Skip to main content

ஓபிஎஸ் வாரிசுக்கு பேரவை, ஜெயக்குமார் வாரிசுக்கு...

Published on 04/06/2018 | Edited on 04/06/2018

எந்தப் பதவியும் இல்லாமல், கடந்த நான்கைந்து மாதங்களாக தங்க. தமிழ்ச்செல்வனை எதிர்த்து தீவிர அரசியல் செய்து கொண்டிருந்த தன் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு, தேனி மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளர் பதவியை வழங்கியுள்ளார் ஓ.பி.எஸ்.

கடந்த எம்.பி. தேர்தலில் தேனியில் அ.தி.மு.க. வேட்பாளராக பார்த்திபன் நிறுத்தப்பட்டார். ஓ.பி.எஸ்.சும் மகன் ரவீந்திரநாத்தும் கடுமையாக வாக்கு சேகரித்தார்கள். தி.மு.க. வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்தைக் காட்டிலும், மூன்று லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று ஜெயித்தார் பார்த்திபன்.

 

familypolitic

 

சீட் எதிர்பார்த்துக் கிடைக்காத நிலையிலும் தொகுதியில் சிறப்பாக வேலை செய்த ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு இளைஞர் -இளம்பெண்கள் பாசறை மா.செ. பொறுப்பைக் கொடுத்தார் ஜெ. ஆனால் 2 ஆண்டுகளில் ரவீந்திரநாத்திடம் இருந்த பாசறை மா.செ. பதவியைப் பிடுங்கி, தங்க.தமிழ்ச்செல்வன் ஆதரவாளரான மணி என்பவருக்குக் கொடுத்துவிட்டார்.

அன்றிலிருந்து அரசியலை விட்டு ஒதுங்கிய ரவீந்திரநாத், வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அதிகம் சுற்றத் தொடங்கினார்.

 

 


ஓ.பி.எஸ்.சுக்கு துணை முதலமைச்சர் பதவியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் கிடைத்தபிறகு மீண்டும் மாவட்டத்தில் தங்க.தமிழ்ச்செல்வனை எதிர்த்து வலம் வரத் தொடங்கினார். "கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் எப்படி வேலை செய்ய முடியும்?'' என்று தன் தந்தையை நச்சரித்துக் கொண்டே இருந்தார் என்கிறார்கள் தேனி மாவட்ட நிர்வாகிகள்.

"இப்போது தங்க.தமிழ்ச்செல்வனின் ஆதரவாளரான உத்தமபாளையம் ரபீக்கிடம் இருந்த ஜெ. பேரவை மா.செ. பொறுப்பைப் பிடுங்கி தன் மகனிடம் கொடுத்திருக்கிறார் ஓ.பி.எஸ். ரவீந்திரநாத்குமாரிடம் ஒரு பழக்கம் உண்டு. கட்சியில் சீனியர்களை மதிக்கவேமாட்டார் அவர். அதனால்தான் இவரை முன்பு பாசறையிலிருந்து வெளியேற்றினார் ஜெ.'' என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

 

 


"இல்லையில்லை... 6 மாதமாக ஜல்லிக்கட்டுக் கூட்டங்கள், அரசு விழாக்கள், பொதுநிகழ்ச்சிகள், குரங்கணி தீவிபத்தில் உதவி செய்தது என தீவிரம் காட்டினார். ஜெ. பிறந்தநாளை முன்னிட்டு 7777 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, மாவட்டத்தில் இமேஜை உருவாக்கியிருக்கிறார். தங்க.தமிழ்ச்செல்வனை எதிர்த்து மிகச்சரியாக ரவீந்திரநாத்தால்தான் வேலை செய்ய முடியும்'' என்பது ஓ.பி.எஸ். ஆதரவாளர்களின் கருத்து.

ஓ.பி.எஸ். மகனுக்கு தேனி மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளர் பொறுப்பு. இதேபோல அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தனுக்கு ஜெ. பேரவை இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் கடந்த எம்.பி. தேர்தலில் ஜெ.யால் தென்சென்னை வேட்பாளராக்கப்பட்டு வென்றவர். இவர்களோடு இதே ஜெ. பேரவையில், பா.வளர்மதியின் மகன் மூவேந்தனுக்கு துணைச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க.வில் முக்கிய அமைச்சர்கள் மூவரின் வாரிசுகள் எதிர்ப்பின்றி அரசியலில் களமிறக்கப்பட்டுள்ள நிலையில்... 'குடும்ப அரசியலா' என குமுறுகிறார்கள் ர.ர.க்கள்.