Skip to main content

எம்ஜிஆர் அரசை விமர்சித்து நான் எடுத்த படம்; தோட்டத்திற்கு அழைத்து ஷாக் கொடுத்த எம்ஜிஆர் - எஸ்ஏசி பேச்சு

Published on 07/11/2022 | Edited on 07/11/2022

 

கதச

 

எம்ஜிஆர் பெயரில் அறக்கட்டளை மற்றும் சினிமா நிறுவன துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எஸ்.ஏ. சந்திரசேகர் எம்ஜிஆர் தொடர்பாக சுவாரசிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, " இன்றைக்கு எம்.ஜி.ஆர் பெயரை வைத்து இந்த நிறுவனத்தை உருவாக்குகிறார்கள். அதனை நல்ல முறையில் கொண்டு செல்ல வேண்டும். ஏனென்றால் அதில் எம்.ஜிஆர் பெயர் இருக்கிறது. அதனால் அதனை சிறப்பாகக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. எம்ஜிஆரிடம் நான் மூன்று படத்தில் துணை இயக்குநராக இருந்துள்ளேன். அவர் வேலை செய்யும் இடத்தில் எப்படி இருப்பார் என்பதை யாரையும் விட எனக்கு மிக நன்றாகத் தெரியும். மூன்று கேரியரில் எம்ஜிஆர் வீட்டிலிருந்து சாப்பாடு வரும். அது அவர் மட்டும் சாப்பிட வேண்டும் என்ற நோக்கில் இருக்காது. அங்கு வேலை செய்யும் யாரும் சாப்பிடாமல் இருக்கக்கூடாது என்ற நோக்கில் பெரிய கேரியரில் வரும். எம்ஜிஆர் சாப்பிட்டு முடித்ததும் அனைவரும் போய் அதைச் சாப்பிடுவார்கள். அதை நானும் சாப்பிட்டு இருக்கிறேன். 

 

அதே போல் அவர் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார். பெரிய புகழின் உச்சியில் இருந்திருக்கிறார். முதலமைச்சர் ஆகி இருக்கிறார். ஆனால் அவரிடம் அடுத்தவர்களை மதிக்கும் பண்பு மட்டும் குறைந்ததில்லை. அவர் படங்களில் நான் பணியாற்றும் நேரங்களில் இதை நேரடியாகவே பார்த்திருக்கிறேன். அவர் யாரையும் குறிப்பாக லைட் மேன் பையனில் இருந்து இயக்குநர் வரை மிஸ்டர் என்று கூறி பெயரைச் சொல்லி அழைக்கும் பண்பைப் பெற்றிருந்தார். லைட் மேன் பையன் தானே என்று வாடா போடா என்று ஒருபோதும் அழைத்ததில்லை. எல்லோரையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கும் பழக்கம் உடையவர் அவர்.

 

நான் துணை இயக்குநராக இருந்த காலத்தில் மற்ற நடிகர்களுக்கும் இவருக்கும் உள்ள பெரிய வித்தியாசம் வள்ளல் குணம். அது சாப்பாட்டில் ஆரம்பித்து எந்த உதவி கேட்டாலும் தயங்காமல் கொடுப்பார். அது அந்த காலத்தில் வேறு யாரிடமும் இல்லாத ஒன்று. ஏன் இந்தக் காலத்தில் கூட அப்படி யாரையும் நான் பார்த்ததில்லை. இப்படிப்பட்ட அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட நட்பு இருந்ததை இந்த நேரத்தில் கூற வேண்டும். ஏனென்றால் அப்போது இருந்தவர்கள் பலபேர் இங்கே இருக்கிறீர்கள். அதனால் அந்த நினைவுகளை இங்கே கூற வேண்டும் என்று நினைக்கிறேன். இப்போது நினைத்தாலும் அந்த சந்திப்பு மிக அழகாக என் நினைவில் வந்துபோகும்.

 

நான் 1987ம் ஆண்டு கலைஞர் வசனத்தில் நீதிக்கு தண்டனை என்று எம்ஜிஆர் அரசை விமர்சனம் செய்து படமெடுக்கிறேன். இங்கே வந்திருக்கின்ற பல பேருக்கு அது தெரியும். அப்போது தமிழகத்தின் முதல்வராக அவர் இருந்து வருகிறார். படம் வெளிவரக்கூடாது என அப்போது சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இருந்தும் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி படம் 1987ம் ஆண்டு மே மாதம் முதல் தேதி வெளியானது. படம் வெளியாகி 30 நாட்களைக் கடந்த நிலையில் திடீரென எம்ஜிஆரிடம் இருந்து அழைப்பு வந்தது. ஏன் நம்மை அழைக்கிறார் என்று கூட எனக்கு அப்போது புரியவில்லை. நிறையக் குழப்பத்தோடே அவரைப் பார்க்கச் செல்கிறேன். எனக்கு 4.30 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுத்தார்கள். ஆனால் எனக்குப் பின் வந்தவர்கள் எல்லாம் அவரைச் சந்தித்துவிட்டுச் செல்கிறார்கள். எனக்கு மேலும் பதற்றமாக இருக்கிறது.

 

இவரை விமர்சனம் செய்து படம் எடுத்துள்ளோம். நம்மை வேறு இவர் கூப்பிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார். என்ன நடக்கப்போகிறதோ என்ற குழப்பத்திலிருந்தேன். திடீரென என்னை உதவியாளர் அழைக்கவே நான் உள்ளே சென்றேன். என்னைப் பார்த்ததும் வாங்க மிஸ்டர் சேகர் என்றார்.  என்ன கேட்பாரோ என்று நினைத்துக் குழம்பி நின்ற என்னிடம் எம்ஜிஆர் பிக்சர் நிறுவனத்தில் முன்பு அடிக்கடி படம் எடுத்து வந்தோம். தற்போது அது தடைப்பட்டுள்ளது. நீங்கள் வருடத்திற்கு இரண்டு படங்கள் எடுத்தால் நன்றாக இருக்கும். உங்களுக்கு என்ன வேண்டும், நான் செய்து தருகிறேன் என்றார். இதுதான் எம்ஜிஆர். தன்னை விமர்சனம் செய்து படம் எடுத்திருந்தாலும் அதை எதைப்பற்றியும் கவலைப்படாமல் திறமையை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக என்னை நம்பி இந்த வேலையைக் கொடுக்க நினைத்தார்" என்றார்.