Skip to main content

சிலைகளுக்கு உயிர் இருக்குமா? உயிர் இருந்தால் அது சிலையாகுமா?

Published on 06/12/2018 | Edited on 06/12/2018
periyar


 

தந்தை பெரியார் சிலை அவ்வப்போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை ஏதோ ஒரு வகையில் மிரட்டிக்கொண்டே இருக்கும்போல. தந்தை பெரியாரைப் பற்றியும், அவருக்காக தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டிருக்கும் சிலைகள் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

 

அவர் எதற்காக, எந்தச் சமயத்தில் இந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுகிறார் என்று கவனித்தால் அவருடைய நோக்கம் ரொம்ப சிம்ப்பிள் என்பது தெரியவரும். ஆம், தந்தை பெரியாரையும், அவருடைய சிலைகளையும் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதுதான் எச் ராஜா என்பவர் தமிழக அரசியலில் இருக்கிறார் என்றே அடையாளம் காணப்படுகிறார். அவருடைய சர்ச்சைக்குரிய கருத்துகள் செய்தியாகி, திராவிட இயக்கத்தினர் எச்.ராஜாவை கண்டித்துக் குரல் எழுப்புகிறார்கள். ஆக, மொத்தத்தில் தனது இருப்பை வெளிப்படுத்திக் கொள்ளவே சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் வெளியிடுகிறார் என்பது தெரியவருகிறது.

 

இப்படித்தான் சமீபத்தில் பெரியார் சிலைகளுக்கு உயிர் இருக்கிறதா என்ற அறிவுப்பூர்வமான கேள்வியை எச்.ராஜா கேட்டிருந்தார். அதற்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. எச்.ராஜாவுக்கு ஒரு விஷயத்தை நாம் நினைவூட்ட வேண்டும். சிலைக்கு உயிர் இருந்தால் அது எப்படி சிலையாக இருக்க முடியாதுதான். ஆனால், பெரியார் சிலைக்கு உயிர் இருக்கிறது. அவர் போதித்த கோட்பாடுகள் உயிரோடு உலவுகின்றன. தமிழகத்தின் உயிர்நாடியாக பெரியாரின் போதனைகள் இருக்கின்றன. இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா மாநிலங்களில்தான் மனிதநேயம் மக்கிப்போய்விடாமல் பாதுகாப்பாக இருக்கிறது. இன்றுவரை மக்களைப் பிரித்தாளும் ஆரிய சூழ்ச்சிகள் இங்கு எடுபடாமல் போவதற்கு உயிர்ப்போடு இருக்கிற பெரியாரின் கோட்பாடுகள்தான் காரணம் என்பதை எச்.ராஜா உணரவேண்டும்.

 

h raja


 

பெரியார் சிலைக்கு உயிர் இருக்கிறதா என்று கேட்கும் எச்.ராஜா கோவில்களில் இருக்கிறது சிலைகளுக்கு உயிர் இருக்கிறதா என்பதை ஏன் சோதித்து சொல்லக்கூடாது. அப்படி உயிர் இருந்தால், ஏன் ஆயிரக்கணக்கான சிலைகள் காணாமல் போயின. கோவில்களை ஏன் பூட்டிப் பாதுகாக்கிறரார்கள் என்ற கேள்விக்கெல்லாம் அவர் பதில் சொல்வாரா?

 

பெரியார் உயிர்ப்போடு வாழும் சகாப்தம். அவருடைய தேவை இன்னும் பல காலத்துக்கு வேண்டியிருக்கிறது. அவர் எழுப்பிவிட்டுச் சென்ற ஏராளமான வினாக்களுக்கு விடைசொல்ல முடியாத எச்.ராஜாக்கள், சிலைக்கு உயிர் இருக்கிறதா என்பதுபோன்ற கேள்விகளைத்தான் கேட்க முடியும்!