Skip to main content

ஜெ. மரணத்தில் விலகிய மர்மம்... நக்கீரன் செய்தி உண்மையானது... 

Published on 11/12/2018 | Edited on 12/12/2018
Jayalalitha



ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது அவருக்கு இதயத்தில் உள்ள மைட்ரல் வால்வில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என நக்கீரன் எழுதியது. நக்கீரன் எழுதியதை உண்மை என ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சியம் அளித்த அப்பல்லோ மருத்துவர் டாக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
 

இந்த மைட்ரல் வால்வு இன்ஃபெக்ஷன் தான் ஜெயலலிதாவை மரணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு நக்கீரன் இணையதளத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் இருதய மருத்துவர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜராகிறார்கள். அவர்கள் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்குவார்கள் என்று எழுதியிருந்தோம். 
 

அந்த மர்மம் இப்பொழுது விலகியுள்ளது. ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட மைட்ரல் வால்வு நோய் தொற்றுக்கு காரணமான பூஞ்சை காளான்களை அகற்றுவதற்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவரை பரிசோதித்த அப்பல்லோ மருத்துவர்களும், மும்பையைச் சேர்ந்த ஒரு மருத்துவரும் கூறியிருந்தனர். 

ஆனால், இதய நோய் மருத்துவ சிசிக்சை நிபுணர் அல்லாத டாக்டர் ரிச்சர்ட் பீலே அவரை ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துப்போக வேண்டாம் என கூறினாரோ, அதேபோல இருதய அறுவை சிகிச்சை வேண்டாம் என கூறினார். 
 

இதனை அப்பல்லோவின் இருதய சிகிச்சை நிபுணரான டாக்டர் கிரிநாத் கடுமையாக எதிர்த்தார். டாக்டர் கிரிநாத், தான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் என்றும், ஜெயலலிதாவுக்கு இருதய அறுவை சிகிச்சை தேவைப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டதால் ஜெயலலிதாவுக்கு நான சிகிச்சை அளிக்கவில்லை என ஆணையத்தில் கூறியிருககிறார்.
 

ஆனால் உண்மையில் ஜெயலலிதாவின் மைட்ரல் வால்வு பூஞ்சை காளான் தொற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என கிரிநாத் உட்பட அனைத்து மருத்துவர்களும் கூறினார்கள். ஆனால் ரிச்சர்ட் பீலே மட்டும் வேண்டாம் என்றார். ரிச்சர்ட் பீலேவின் கருத்தை அப்பல்லோ மருத்துவமனைவும், சசிகலாவும் ஏற்றுக்கொண்டனர். அதனால் ஜெ.வுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை. 

இருதயத்தில் ஏற்பட்ட மைட்ரல் வால்வு பூஞ்சை காளான் நோய் தொற்றால் ஏற்கனவே நுரையீரலில் ஏற்பட்ட pulmonary edema (நுரையிரல் வீக்கம்) என்கிற திரவசேகரிப்பால் அவதிப்பட்டு வந்த ஜெயலலிதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இறப்பதற்கு முன்பு 3 மணி நேரம் மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட ஜெயலலிதா கடைசியாக இருதய நிறுத்தத்தால் தாக்கப்பட்டார். 

இதைப்பற்றி டாக்டர் ஸ்ரீதர் கூறியபோது, உணர்ச்சிவசப்பட்ட ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமி, ஜெயவுக்கு ஏற்பட்ட மிட்ரல் வால்வு பூஞ்சை காளான் தாக்குதலுக்கும், இதயத்தில் ஏற்பட்ட லெப்ட் வென்ரிக்கல் நோய்க்கும் ஏற்ற சிகிச்சையான ஆஞ்சியோ கிராம் சிகிச்சை செய்திருந்தால் அவர் உயிருடன் இருந்திருப்பார் அல்லவா என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்த சிவக்குமார், ஜெ,வுக்கு ஆஞ்சியோ கிராம் அறுவை சிகிச்சை செய்யவில்லை என்பதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன் என ஆணையத்திலேயே கதறி அழுதுள்ளார். சாதாரணமாக இதயத்தில் சிறிய பிரச்சனை ஏற்பட்டால் கூட சாதாரண மனிதர்களுக்கே ஆஞ்சியோ சிகிச்சை செய்வது வழக்கம். இதய நோயில் மிக எளியதும், அடிப்படை சிகிச்சைகளிலும் ஒன்றுமான ஆஞ்சியோ கிராமை செய்யாமல் விட்டது ஏன். 
 

ஆஞ்சியோ கிராம் செய்ய வேண்டும் என கிரிநாத் உள்பட பல டாக்டர்கள் குறிப்பிட்டபோதும், ரிச்சர்ட் பீலே ஏன் தடுத்தார். ரிச்சர்ட் பீலே சசிகலா சொல்லித்தான் செய்தாரா? அப்பொழுது சசிகலாவின் கருத்து கேட்கப்பட்டதா? ரிச்சர்ட் பீலேவும் சசிகலாவும் அப்பல்லோவும் ஒரு சாதாரண ஆஞ்சியோ கிராம் அறுவை சிகிச்சைக் கூட செய்யாமல் ஜெ.வை மரணத்திற்கு உள்ளாக்கியது எப்படி? ஜெ.வின் மரணத்திற்கு காரணம் இந்த 3 பேரும்தானா என்கிற கேள்வி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எழுந்துள்ளது. 
 

ஜெ.வுக்கு இதயத்தில் ஏற்பட்ட நோயையும் அதற்கு அறுவை சிகிக்சை வேண்டும் எனவும் டாக்டர் கிரிநாத் போன்றவர்கள் போராடியதை நக்கீரன் பதிவு செய்துள்ளது. அந்த உண்மைகள் இப்பொழுது வெளிவர தொடங்கியுள்ளது.