Skip to main content

பாமக... பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!

Published on 06/02/2019 | Edited on 08/02/2019


வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் ஒரு அணியும் மேலும் அமமுக, மக்கள் நீதி மய்யம் என பலகட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதில் கூட்டணி என்ற கணக்கில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் மற்றும் சில அமைப்புகள் திமுக கூட்டணியில் வலுவாக உள்ளது. அடுத்ததாக அதிமுக அணியில் பாஜக உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அக்கூட்டணியில் வேறு கட்சிகள் எதுஎது என்ற எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக அணியில் பாமக, தேமுதிக, தமாகா இந்த கட்சிகள் ரகசிய டீலிங்கில் இருந்துவருவது ஊடகங்கள் மூலம் அவ்வப்போது அம்பலமாகி வருகிறது.

 

 

pmk

 

 

இதில் குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணி பற்றி வெளிவருகிற கருத்துக்களை அக்கட்சியின் தலைவரான டாக்டர் ராமதாஸ் மறுத்து வருகிறார். மேலும் ஊடகங்கள் கற்பனை குதிரையில் ஏறி சவாரி செய்கிறது என்றும், அவரவர்  இஷ்டத்துக்கும் பாமக தேர்தல் கூட்டணி விஷயத்தில் கண்டபடி எழுதுவது தவறு என்றும் யாருடன் கூட்டணி என்கிற முடிவை எடுக்கும் அதிகாரம் எங்கள் கட்சி எனக்கு தந்துள்ளது. ஆகவே நான் எடுக்கும் நிலைதான் கட்சியின் அதிகாரபூர்வ முடிவு அறிவுப்பு என கூறியிருக்கிறார்.

 

 

ஆனால் என்னதான் பொத்தி பொத்தி வைத்திருந்தாலும் ஒருநாள் பூனைக்குட்டி வெளியே வரும் என்ற கூற்று இப்போது  அம்பலமாகியுள்ளது.

 

அது என்ன கூற்று?

 

பாமகவின் தருமபுரி எம்பியாக இருப்பவர் அன்புமணி ராமதாஸ். இந்த தொகுதியில் உள்ள  தருமபுரி முதல் மொரப்பூர் வரை ரயில்வே திட்டம் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. கடந்த திமுக ஆட்சிக்காலத்திலேயே இந்த ரயில்வே திட்டத்தை நிறைவேற்றக்கோரி மத்திய அரசிற்கு பலக்கடிதங்கள் அப்போதிலிருந்தே அனுப்பப்பட்டது. இந்த ரயில்வே திட்டத்தால் தருமபுரி மக்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும் என்பதே உண்மை. தருமபுரி தொகுதி மக்கள் சென்னை செல்வதென்றாலும், அல்லது சென்னையிலிருந்து வருவதென்றாலும் மொரப்பூருக்கு வேறு வாகனத்தில் வந்துதான் ரயிலில் செல்ல  இருக்கிறது.

 

pmk

 

அன்புமணி எம்பியாக வந்த இந்த ஐந்து வருட காலமாகவும் இந்த ரயில்வே திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று பாராளுமன்றத்தில் பேசியதோடு மத்திய ரயில்வே அமைச்சரை 18 முறை சந்தித்து கடிதம் கொடுத்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இறுதியாக 2016 -2017 பட்ஜெட்டில் நிபந்தனைகளுடன் இந்த ரயில்வே திட்டத்தை ஏற்பதாக மத்திய அரசு அறிவித்தது. 

 

அது என்ன நிபந்தனை?

 

இத்திட்டத்திற்காக செலவழிக்கப்படும் செலவில் மாநில அரசு பாதி செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. மாநில அரசிற்கும் கடிதம் எழுதினார் அன்புமணி. ஆனால் வருவாய் எதுவும் இல்லை ஆகவே பாதி தொகையை மாநில அரசு ஏற்றுக்கொள்ள முடியாது என்று சென்ற நவம்பர் மாதமே அறிவித்துவிட்டது எடப்பாடி அரசு. இதன் பின்னணியில் தான் பூனைக்குட்டியை சென்ற 4 ஆம் தேதி ரயில்வே அமைச்சரின் கடிதம் மூலம் பார்க்க முடிந்தது. 

 

 

pmk

 

 

அதாவது மாநில அரசின் பங்கே வேண்டாம். இந்த திட்டத்திற்கான மொத்த தொகை 358 கொடியே 95 லட்சம் இதை முழுமையாக மத்திய அரசு ஏற்கிறது. அடுத்த 10 நாட்களுக்குள் மொரப்பூர் தருமபுரி அகல மின்சார ரயில் பாதையை துவைக்கி வைக்கும் விழாவிற்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் நேரில் வருவதாக எம்பி அன்புமணிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இத்திட்டம் அப்பகுதி மக்களின் 78 ஆண்டு கோரிக்கை இதன்மூலம் அன்புமணிக்கு கிடைத்த வெற்றி என்று பாமகவினர் கொண்டாடுகின்றனர்.

 

 

pmk

 

 

எம்பியாகி ஐந்து வருடமாக கஜினி முகமது போல் 18 முறை படையெடுத்தும் கிடைக்காத இந்த திட்டம் இப்போது கிடைதித்திருப்பதன் பின்னணி கூட்டணி என்ற பூனை குட்டிதான். அதிமுக, பாஜக  கூட்டணியில் பாமகவிற்கு  7 இடங்கள் என்று பேச்சுவார்த்தை தொடங்கி தற்போது 5 இடங்கள் என பேச்சு தொடர்கிறது. கூடக்குறைய இடங்கள் இருந்தாலும் கூட்டணி உறுதி என்பதே பாஜக மத்திய அரசு அன்புமணி தொகுதிக்கு ரயில்வே திட்டத்தை அறிவித்துள்ளது.