Skip to main content

நடிகர் பிரகாஷ்ராஜை பாஜக ஏன் குறி வைக்கிறது - விளக்கமளிக்கிறார் புதுமடம் ஹலீம்

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

 Pudumadam Haleem interview about prakashraj and BJP issue

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

தமிழ்நாட்டுக்கு வந்த நாள் முதல் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார் ஆளுநர். குறிப்பாக, கல்வி விஷயத்தில் அவருடைய செயல்பாடுகள் கொடூரமாக இருக்கின்றன. பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டத்தை நடத்தும்போது, இணை வேந்தராக இருக்கும் அமைச்சர் பொன்முடியை அழைக்காமல் விட்டார். அனைத்திலும் அவர் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை தமிழ்நாடு அரசு நியமித்தது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுக்கிறார்.

 

பல்கலைக்கழகங்களுக்கு இவர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார். இங்கே இருக்கும் கல்வி நிறுவனங்கள் தமிழ்நாடு அரசின் ஆலோசனையை கேட்கத் தேவையில்லை என்பது போன்ற நிலையை உருவாக்குகிறார். இவருடைய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் பொறுத்துக் கொள்கிறார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது. அந்த அவசியமே அவர்களுக்கு இல்லை. குமுறலை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை. அவரை நீக்குவதற்கான என்ன வழியை நீங்கள் கண்டுபிடித்தீர்கள்? அதிரடியாக முடிவெடுக்காமல் தாமதிப்பதும் தவறு தான். 

 

இவை அனைத்தும் பாஜகவின் அஜெண்டா தான். நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு இடதுசாரி, பாஜகவுக்கு எதிரானவர், இந்தித் திணிப்புக்கு எதிரானவர் என்கிற முத்திரை ஏற்கனவே குத்தப்பட்டிருக்கிறது. அதனால் அவரை இவர்கள் டார்கெட் செய்கின்றனர். அவர் போட்ட கார்ட்டூனில் எந்தத் தவறும் இல்லை. சந்திரயான்-3 வெற்றியடைய வேண்டும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பும். "நிலவுக்கே சென்றாலும் அங்கு ஒரு மலையாளி டீ ஆற்றிக் கொண்டிருப்பார்" என்று கேரள பத்திரிகையில் வந்த அதே நகைச்சுவை செய்தியைத் தான் பிரகாஷ்ராஜ் பகிர்ந்தார். ஆனால் இவர்கள் பிரகாஷ்ராஜை மட்டும் தான் குறிவைக்கின்றனர். 

 

அறிவு சார்ந்த இடதுசாரி என்கிற பெயர் பிரகாஷ்ராஜுக்கு இருக்கிறது. இப்படி இருப்பவர்களை பாஜகவினருக்கு பிடிக்காது. எனவே இதுபோன்றவர்களை தேசத்துக்கு விரோதமானவர்கள் என்று முத்திரை குத்துவார்கள். சத்தீஸ்கர் முதலமைச்சரின் பிறந்தநாளன்று அங்கு அமலாக்கத்துறையை இவர்கள் அனுப்புகின்றனர். ‘பிறந்தநாள் பரிசு கொடுத்த மோடிக்கும் அமித்ஷாவுக்கும் நன்றி’ என்று அவர் தெரிவித்துள்ளார். வருகின்ற சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரிய அளவில் தோற்கும் என்று கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. அதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்களால் முடிந்ததைச் செய்கிறார்கள். இன்னும் பலருடைய வீட்டுக்கு இதுபோன்ற ரெய்டுகள் வரும்.