Skip to main content

தாயைப் பற்றி பேசினால் கொதிக்கும் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை பார்த்து அந்த வார்த்தையை கூறலாமா..? - கொதிக்கும் பெங்களூர் புகழேந்தி!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

fh

 

சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி அதிமுக பொன்விழாவை முன்னிட்டு ஜெயயலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அடுத்தடுத்த நாட்களில் அரசியல் தொடர்பாக கருத்து தெரிவித்ததோடு, கழக பொதுச்செயலாளர் சசிகலா என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மேலும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் தந்தார். இந்நிலையில், பன்னீர்செல்வமும் அவருக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 


கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், மக்கள் ஏற்றுக்கொள்வதைப் பொருத்து அவர்களின் வெற்றி இருக்கும். சசிகலா அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவரா என்பதைக் கட்சியில் கூடி பேசி முடிவு செய்வோம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ்தான் சசிகலாவை நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். எனவே சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியிருந்தார். இருவரின் மாறுபட்ட கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

அண்ணன் பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர். அவருக்கு அனைத்து விதமான அதிகாரங்களும் இருக்கிறது. திருமதி வி.கே. சசிகலா அவர்கள் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவரா என்ற கேள்விக்கு அவர் பெருந்தன்மையாக பதிலளித்துள்ளார். அவர் நினைத்திருந்தால் அதிமுகவில் அவர் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று நேரடியாக அறிவித்திருக்கலாம். ஆனால், மிக நாகரீகமாக கட்சி நிர்வாகிகள் கூடி அவர் அதிமுகவில் சேர்வது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெளிவாக கூறியிருக்கிறார். அதிலிருந்தே அவரின் அரசியல் நிலைப்பாட்டை நாம் புரிந்துகொள்ள முடியும். இந்த ஜெயக்குமார் போன்றவர்களுக்கு ஏதோ பெரிய பிரச்சனை இருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து அவர் இவ்வாறு பேசி இருக்கிறார். பன்னீர்செல்வம் அவர்களின் பேட்டிக்குப் பின்னால் ஏதோ பேசப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். 

 

விரைவில் குரு பூஜை வர இருக்கிறது. அதில் கடந்தமுறை எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டபோது பேனர் உள்ளிட்டவை கிழிக்கப்பட்டு பல இடங்களில் பிரச்சனை ஏற்பட்டது. இந்தமுறை அதில் மேலும் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் திமுக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா தன் தாயைப் பற்றி தவறாக கூறிவிட்டார் என்று கூறி தேர்தல் நேரத்தில் அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் செய்தார். ஆனால் சசிகலா பற்றிய கேள்விக்கு, "சூரியனைப் பார்த்து... அதற்கு மேல் நீங்களே புரிந்துகொள்ளுங்கள்" என்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் என்றால் அவருக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அப்படி என்றால் சசிகலாவை நாயோடு அவர் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். இது அவர் சார்ந்த சமூகத்தில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அனைத்தும் குரு பூஜையில் எதிரொலிக்கும். எடப்பாடி பழனிசாமி தனது தாயைப் பற்றி பேசினால் அழுது ஆர்ப்பரிப்பார், ஆனால் அடுத்தவர்களை நாய் என்ற தொணியில் பேசுவார் என்றால் இதை தென்தமிழக மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள். நிச்சயம் அவருக்கு அங்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். 

 

அண்ணன் பன்னீர்செல்வம் அவர்கள் குரு பூஜையில் எதிர்ப்பு வரக் கூடாது என்ற காரணத்திற்காக இதைச் சொல்லியிருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அவ்வாறு சொல்லியிருந்தால் அது பெரிய தவறு. அவர் இதை மனப்பூர்வமாக கூறியிருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அவர் தலைமை பொறுப்பில் இருக்கிறார், அவருக்கு உரிமை இருக்கிறது. தற்போது பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஜெயக்குமார் போன்றவர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். அவர் எடப்பாடி பழனிசாமி அரசை ஊழல் அரசு என்று கூடத்தான் விமர்சனம் செய்தார். ஆனால் அவரை ஏன் சேர்த்துக்கொண்டீர்கள். பழைய கதையைப் பேசிக்கொண்டிருந்தால் எதிர் தரப்பில் உள்ளவர்களும் பேசுவார்கள். அடுத்து கே.பி. முனுசாமி, அதிமுகவில் சசிகலா வந்தால் செத்துவிடுவேன் என்றெல்லாம் பேசியிருக்கிறார். அவர் ஐந்தரை ஆண்டுகள் நாடாளுமன்ற மாநிலங்களவை பதவி இருக்கும்போதே சட்டமன்றத் தேர்தலில் நின்று அந்த இடத்தை திமுகவுக்கு தாரை வார்த்தவர். தற்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள தொகுதியிலும் இடைத்தேர்தல் வந்தால் அந்த மக்கள் தாங்குவார்களா? அவர் நீண்ட நாட்கள் வாழ வேண்டும். இன்னும் நடக்கிருக்கின்ற அரசியல் கூத்துகளை அவர் பார்க்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.