Skip to main content

இப்போ மட்டுமில்லை, செரினா அப்பவும் அப்படிதான்...

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
serena williams

 

 

செரினா வில்லியம்ஸ் எப்போதும் களத்தில் ஆவேசமாக, துடிப்பாக விளையாடுபவர். அவ்வப்போது நிறைய சர்ச்சைகளில் சிக்குபவர். அதேபோல்  தற்போது  நடந்த அமெரிக்க ஓப்பன் டென்னிஸின் இறுதி போட்டியில் செரினா வில்லியம்ஸூம், ஓசாகா என்ற ஜப்பான் வீராங்கனையும் மோதினர். இப்போட்டியின்  முதல் செட்டில் ஒசாகா வெற்றியடைந்தார். அப்போது செரினாவின் பயிற்சியாளர், செரினாவிற்கு சைகை செய்துள்ளார். இதற்கு  நடுவர்  செரினாவை எச்சரிக்கை செய்து, செரினாவின் புள்ளிகளை போட்டி விதிமீறலின் அடிப்படையில் குறைத்தார். இதுதான் பிரச்சனைக்கான மைய காரணம்.

இதனால் கோபமான செரினா, எனது பயிற்சியாளர் நான் வெற்றிபெற வேண்டுமென்றே சைகை செய்தார். நான் ஏமாற்றவில்லை. எனக்கூறி நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், தனக்கு குறுக்கு வழியில் வெற்றிபெற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய செரினா நடுவரை பொய்யர், தான் விளையாடும் எந்தப் போட்டிகளிலும் இவர் நடுவராக இருக்கக்கூடாது, இவர் ஒரு பொய்யர். எனவும் கூறியுள்ளார்.  தனது ராக்கெட்டை தரையில் அடித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். நடுவரைத் தரக்குறைவாக பேசியதால் அமெரிக்க டென்னிஸ் ஆணையம்  செரினாவிற்கு 17,000 டாலர்கள் அபராதம் விதித்தது. அவர் நடுவரை சாடியதற்கு அவரின் மன அழுத்தம்தான் காரணம் எனவும் செரினாவின் தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

இதற்கு முன்பு 2009ல் நடந்த ஒரு போட்டியில் கிட்டதட்ட அவருக்கு 1,75,000 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது நடந்த போட்டியின் ஒரு சர்வீஸின்போது  எல்லைக்கோட்ரைத்தாண்டி காலை வைத்ததால் நடுவர் ஃபவுல் கொடுத்தார். அது இரண்டாவது ஃபவுல் என்பதால் அவரை எதிர்த்து ஆடியவருக்கு புள்ளிகள் சென்றன. இதனால் கோபமடைந்த செரினா லைன் ஜட்ஜ் எனப்படும் நடுவரை கோபமாக வசைபாடினார். இதற்காகதான் அவருக்கு அவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது. 

 

தலைசிறந்த போட்டியாளர் இப்படியான சர்ச்சைகளில் சிக்குவது என்பது வருந்தத்தக்க விஷயம் என பலரும் கூறிவருகின்றனர். ஆவேசத்தை ஆட்டத்தில் மட்டும் வெளிப்படுத்தினால் அவரின் நன்மதிப்பு இன்னும் உயரும்.