Skip to main content

'பிரதமர் டிவியில் பேசுவார்... வானொலியில் பேசுவார்' ஆனால் நாடாளுமன்றத்தில் பேசமாட்டார்! - சீமான் கிண்டல்!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசை கடுமையாக சாடினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " உத்தரபிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று முதியவர்களை அடித்தே கொன்றீர்களே, அப்புறம் எதற்காக அமெரிக்க அதிபருக்கு ஐந்து விதமான வகையில் மாட்டுக்கறி சமைத்து கொடுத்தீர்கள். அமெரிக்க அதிபருக்கு பக்கத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர், ராணுவ அமைச்சர்களை எல்லாம் பார்க்க வேண்டுமே, எல்லோரும் நேராக நின்றுகொண்டு அவரை பார்த்துக் கொண்டு இருக்கும் காட்சிகளை நாம் பார்த்தோம். இதே அவர்கள் மேடையில் பேச விட்டிருந்தால் மேலேயும், கீழேயும் பார்த்து மக்களை ஏமாற்றி பேசியிருப்பார்கள்.
 

jk


பிரதமர் தொலைக்காட்சியில் பேசுவார், வானொலியில் பேசுவார், ஆனால் நாடாளுமன்றத்தில் மட்டும் அவர் பேசவே மாட்டார். நாட்டில் ஆதிகுடிகள் எனப்படும் மலைவாழ் மக்கள் எந்த குடியுரிமை சான்றிதழை கொடுப்பார்கள். நாட்டில் லட்சக்கணக்கான பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்ன சான்றிதழை கொடுக்கப்போகிறார்கள். தில்லியில் மட்டும் 13,000 ஆயிரம் பிச்சைகாரர்கள் இருக்கிறார்கள். அதாவது காமன் வெல்த் போன்ற விழாக்கள் நடைபெறும் போது அந்த பிச்சைக்காரர்களை எல்லாம் லாரிகளில் ஏற்றி வேறு இடத்திற்கு கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். வெளிநாட்டினர் வரும்போது குடிசை பகுதிகளை பதாதைகள் வைத்து மூடி விடுகிறார்கள். இப்போது எப்படி ட்ரம்பு வருகையின் போது வீடுகளை எல்லாம் சுவர் வைத்து மறைத்தார்களோ? அதை போல செய்வார்கள். குஜராத் மாடல் என்றால் என்ன? குடிசைகள் தெரியாமல் 7 அடிக்கு சுவர் எழுப்புவதுதான் குஜராத் மாடல். 

தாஜ்மஹாலை சுற்றுலா பட்டியலில் இருந்தே தற்போது அந்த மாநில அரசு எடுத்துள்ளது. அமெரிக்க அதிபருக்கு என்ன காட்டுவது என்றே அவர்களுக்கு தெரியவில்லை. அவசர அவசரமாக வெள்ளை அடித்து அவரை அங்கு அழைத்து சென்றுள்ளார்கள். அதுவும் பெரிய ஐயா அங்கே செல்ல மாட்டார். ட்ரம்புடன் யோகி ஆதித்யநாத்தை அனுப்புகிறார். அவர் அவருக்கு தாஜ்மகால் பற்றி எடுத்துரைக்கின்றார். மற்றொரு நாட்டிற்கு நாம் செல்லும் போது அந்நாட்டின் பெருமைகளை, அரசியல் தலைவர்களை அறிந்திருக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச அறிவு இருக்க வேண்டும். ஆனால், அங்கே இருந்த லெட்டர் பேடில் ட்ரம்ப் மோடி, மோடி என்று பத்து முறை எழுதி வைக்கிறார். எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் அவர் இருக்கின்றார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒன்றே போதுமானதாக இருக்கின்றது. அவருக்கு காந்தியே தெரியவில்லை. அவருக்கு நீங்கள் ஏன் தாஜ்மகாலை காட்டினீர்கள், 3000 கோடியில் கட்டிய வல்லபாய் பட்டேல் சிலையை காட்டியிருக்கலாமே? ஏன் காட்டவில்லை. மூவாயிரம் கோடியில் சிலை, அதன் காலடியி்ல் பிச்சைக்காரன் என்பதுதான் இன்றைய நிலை. காவலர்கள் கண்முன்னே தான் மசூதிகள் தீக்கிரையாக்கப்படுகின்றது. காவலர்களே சிசிடிவி கேமராக்களை உடைக்கிறார்கள். ஒரு தேசத்தின் பெருந்த அவமானம், தலைகுனிவு இது. அப்துல் கலாமுக்கு அவர்கள் தானே குடியரசு தலைவர் பதவி கொடுத்தார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள். குஜராத் கலவரத்தால் உலக அரங்கில் ஏற்பட்ட கெட்ட பெயரை நீக்குவதற்காக அவர் குடியரசுத்தலைவர் ஆக்கப்பட்டாரே தவிர விரும்பி ஆக்கப்படவில்லை. 

தமிழர்கள் என்றாலும், இஸ்லாமியர்கள் என்றாலும் தீவிரவாதியாக பார்க்கப்படுகிறார்கள். என்னை பல நாடுகளுக்கு எதற்காக செல்லவிடாமல் பாஸ்போட்டை பிடுங்கி வைத்துள்ளார்கள். இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானுக்கு ஆதரவாக உளவு பார்த்ததாக 14 பேரை கைது செய்துள்ளார்கள். அதில் ஒருவர் கூட முஸ்லிம் மக்கள் அல்ல. 2014ம் ஆண்டு தேர்தலில் இந்த நாட்டிற்கு காவலாளியாக இருப்பேன் என்று நம்மிடம் வாக்கு கேட்ட பிரதமர், தற்போது நம்முடைய வீட்டிற்கு நாம் தான் உரிமையாளரா என்று நம்மிடம் சான்று கேட்கிறார். விடுதலை பெற்ற 72 ஆண்டு காலத்தில் யார் இந்தியர் என்று தெரியாமல்தான் நம்மை ஆண்டுகொண்டு இருக்கிறார்களா? நான் இந்தியனா இல்லையா என்று தெரியாமலா எனக்கு ரேசன் அட்டை கொடுத்தீர்கள். வாக்காளர் அடையாள அட்டை கொடுத்தீர்கள், ஓட்டுநர் உரிமம் கொடுத்தீர்கள்? அதனால்தான் நாட்டின் முதல் குடிமகனிடம் முதலில் குடியுரிமை கேளுங்கள், பிறகு குடிகளிடம் கேளுங்கள் என்று கூறினேன். பிரதமரிடம் முதலில் குடியுரிமை சான்றிதழை கேளுங்கள். அதை தற்போது யாரோ ஆர்டிஐ-யில் கேள்வி கேட்க 1955ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தின்படி அவரிடம் ஆவணம் இல்லை, அதனால் அவர் காட்ட தேவையில்லை என்று கூறுகிறார்கள்.  அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். ஆவணம் இருந்தாலும் காட்டப்போவதில்லை" என்றார்.