Skip to main content

நீதித்துறையை காவித்துறை ஆக்குகிறார் மோடி?

Published on 18/04/2018 | Edited on 18/04/2018

மோடி தலைமையில் பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே நீதித்துறையையும், ஊடகத் துறையையும் கைப்பற்றும் முயற்சி தொடங்கிவிட்டது.

 

judiciary angel


 

 

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கமே இந்தியாவின் அடித்தளமான வேற்றுமையில் ஒற்றுமையை சீர்குலைப்பதுதான்.

 

நீதிமன்றத்தின் மூலம் தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெறுவது, அந்தத் தீர்ப்பை சரியென்பதுபோல ஊடகங்கள் மூலமாக பிரச்சாரம் செய்து மக்கள் மனதில் பதியச் செய்வதுதான் பாஜகவின் நோக்கம்.

 

1977 ஆம் ஆண்டு மத்தியில் ஜனதாக்கட்சி ஆட்சி பொறுப்பேற்றபோது, "ஜனசங்" என்ற பெயரில் இயங்கிய பாஜக, மொரார்ஜி தேசாயிடம் வெளியுறவுத்துறை, தகவல் ஒலிபரப்புத்துறை ஆகியவற்றை கேட்டுப் பெற்றது.

 

அப்போதிருந்து, வெளிநாட்டுத் தூதரகங்களிலும், அரசு செய்தி நிறுவனங்களிலும், நாட்டில் அப்போதைய முக்கியமான ஊடகங்களிலும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளை உள்ளே நுழைத்தார்கள். அந்த ஆட்சி இரண்டரை ஆண்டுகளே பதவியில் இருந்தாலும் அவர்கள் நினைத்ததை நிறைவேற்றினார்கள்.

 

இரட்டை உறுப்பினர் பிரச்சனையில் ஜனசங் ஜனதாக் கட்சியிலிருந்து வெளியேறியதால் ஆட்சி கவிழ்ந்தது. ஆனால், அதைத் தொடர்ந்து ஜனசங் என்ற பெயர் மாற்றப்பட்டு பாரதிய ஜனதாக் கட்சி ஆக அரசியலில் புதிய முகமூடியை அணிந்தது. மெல்ல அது தனது இருப்பை பலப்படுத்தத் தொடங்கியது.

 

எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதால், 2014 ஆம் ஆண்டு பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றாலும், அது பெற்ற வாக்குகள் 31 சதவீதம்தான்.

 

 

modi



 

 வெறும் 31 சதவீத வாக்காளர்களின் ஆதரவில் ஆட்சிக்கு வந்த பாஜக ஒட்டுமொத்த இந்தியாவும் தனது பிடிக்குள் வந்துவிட்டதாக பில்டப் செய்யத் தொடங்கியது. அதன்விளைவாக, தான் வைத்ததே சட்டம் என்ற சர்வாதிகார மனப்பான்மை பிரதமர் மோடியைத் தொற்றிக்கொண்டது.

 

டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, தூய்மை இந்தியா என்று வெட்டி அறிவிப்புகளை பூதாகர விளம்பரமாக்கி அந்த வெளிச்சத்தில் தனது இமேஜை காப்பாற்ற மோடி முயற்சி செய்தார். ஆனால், அவருடைய எந்த திட்டமும் சாமானியர்களின் வாழ்க்கைக்கு உதவவில்லை. இருந்த வளர்ச்சியையும் சீரழிக்கும் வகையில் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியடையச் செய்தார். இந்தியா முழவதும் மக்கள் தங்களிடமிருந்த சேமிப்பை கையில் வைத்துக்கொண்டு வங்கிகள் முன் காத்திருக்கச் செய்தார். இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதுவரை எவ்வளவு பணம் வங்கிகளுக்கு திரும்பக் கிடைத்துள்ளது என்பதைக்கூட அரசு அறிவிக்கவில்லை.

 

அத்துடன் ஜிஎஸ்டி என்ற வரிவிதிப்பை அறிமுகப்படுத்தினார். இதன்விளைவாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்தன. கார்பரேட்டுகளுக்கு மிகப்பெரிய சலுகை கிடைத்தது. மோடி பொறுப்பேற்றது முதல் அவருடைய முடிவுகள் சாதாரண மக்களை எல்லா வகையிலும் சீரழித்து வருகின்றன.

 

பாஜகவுக்கு சாதகமான தீர்ப்புகள்!

 


 

bjp

 

 

இந்நிலையில், மோடி விரும்பும் வகையிலேயே நீதிமன்ற நடவடிக்கைகளும் அமைந்திருப்பதாக பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழும் வகையில் பல தீர்ப்புகள் அமைந்திருக்கின்றன.

 

2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் அமித் ஷா மீதான வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. முன்னதாக அவருக்கு சாதகமாய் இல்லாத லோயா என்ற நீதிபதி மர்மமான முறையில் இறந்தார்.

 

நீதிபதிகளை அச்சுறுத்தும் போக்கு தொடங்கியது. தங்களுக்குச் சாதகமான தீர்ப்பை பெறுவதற்காக சாதகமான நீதிபதிகளை நியமிக்கும் போக்கும் அதிகரித்தது. இந்நிலையில்தான் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக நீதிபதிகளே பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் நிலை உருவானது.

 

ஜெயலலிதா வழக்கில் தாமதப்படுத்தப்பட்ட தீர்ப்பு!

 

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மிகவும் உறுதியான தீர்ப்பை நீதிபதி குன்ஹா வழங்கியிருந்தார். ஜெயலலிதாவைக் காப்பாற்ற குமாராசாமி என்ற நீதிபதியை சரிக்கட்டினர். அவர், குன்ஹாவின் தீர்ப்பை ஏற்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிக்கிறேன் என்றும் அவசரமாக தீர்ப்புக்கூறி எழுந்தார். இந்தத் தீர்ப்பின் பின்னணியிலும் பாஜக அரசின் கருணை இருப்பதாக கூறினார்கள். ஏனெனில், குன்ஹாவின் தீர்ப்பு சரிதான் என்றும், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

ஜெயலலிதா மரணம் அடைந்தபிறகு இந்தத் தீர்ப்பு வந்ததில் பலரும் பலவித சந்தேகங்களை எழுப்பினார்கள். ஜெயலலிதாவை சிறைக்கு செல்லாமல் தடுக்கவே இந்த தீர்ப்பு தாமதப்படுத்தப்பட்டது என்றார்கள் சிலர். வேறு சிலரோ, ஜெயலலிதா இல்லாத நிலையில் சசிகலாவையும் அவருடைய குடும்பத்தினரையும் சிறைக்கு அனுப்பவே தீர்ப்புப் பெறப்பட்டது என்றார்கள்.

 

18+11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு என்னாச்சு?

 

எப்படியோ, மோடி அரசு நினைத்தால் நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியும் என்ற கருத்து உருவாக்கப்பட்டது. தமிழக அரசு விவகாரத்துக்கு வரும்போது, இந்தக் கூற்று இன்னும் உறுதிப்படுகிறது. மோடியின் தயவில்தான் எடப்பாடி அரசு பதவியில் நீடிக்கிறது என்ற கருத்து வலுப்பெறுகிறது. சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்த 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் ஏன் தகுதிநீக்கம் செய்யப்படவில்லை என்பது குறித்த வழக்கும் விசாரணை முடிந்துவிட்டது.

 

இதுபோன்ற வழக்குகளில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்புகள் முன்னுதாரணமாக இருக்கும் நிலையில், தீர்ப்பு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.

 

ஆனால், புதுவையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாக எம்எல்ஏக்களாக நியமித்த மூன்று பாஜகவினர் தொடர்ந்த வழக்கில் அவர்களுடைய நியமனம் செல்லும் என்று உடனடியாக தீர்ப்பு வழங்கப்படுகிறது.

 


 

cauvery

 

 

காவிரி இறுதித் தீர்ப்பில் மோடி அரசு மெத்தனம்!

 

இவற்றையெல்லாம் விட, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பில், இதுவே இறுதித்தீர்ப்பு என்றும், மேற்கொண்டு அப்பீலோ, சீராய்வு மனுவோ ஏற்கப்படமாட்டாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆறுவாரங்களுக்குள் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய மத்திய அரசு, ஆறுவாரங்கள் முடிந்தபிறகு, ஸ்கீம் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு மேலும் காலதாமதத்தை ஏற்படுத்துகிறது. உச்சநீதிமன்றம் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிக்காமல் ஒரு மாதம் கால அவகாசம் கொடுக்கிறது.

 

முத்தலாக் – எஸ்.சி-எஸ்.டி. பிரிவுகளுக்கு எதிரான தீர்ப்புகள்!

 

எஸ்.சி-எஸ்.டி. பிரிவினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும், முத்தலாக் விவகாரத்திலும் பாஜகவின் ரகசிய செயல்திட்டத்தில் உள்ளவாறு உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை வழங்குகிறது. அந்த தீர்ப்புகளால் சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை பறிக்கப்பட்டு நாட்டில் கடும் கொந்தளிப்பு உருவாகிறது.

 

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கிலும், நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் மக்களுடைய மனநிலைக்கு எதிராகவே இருந்தது.

 

மொத்தத்தில் சுயேச்சையாக இயங்க வேண்டிய தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை, மத்திய குற்றப் புலனாய்வுத்துறை, தேசிய புலனாய்வு நிறுவனம், நீதித்துறை, ஊடகத்துறை என எல்லாவற்றிலும் மோடி அரசு நினைப்பதே நடக்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப் பட்டிருக்கிறது என்றே கருத வேண்டியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.