Skip to main content

"திமுகவுக்கு மாற்று நாம் தமிழர் கட்சி... ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நிற்பேன்" - சீமான் தடாலடி!

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

jkl

 

ரஜினி அரசியலுக்கு வர மாட்டேன் என்று அறிவித்த நிலையிலும் அவர் தொடர்பான விவாதம் தமிழக அரசியல் அரங்கில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரஜினியின் அறிவிப்பு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவை வருமாறு, "அரசியலுக்கு வர மாட்டேன் என்று கூறிய நடிகர் ரஜினிகாந்தின் முடிவை நான் மனதார வரவேற்கிறேன். ஒரு திரைக்கலைஞனாக அவரை நானும் ரசிக்கிறேன். சினிமாவில் அவரை கொண்டாடித் தீர்த்துள்ளோம். அரசியல் ரீதியாக அவர் முடிவெடுக்க தயாரான போது அதனை கடுமையாக எதிர்த்துள்ளேன். கடைசி வரை அந்த முடிவில் நாங்கள் எந்தவித சமரசமும் செய்யவில்லை. அவரும் அவருடைய குடும்பத்தாரும் கருதுவது போல அவரின் உடல்நலமும், மன நலமும் ரொம்ப முக்கியம். அதனை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டியது இந்த பேரிடர் காலத்தில் மிக முக்கியம். அதன் காரணமாகவே அரசியலுக்கு நீங்கள் வேண்டாம் என்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொலைக்காட்சிகளில் நான் பதிவு செய்திருந்தேன். 

 

கடந்த காலங்களில் அவர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தவன் நான். அரசியல் ரீதியாக அவரை கடுமையாக எதிர்த்திருக்கலாம். அது அவருடைய ரசிகர்களையோ, குடும்பத்தாரையோ, அவரையோ காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனி எங்களால் அவர் புகழ்ச்சிக்கு உரியவராக கொண்டாடப்படுவார் என்பதில் ஐயமில்லை. அவர் ஆகப்பெரும் திரை ஆளுமை. அதற்கு தமிழகத்தில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்காது. ஆசியா முழுவதும் அவர் புகழ் பரவிக்கிடக்கிறது. தமிழ் மக்கள் அவரை கொண்டாடுகிறார்கள். நாம் தமிழர் பிள்ளைகளும் இனி அவரை கொண்டாடுவார்கள். அரசியல் அவருக்கு அவசியமில்லாத ஒன்று. எனவே அவரின் தற்போதைய முடிவு என்பது வரவேற்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. நாம் எதிர்த்ததால் அந்த முடிவை அவர் எடுத்ததாக நான் பார்க்கவில்லை. எப்படி பார்த்தாலும் அந்த முடிவு என்பது வரவேற்கக் கூடியதாகவே இருக்கிறது. அந்த வகையில் அவருக்கும், எங்களுக்கும் இந்த முடிவு மகிழச்சியைத் தருவதாகவே இருக்கிறது. 

 

தலைவன் என்பவன் தன்னையே எரித்துக்கொண்டு வெளிச்சத்தை பரப்பக்கூடியவனாக இருக்க வேண்டும் என்று அறிஞர் பெருமக்கள் கூறுகிறார்கள். எனவே திரை வெளிச்சம் மட்டும் அரசியலுக்கு போதும் என்பதை மட்டும்தான் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். வந்த உடனே ஆட்சியைப் படிப்பேன் என்பது, சேவை செய்யாமல் பதவி வேண்டும் என்பதைத் தான் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். அதனை இன அவமானமாக கருதுகிறோம். எனவேதான் இத்தனை ஆண்டுகாலமாக அதனை எதிர்த்து வருகிறோம். அரசியலில் உட்கட்சி பிரச்சனைகளையே அவரால் தாங்க முடியாது. நான் அதை செய்தேன், இதை செய்தேன் எனக்கு பதவி தரவில்லையா என்று கேள்வி எழுப்புவார்கள். அரசியலை என்னைப் போன்ற காட்டானாலேயே தாங்க முடியவில்லை. கச்சைய கட்டி இறக்கி விட்டுவிட்டு எல்லோரும் உங்களை திட்டுவார்கள். அதனால்தான் தயவு செய்து நீங்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என்று கேட்டுகொண்டிருந்தோம். தற்போது அவர் நல்ல முடிவு எடுத்துள்ளார். மேலும் திமுகவுக்கு மாற்று அதிமுக அல்ல, நாம் தமிழர்தான் கட்சி தான். நான் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை ஸ்டாலின் தான் தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால் அவர் போட்டியிடும் தொகுதியில்தான் நான் போட்டியிடுவேன்" என்றார்.