Skip to main content

ஜெயலலிதாவை கட்சியில் சேர்த்ததை நினைத்து எம்.ஜி.ஆர். வருத்தப்பட்டார்! - அதிமுக முன்னாள் எம்எல்ஏ சவுந்தரராஜன்!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

hj


தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிகப்படியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதிமுக 66 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. திமுக தரப்பில் மு.க.ஸ்டாலின் முதல்வராக நேற்று பொறுப்பேற்ற நிலையில், அதிமுக தரப்பில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இருவரும் விட்டுக்கொடுக்க முன்வரவில்லை. இந்நிலையில், அதிமுகவின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கேள்விகளுக்கு அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரராஜனிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 


எம்.ஜி.ஆர். ஆரம்பித்தபோது இருந்த அதிமுகவையும், தற்போது இருக்கின்ற அதிமுகவையும் எப்படிப் பார்க்கிறீர்கள்? 


எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக என்பது அண்ணாவின் கொள்கைகளை அப்படியே தாங்கி உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம். அதனால், தான் அண்ணாவின் அரசியலை எம்ஜிஆர் தொடர்ந்து கொடுத்துவந்தார். இன்னும் சொல்லப்போனால் அண்ணா என்ன நினைத்தாரோ அதைச் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அண்ணாவின் பெயரையே தன்னுடைய கட்சிக்கு அவர் வைத்தார். அண்ணாவின் படத்தைக் கொடியில் வைத்து மரியாதை செய்தார். எம்ஜிஆர் இருந்த வரையில் அதிமுக சரியாக இருந்தது என்றாலும் ஜெயலலிதாவின் வருகைக்குப் பிறகு அதிமுக சிறிது மாற ஆரம்பித்தது. இதனால் அப்போது நான் எம்ஜிஆரிடம் சென்று சண்டையிட்டேன். உங்களுக்குத் திரைத்துறையில் எத்தனை நண்பர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நாம் அண்ணா, பெரியாரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடத்துகிறோம். அதில், நமது கொள்கைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத ஒரு ஆளை இங்கே கொண்டு வருவது மிகவும் தவறு, அது நம் கட்சியையே சீரழித்துவிடும் என்று கூறினேன். 


இதற்கு எம்ஜிஆரின் பதில் என்னவாக இருந்தது, நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டாரா? 
 

இதற்குப் பதில் சொல்லக்கூடிய மன நிலையில் அவர் இல்லை. அவர் ஒரு மயக்கத்தில் இருந்தார், என்னிடம் வாதாட அவர் விரும்பவில்லை. நான் கேட்கும் கேள்விகள் எல்லாம் நிஜமானது. இந்த இயக்கம் ஆரம்பிக்கும் போது எம்ஜிஆர் என்னை அழைத்து 10 மணி நேரம் பேசினார். அவருடைய வரலாறு, திமுக செய்கின்ற தவறுகள், அண்ணாவின் எண்ணங்களை நாம் காப்பாற்ற வேண்டும் என்று பல்வேறு விஷயங்களை நேருக்கு நேராக என்னிடம் பேசினார். இதை ஜெயலலிதா வருகைக்குப் பிறகு நான் அவரிடம் எடுத்துச் சொன்னேன். என்னிடம் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு எவ்வளவோ எடுத்துக் கூறிவிட்டு, தற்போது இவர்களைக் கட்சியில் கொண்டு வருகிறீர்களே என்றேன். அவரிடம் பதில் இல்லை. பின்னாளில் உங்கள் புகழுக்குக் கூட களங்கம் வரும், நீங்கள் வருத்தப்படக் கூடும் என்றேன். ஆனால் அதனால் அப்போது எந்தப் பயனுமில்லை. 


பின்னாளில் எம்ஜிஆர் இது குறித்து உங்களிடம் வருத்தப்பட்டது உண்டா?


நிறைய வருத்தப்பட்டிருக்கார். நக்கீரன் பதிப்பகத்தில் வெளிவந்த 'வணக்கம்' புத்தகத்தில் எம்ஜிஆர் இதனால் அழுதிருக்கிறார் என்று வலம்புரி ஜான் பதிவு செய்திருக்கிறார். அதுவும் 1984ம் ஆண்டு ஜெயலலிதாவை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கிய பிறகு எம்ஜிஆரை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்தினார் அந்த அம்மையார். எம்ஜிஆர் எதற்காக அந்த அம்மையாரை கட்சிக்குக் கொண்டு வந்தாரோ அது 84ம் ஆண்டுக்குப் பிறகு நிறைவேறவில்லை. அதனால் பின்னாளில் அவர் வருந்தியிருக்கிறார், அழுதிருக்கிறார். இது எல்லாம் நடந்தது என்பது மட்டும் உண்மை. 

 

2021 தேர்தலுக்கு முன்பு ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தினீர்கள். அதில் அதிமுக பாஜக கூட்டணி வைக்கக் கூடாது, அப்படி அமைந்தால் அது தற்கொலைக்குச் சமம் என்று தெரிவித்திருந்தீர்கள். தற்போது தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
 

நான் என்ன சொன்னேனோ அதுதான் தற்போது நடைபெற்றுள்ளது. அதனை பன்னீர்செல்வம், எடப்பாடி இருவரும் தற்போது உணர்கிறார்கள். அதைத்தான் நான் முன்கூட்டியே சொல்லியிருக்கிறேன். ஆகையால் அதிமுகவுக்கு பாஜகவால் அழிவு என்பதுதான் தற்போது ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி போவதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பாஜக கூட்டணி என்பது மிக முக்கியக் காரணமாக அமைந்தது. தமிழக மக்களுக்கு மன்னித்து விடும் மனநிலை உண்டு. ஆனால் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் அவர்கள் நம்மை அழித்துவிடுவார்கள் என்று நினைத்ததால், இந்த தோல்வி அதிமுகவுக்கு வந்து சேர்ந்துள்ளது.