தெலங்கானா புரட்சிப் பாடகரும் மாவோயிஸ்ட்டுமான கத்தார் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார். அப்போது, தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் மதசார்பற்ற கட்சிகளுக்கு பாலமாக செயல்படுவேன் என்றார். தனித் தெலங்கானா மாநிலம் அமைந்தாலும், மக்கள் தெலங்கானா இன்னும் அமையவில்லை என்று கவலை தெரிவித்தார்.
நிலப்பிரபுத்துவமும், மத அடிப்படைவாதமும் தெலங்கானா மாநிலத்தில் தலைதூக்கியுள்ளது. புதிய நிலப்பிரபுத்துவத்தை முடிவுக்கு கொண்டுவருவதே எனது லட்சியம். இந்த இரண்டு தரப்பினரும் மாநிலத்தில் ஆட்சிக்கு வருவதை தடுக்கவே நான் பிரச்சாரம் செய்வேன் என்று கத்தார் தெரிவித்தார்.
தெலங்கானா மாநிலம் அமைவதற்கான போராட்டத்தில் கத்தார் முக்கிய பங்காற்றியவர். மாவோயிஸ்டான இவருடைய பாடல்கள் மக்களை எழுச்சியூட்டியவை. புரட்சிகர பாடல்களுக்காக இவர் பலமுறை கைது செய்யப்பட்டு மக்கள் போராட்டத்தால் விடுதலை ஆகியிருக்கிறார். இவருயை பாடலைக் கேட்கவே ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.
தெலங்கானா மாநிலம் அமைந்தபிறகு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கத்தாரின் மகன் சூர்யா கிரண் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இவர் காங்கிரஸ் சார்பில் பெல்லம்பள்ளி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது மனைவி மற்று தந்தையுடன் ராகுல் காந்தியை சந்தித்தார்.
கத்தாரின் பாடல்களை கேட்டு உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன். அவர் எழுதி நடித்த புரட்சிகர நாடகம் ஒன்றை பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒருவரை சந்தித்ததில் நான் பெருமைப்படுகிறேன் என்று ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.