Skip to main content

ஆந்திரா கேட்ட சிறப்பு மாநில அந்தஸ்து இதுதான்...  

Published on 17/03/2018 | Edited on 17/03/2018

இந்தியாவில் 'சிறப்பு அந்தஸ்து மாநிலங்கள்' என்ற ஒரு வரலாற்று வார்த்தை முதன் முதலாக பேசப்பட்டதே 1969-ஆம் ஆண்டுதான். அன்று ஆட்சிபொறுப்பில் இருந்த காங்கிரஸ் அரசு பொருளாதாரத்தில்  பின்தங்கியுள்ள மாநிலங்களை தேர்வுசெய்து அதன் பொருளாதார வளர்ச்சிக்கு நிதியுதவி செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் 5வது நிதிக்குழுவின் பரிந்துரையின் கீழ் சிறப்பு மாநில அந்தஸ்துக்கான தகுதி வரைமுறைகளை வகுத்தது. அந்த வரையறைகள் சிறப்பு மாநிலமானது பின்வரும் நிபந்தனைகளை கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தியது. 
 

chandra babu naidu


மலைப்பாங்கான மக்கள் வாழ்விடம், பக்கத்து நாட்டு எல்லைகளுக்கு இடையில் அல்லது ராணுவ தளம் சார்ந்த மாநிலங்கள்,மிகவும் குறைந்த மக்கள் அடர்த்தி மற்றும் கணிசமான பழங்குடியின மக்கள், மக்கள் வாழத்தக்க அடிப்படை பொருளாதாரமின்றியிருத்தல், பொருளாதார கட்டமைப்பிற்கான வாழ்விடம் சார்ந்த வசதிகள் குறைவு என ஐந்து காரணிகளுக்கு உட்பட்ட மாநிலங்கள்தான் சிறப்பு மாநில அந்தஸ்துக்கு தகுதி பெற்ற தகுந்தவை என வரையறுக்கப்பட்டது.

அப்படி இருக்கும் ஒரு சிறப்பு மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக மத்திய அரசு நிதி உதவி போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் மத்திய அரசின் பட்ஜட்டில் 30% சிறப்பு மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும். மத்திய அரசின் மானியங்கள் அதிகம் கிடைக்கும், உற்பத்தி வரியில் சலுகை கிடைக்கும், மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள மாநிலங்களுக்கு 90 சதவிகித நிதி மானியமாகவும் 10 சதவிகிதம் கடனாகவும் வழங்கப்படும். மற்ற மாநிலங்களுக்கு மானியம் குறைவாக இருக்கும்.

 

border states



முதலில் மூன்று மாநிலங்கள்தான் சிறப்பு மாநிலங்களாக தேர்ந்தெடுக்கபட்டன. ஜம்மு காஷ்மீரும் பின்னர் அசாம், நாகலாந்தும் சிறப்பு மாநிலங்களாக அந்தஸ்து பெற்றன. பிறகு இந்த வரிசையில்  மேலும் பல மாநிலங்கள் இடம்பெற்றன. அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா, ஹிமாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று மொத்தம் 11 மாநிலங்கள் சிறப்பு மாநிலங்களாக உள்ளன. கடைசியாக 2010-ல் உத்தரகாண்ட் தான் சிறப்பு மாநில அந்தஸ்த்தை பெற்றது.

இதன் பின் 2014-ல்  ஆந்திரப்பிரதேசத்திலிருந்து தனி மாநிலமாக தெலுங்கானா பிரிக்கப்பட்டு ஹைதராபாத் தெலுங்கானாவின் வசம் சென்றதால் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், இந்த இழப்பை சரி செய்ய அடுத்த ஐந்து வருடத்திற்கு ஆந்திராவை சிறப்பு மாநிலமாக அறிவிக்கப்படும் என 20.02.2014 அன்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார். இதே உறுதிமொழியை பாஜக தங்களுக்கு அளித்ததாலேயே கூட்டணி வைத்தோம் என்று சந்திரபாபு நாயுடு கூறினார். ஆனால் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படாததால் ஆந்திராவின் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசமும், எதிர் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் ஆந்திராவை சிறப்பு மாநிலமாக அறிவிக்க வேண்டுமென கோரிவருகின்றன. 

 

babu - modi



இந்நிலையில், 14-ஆம் நிதிக்குழு இனி எந்த மாநிலத்திற்கும் சிறப்பு அந்தஸ்து கிடையாது என கூறியதை அரசு ஏற்றுக்கொண்டதால் இனி அப்படி செய்ய முடியாது எனவே ஆந்திராவின் தேவைகளை கருத்தில் கொண்டு   சிறப்பு மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டால் கிடைக்கும் நிதியை  வேறு வழிகளில் கொடுக்கிறோம்  என நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறுத்துவிட்டார். இப்படி சிறப்பு அந்தஸ்து வழங்க 14-வது நிதிக்குழுவை சாக்காக வைத்து மறுப்பது இது முதல்முறை அல்ல ஏற்கனவே வெங்கைய நாயுடு அவர்கள் நகர்ப்புற வளர்ச்சிதுறை  அமைச்சராக இருந்த போதே இதே காரணத்தைக்கூறி மறுத்துள்ளார். மேலும் 2016-லேயே 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி சிறப்பு அந்தஸ்து என்ற பிரிவு நீங்குகிறது என்று சுற்றறிக்கையும் விடப்பட்டுள்ளது.

நிதிக்குழுவானது கூறுகையில், 'நிதிக்குழுவின் முக்கியவேலையானது ஒரு மாநிலத்தின் வருவாய் ஈட்டும் திறன் மற்றும் செலவு செய்யும் சூழல் போன்றவற்றை கருத்தில் கொண்டு அனைத்து மாநிலங்களும் சமமான வரி மற்றும் வருவாயை பிரித்து தருவதே ஆகும்.  மேலும் அதன் தீர்மானத்தின் அறிக்கையில் இனி  சிறப்பு மாநிலங்கள் என்ற பிரிவு இல்லை என பரிந்துரைக்கும் எந்த ஒரு  அங்கமும் இல்லை. சிறப்பு அந்தஸ்துள்ள  மாநிலம் மற்றும் பொதுபிரிவில் உள்ள  மாநிலம் என்று நாங்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை. பொதுவாக ஒரு மாநிலத்தின் பொருளாதார மற்றும் நிதிநிலைமையின் மீது ஆதிக்கம்  செலுத்தும் காரணிகளையும், ஒரு மாநிலத்தின் தனிப்பட்ட பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டே நிதி பகிர்வை பரிந்துரைக்கிறோம்' எனவும் கூறியுள்ளது.  ஜம்மு -காஷ்மீர்க்கு இந்திய அரசியலமைப்பு 370 பிரிவின் படிதான்  சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களுக்கும் 371 A  முதல் H வரை உள்ள பிரிவுகளின் படி சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு அந்தஸ்துக்கான தகுதி வரையறைகளில் பெரும்பாலானவற்றில்  ஆந்திரா தகுதி பெறவில்லை என்று பாஜக கூறியுள்ளது. கொடுத்த உறுதியை நிறைவேற்றவில்லை என்பதால் விலகுகிறோம் என்று தெலுங்கு தேசம் கூறி, மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருகிறது. இந்த முடிவால் அரசுக்கு ஆபத்து வருமா? பார்ப்போம்... 

                    

   

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.