Skip to main content

"செருப்பு எல்லாருடைய காலிலும் இருக்கும்... போக்கிரி மாதிரி பேசக் கூடாது..?" - நாஞ்சில் சம்பத் காட்டம்!

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

h

 

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் திமுக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்துவருகிறார்கள், பாஜக அண்ணாமலை திமுக அமைச்சர்களைக் குறிவைத்து விமர்சனம் செய்துவரும் சூழ்நிலையில், மற்றொருபுறம் நாம் தமிழர் சீமான், "எங்களின் கொள்கைகளை, கோட்பாடுகளை, எங்களை விமர்சனம் செய்பவர்களை செருப்பைக் கழட்டி அடிக்க வேண்டும் போல் இருக்கிறது" என்று பேசியுள்ளார். சீமானின் பேச்சுக்குப் பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேல்விகளுக்கு அவரது அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

தமிழ்நாடு பாஜக தலைவர் தொடர்ந்து திமுக அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களை தெரிவித்துவருகிறார். ஒவ்வொரு நாளும் அமைச்சர்கள் மீது நாங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைப்போம், அதற்கு அவர்கள் பதில் கூறியே ஆக வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறிவருகிறாரே, இவர்களுக்குள்ளான மோதலை எப்படி புரிந்துகொள்வது?

 

அரசியல் அநாதைகளின் பேச்சுக்களை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. அவர்கள் வாயால் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள், நீங்கள் பார்த்துக்கொண்டே இருங்கள். நான்கு பாஜக எம்எல்ஏக்களும் திமுகவுக்கு வரப் போகிறார்கள். தொகுதி மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். பாஜகவிலிருந்து அவர்கள் என்ன நல்லது செய்ய முடியும். எனவே அவர்கள் திமுகவுக்கு வரலாம் என்று அவர்கள் நினைக்கலாம். ஸ்டாலின் அவர்களின் அணுகுமுறையை அவர்கள் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், மக்கள் நலன் சார்ந்த பணிகளை அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று ஆய்வு செய்கிறார், மக்களுக்கான அரசாகக் இந்த அரசை அவர் கொண்டுசெல்கிறார். ஆனால் பாஜகவில் என்ன நடக்கிறது. மோடி சாப்பிடுகிற காளான் 6 லட்சம், போடுகிற சட்டை 11 லட்சம், பயணிக்கின்ற விமானம் 6 ஆயிரம் கோடி. இப்படி திமுக நல்லது செய்கிறது என்று பாஜக எம்எல்ஏக்கள் நினைத்தால் நாளைக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். 

 

ஸ்டாலின் அவர்கள் காவல் நிலையம் சென்று ஆய்வு செய்வது, மாணவர் விடுதிக்குப் போய் உணவின் தரத்தை சோதிப்பது, மற்ற இடங்களுக்குச் சென்று சோதனை செய்வது என்பது வாக்கு அரசியலை முன்னிறுத்தி செய்யப்படுகிறது என்று சில கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

 

ரொம்ப நல்லது அது. வாக்கு அரசியலை செய்துதான் ஆக வேண்டும். பாஜக போன்ற மதவாதிகள் தமிழகத்தில் ஊடுருவாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமெனில் அதை நாம் செய்துதான் ஆக வேண்டும். அண்ணன் ஸ்டாலின் தமிழ்நாட்டை கோட்டையாக மாற்ற வேண்டும் என்று திட்டமிடுகிறார். அதற்கான களத்தை தற்போது படிப்படியாக உருவாக்கிவருகிறார். நாங்கள் வாக்கு அரசியல் செய்வோம், அவர்கள் நாக்கு அரசியல் மட்டும்தான் செய்வார்கள். அவர்களால் நல்லது செய்வதை எப்போதும் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே எதையாவது பேசிக்கொண்டேதான் இருப்பார்கள், அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.


சீமான் ஒரு விழாவில் பேசும்போது, "நாங்கள் சில விஷயங்களை முன்னெடுத்தும் செல்கிறோம், ஆனால் எங்களை ஃபாசிஸ்ட்டுகள், தீவிரவாதிகள் என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் போல் தோன்றுகிறது" என்று பேசியுள்ளார். சீமானின் இந்தக் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

ஒரு கட்சியின் தலைவர் யாராவது இப்படி பேசி பார்த்துள்ளீர்களா? ஒரு கட்சிக்குத் தலைவராக இருப்பவர் போக்கிரி போன்று  பேசலாமா? செருப்பு அவரிடம் மட்டும்தான் இருங்கிறதா, எங்களிடம் இல்லையா? காலில் கிடக்கும் செருப்பைக் கையில் எடுக்க எவ்வளவு நேரம் ஆகிவிட போகிறது. அரசியலில் விமர்சனம் செய்தால் நாகரிகமாக செய், நாணயமாக செய், அநாகரிக பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும். யாரோ இட்ட வேலையைச் செய்யும் சீமான், அந்த வேலையை மட்டும் செய்யட்டும். இப்படி அடுத்தவர்களை அவமரியாதை செய்யும் விதமாக பேசக் கூடாது.   இதோடு அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். முதலில் அவர்கள் கட்சியில் ஜனநாயகத்தைக்ட கொண்டு வரட்டும். இல்லை என்றால் அவர்கள் கட்சியில் இருக்கும் நபர்கள் ஏன் அடுத்த கட்சிக்கு செல்லப்போகிறார்கள். எனவே வாய் சவடால் விடுவதை அவர் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.