தமிழக மாணவர்களை நம்ப வைத்து கழுத்தறுத்த மத்திய-மாநில அரசுகளின் நீட் தேர்வு மோசடிக்கு முதல் பலி, அரியலூர் அனிதா. அதனால்தான் கடந்த இதழ் அட்டைப் படத்தில் "அனிதாவைக் கொன்ற நீட்' என்ற தலைப்புடன் அதற்கு காரணகர்த்தாக்கள் யார் என்பதை படத்துடன் வெளியிட்டது நக்கீரன்.
நீட் தேர்வு யாரை எந்தளவு பாதிக்கும் என்பதை நக்கீரன் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததோ அதற்கு மிகச் சரியாகப் பொருந்தியவரான, கிராமப்புற-ஏழை-தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவியான அனிதா தற்கொலை செய்திருப்பதன் மூலம் அவரைப் போன்ற மன உளைச்சலுக்கும் பரிதாப முடிவுக்கும் இன்னும் எத்தனை மாணவ-மாணவியர் ஆளாவார்களோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்றும் குறைந்தபட்சம் தமிழகத்திற்கு மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள்-சமூக நீதி அமைப்பினர்-அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தார்கள். மத்திய அரசிடம் வலியுறுத்தி இதனை நிறைவேற்ற வேண்டிய மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோது தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவேயில்லை. அவருடைய அமைச்சரவையில் பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன் நீட் தேர்வை நடத்துவதற்காக கையெழுத்துப் போட்டு தமிழக மாணவர்களுக்கு துரோகம் செய்தார். இதனை கடந்த பிப்ரவரி மாதத்திலேயே ’"நீட் நிச்சயம்- எதிர்கால டாக்டர்களே உஷார்' என்ற தலைப்பிட்டு நக்கீரன் எச்சரித்தது.
முன்னாள் முதல்வரும் இந்நாள் முதல்வரும் பலமுறை டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார்களே, ஒருமுறையாவது நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களைக் காப்பாற்றும் உத்தரவாதத்தைப் பெற்றுத் தந்தார்களா? இருக்கிற பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவும், இழந்த பதவியைத் திரும்பப் பெறவும்தான் டெல்லிக்கு காவடி எடுத்தார்களே தவிர, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் நடவடிக்கையை எடுக்கவில்லை. அதனால்தான் நீட் தேர்வு தமிழகத்திலும் கட்டாயமானது.
அந்தத் தேர்வு எழுதச் சென்ற மாணவர்களில், குறிப்பாக மாணவிகள் நடத்தப்பட்ட விதம் உச்சகட்ட கொடுமை. சோதனை என்ற பெயரில் அவர்களின் ஆடைகளைக் கிழித்து, தலைமுடியை கலைத்து, அணிகலன்களை கழட்ட வைத்து, கத்திரிக்கோலால் வெட்டி, பெற்றோர்கள் முன்னிலையிலேயே அலங்கோலப்படுத்தியபோதே நீட் தேர்வு எத்தகைய கொடூரமானது என்பது புரிந்தது. மோடியின் குஜராத் மாணவர்களுக்கு எளிமையான கேள்வித்தாளும், சமூகநீதி தவழும் தமிழக மாணவர்களுக்கு கடினமான கேள்வித்தாளுமாக ஒரே நுழைவுத் தேர்வில் இருவிதமான அணுகுமுறை என்ற மோசடியும் நீட் தேர்வில் நிகழ்த்தப்பட்டது.
இவை எல்லாவற்றையும்விட பெரிய மோசடி, தேர்வு எழுதி முடித்தபிறகும் "தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்' என்ற போலியான வாக்குறுதியை மாநிலத்தை ஆள்பவர்களும், மத்திய அரசில் அங்கம் வகிப்பவர்களும் தொடர்ந்து அளித்து ஏமாற்றிக் கொண்டே இருந்ததுதான். எல்லாம் முடிந்தபிறகும் "அவசர சட்டம் இயற்றினால் ஆதரிப்போம்' என்று சொன்ன மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மோசடியை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது.
மத்திய அமைச்சரின் வார்த்தைகளையே வாந்தி எடுப்பதுபோல தமிழக அமைச்சர்களும் சுகாதாரத்துறைச் செயலாளரும் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். டெல்லிக்கு அடிக்கடி சென்ற அமைச்சர்கள், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் கொடுத்த நம்பிக்கைகள் ஒளிப்பதிவுகளாக உள்ளன.
அதை நம்பிய மாணவர்களும் அவர்களது பெற்றோரும் எத்தனையெத்தனை கனவுகளை வளர்த்தார்கள்! அந்தக் கனவுகள் பொசுங்கியதால் மனதளவில் நடைபிணமான பெற்றோர் ஏராளம், மாணவிகளின் எண்ணிக்கை ஏராளம். விரக்தியிலும் வேதனையிலும் அவர்களில் பலர் என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்த வேளையில்தான், தாங்க முடியாத மனஉளைச்சலால் தன் உயிரை மாய்த்திருக்கிறார் மாணவி அனிதா.
தாயின் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்து, கூலித் தொழிலாளியான தந்தை வெளியூரில் உழைத்து அனுப்பும் பணத்தில், ஓலைக்குடிசையில் படிப்பதற்கான வசதிகளோ, கழிப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகளோ இல்லாத நிலையிலும் இரண்டாண்டுகள் கடுமையாகப் படித்து 1200க்கு 1176 மதிப்பெண்கள் பெற்ற அனிதா, மருத்துவப் படிப்புக்கான கட் ஆஃப் மார்க்கும் 196.5% என்ற அளவில் பெற்றிருந்தார். நீட் தேர்வு இல்லையென்றால் சென்னையிலேயே அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கும். கோச்சிங் சென்டரில் படிக்கக்கூடிய வசதியான மாணவர்களுக்கான நீட் தேர்வினால் ஏழை-எளிய-ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கிராமத்து மாணவியான அனிதாவின் மருத்துவக் கனவு தகர்ந்து, அவரது உயிரைப் பறித்துள்ளது.
இது தற்கொலை அல்ல, மத்திய-மாநில அரசுகளின் செயல்பாட்டால் நடந்த பச்சைப் படுகொலை. இன்னொரு அனிதா இங்கே உருவாகிவிடக்கூடாது என்பதே நக்கீரனின் கோரிக்கை. அதே நேரத்தில், அனிதாவுக்கு நேர்ந்த அநீதி தமிழகத்தில் இனி தொடரக்கூடாது. முதல் உயிர்ப்பலியே கடைசியாகவும் இருக்க வேண்டும். அனிதாவுக்கு நேர்ந்த கொடூரத்திற்கு சட்டரீதியான நீதிக்காகவும், தமிழகத்தின் சமூகநீதிக் கொள்கையைக் காக்கும் போராட்டத்திலும் இதழியல் அறத்துடன் நக்கீரன் தன் கடமையைத் தொடர்ந்து செய்யும்.
(ஆசிரியர்)