Skip to main content

கடைசி கேள்வி, சந்திப்பு, கையெழுத்து - ராஜீவ்காந்தி மரண நொடிகள்

Published on 21/05/2018 | Edited on 22/05/2018

ராஜீவ்காந்தியின் 27-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடுமுழுவதும் அனுசரிக்கப்பட்டுவருகிது. அவர் உயிரிழப்பதற்கு முன் அவருடைய கடைசி கூட்டம், கடைசி சந்திப்பு, கடைசி கேள்வி, கடைசி கையெழுத்து என அவருடைய அந்த இறுதி நிகழ்வுகள் நமது நக்கீரனில் அன்று பிரசுரமானது. அது தற்போது மீண்டும் உங்களுக்காக,
 

rajeev

 


கடைசி கூட்டம்!

 

ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் பூந்தமல்லியில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார மேடையில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரையும், பூந்தமல்லி காங்கிரஸ் வேட்பாளர் சுதர்சனத்தையும் ஆதரித்து பேசினார் ராஜீவ். 

 

அப்போது நேரம் இரவு ஒன்பதரை மணி, கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த ''மைக்'' சரிவர வேலை செய்யாததால்  மைக் இல்லாமலே சில நிமிடங்கள் பேசினார். ரஜீவ்காந்தி பேசிய கடைசி பொதுக்கூட்டம் இதுதான்.

 

கடைசி கேள்வி!

 

வழக்கமாக சென்னை வரும்போதெல்லாம் நிருபர் கூட்டத்திற்கு அதிக நேரம் செலவிடமாட்டார் ராஜீவ்.. ஆனால் விசாகப்பட்டணத்திலிருந்து சென்னை வந்து சேர்ந்தவுடன், விமான நிலையத்தில் சுமார் பதினைந்து நிமிடங்கள் நிருபர்களுடன் சிரித்துப் பேசியபடி கலகலப்பாக பேட்டியளித்தார். பேட்டி முடிந்தவுடன் '' அவ்வளவுதானா..? கேள்விகள் அதற்குள் தீர்ந்துவிட்டதா..?'' என்று கேட்ட ராஜீவ் ''யாராவது கடைசியாக ஒரு கேள்வி கேளுங்கள்...'' என்றார்.

 

''தமிழ்நாட்டில் உங்கள் கூட்டணி ஆட்சியைப் பிடித்தால்  காங்கிரஸ், மந்திரி சபையில் பங்கேற்குமா...?'' என்று அந்தக் கடைசி கேள்வியை கேட்டார் ஒரு நிருபர்.

 

''இந்த யோசனையெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது'' என்று சிரித்தபடி கேட்ட ராஜீவ் . தமிழ்நாட்டில் அதிமுகவே தனியாக அமைச்சரவை அமைக்கும் என்றார். ஆனால் ராஜீவின் வாழ்க்கையிலேயே அதுதான் கடைசி கேள்வி என்பது யாருக்கும் தெரியவில்லை...

 

rajeev

 

 

கடைசி சந்திப்பு!

 

மரணம் நிச்சயிக்கப்பட்டது தெரிந்துதானோ என்னவோ, கடைசி நேரத்தில் தன் முன்னோர்களை சிலை வடிவில் சந்தித்தார்.

 

சென்னை விமான நிலையத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் கத்திப்பாரா சந்திப்பில் காரை நிறுத்தி அங்கிருந்த பிரமாண்டமான நேரு சிலையை பார்த்துவிட்டு கிளம்பினார்.

 

அதேபோல் ஸ்ரீபெரும்புதூர் கூட்ட மேடைக்கு செல்லும் முன் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்தார் அவர்.

 

 

கடைசி கையெழுத்து!

 

ராஜீவ் விமான நிலையத்தில் இருந்து சென்னையில் இறங்கியதும் அவரை பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்த ஒரே நடிகை, சமீபத்தில் (1991-ஆம் ஆண்டு காலகட்டத்தில்) காங்கிரஸில் சேர்ந்த ஜெயசித்ரா.

 

ராஜீவை சந்தித்த ஜெயசித்ரா அவர் கொண்டுவந்த ரோஜா மலர்களை கொடுத்து பொன்னாடை போர்த்தியிருக்கிறார். மேலும் தஞ்சாவூர் தட்டும் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்களும் தெரிவித்திருக்கிறார்.

 

 

ராஜீவ் மிகவும் சந்தோஷமாக இருப்பதை பார்த்ததும் அவரது ''புதிய ராகம்'' படத்திற்கான வாழ்த்து அட்டையில் கையெழுத்து போட்டு தர கேட்டிருக்கிறார். ''படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் ஒன்றும் பிரச்னை இல்லையே'' என்று கேட்டிருக்கிறார். படம் ஜூன் 15-ல் ரிலீஸ் ஆகிறது, நீங்கள் கையெழுத்து போடுங்கள் என்று கேட்டதும் சந்தோசமாக கையெழுத்து போட்டுக்கொடுத்தார். அதுதான் அவர் போடப்போகும் கடைசி கையெழுத்து என்பது தெரியாமல்...

 

ராஜீவ் அதே சந்தோஷத்தோடு வேறு என்ன விஷயம் என்று கேட்க ''நேரம் இருக்கும் போது  இதைக் கேட்டுப்பாருங்கள்'' என்று புதிய ஆடியோ கேசட்டும் கொடுத்திருக்கிறார்.

வாங்கிய கேசட்டை போட்டு கேட்க முடியமால் அவரது வாழ்கை முடிந்து போனது.