொண்டு கோவிலுக்குள் நிகழ்த்திக் காட்டியவர் பங்காரு அடிகளார். அனைத்து சாதியினரையும் கோவிலுக்குள் அனுமதித்த பங்காரு அடிகளார், அனைத்து மதத் தலைவர்களுடனும் நட்பு பாராட்டினார். கோவில் கருவறைக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நேரத்தில், பெண்களை கருவறைக்குள் அனுமதித்தவர் அடிகளார். அதுவும், மாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் நுழையலாம் எனக் கூறி, அனைத்து தரப்பினருக்கும் ஆன்மீக சேவை வழங்கியவர் பங்காரு அடிகளார். இதனாலேயே என்னவோ, திராவிட இயக்கங்களின் விமர்சனப் பார்வை மேல்மருவத்தூரை தீண்டியதே இல்லை. 

 

மாறாக, அமைச்சர் பொன்முடி ஒருமுறை கூறுகையில், “மேல்மருவத்தூர் இயக்கம் திராவிட இயக்கத்தின் மறுபதிப்பு.. திராவிட இயக்கம் கோவிலுக்கு வெளியே செய்துகொண்டிருப்பதை அவர் கோவிலுக்கு உள்ளேயே செய்து காட்டிவிட்டார்” என புகழாரம் சூட்டினார். 

 

இந்த நிலையில், கடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முக. ஸ்டாலின் முதல்வரான பின்னர், அந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் பங்காரு அடிகளாரின் வீட்டிற்கு சென்றார். அங்கு ஆதிபராசக்தி பங்காரு அடிகளார், அவரது மனைவி லட்சுமி பங்காரு அடிகளார், அவரது மகன் அன்பழகன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வீட்டுக்குள் அழைத்து சென்றனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் தனது சார்பில் மஞ்சள் நிற பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். பதிலுக்கு பங்காரு அடிகளார் சிவப்பு நிற சால்வையை அணிவித்து வாழ்த்தினார். அதுபோல முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினும் சென்று பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசிபெறுவதும் வழக்கம்.

 

இந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கும் அரசியல் செல்வாக்கும் மிகுந்த பங்காரு அடிகளார், கடந்த சில தினங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாகவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்த நிலையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் அவர்கள் தற்போது மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பங்காரு அடிகளார் அவர்களின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.