Skip to main content

ஐ-ஃபோன் X ... என்னவெல்லாம் இருக்கு ???

Published on 13/09/2017 | Edited on 13/09/2017


எல்லாவற்றிலும் 'அப்டேட்டட்' ஆக இருக்க விரும்பும் இந்தக் கால மனநிலைக்கு உணவாகவோ அல்லது அந்த மனநிலையை உணவாக்கவோ வரும் வித விதமான எலெக்ட்ரானிக் காட்ஜெட்ஸ்களின் பட்டியலில் மேலே இருப்பது ஆப்பிள். ஆப்பிளின் அடுத்த மாடல் தொலைபேசி வருவதென்பது  'டெக்கி'கள் என்று செல்லமாக அழைக்கப்படும் தொழில்நுட்ப ஆர்வலர்கள், 'செல்போன்' விரும்பிகள், பிசினஸ் பிரமுகர்கள், மாணவர்கள் என பல தளங்களிலும் ஆர்வத்தைக் கிளப்பும் நிகழ்வு. நேற்று (செப்டம்பர் 12), ஆப்பிள் தனது புதிய வெளியீடுகளை அறிமுகப்படுத்தியது. ஐ-வாட்ச், ஐ-டிவி, ஐ-போன் 8 ஆகியவற்றுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஐ-போன் எக்ஸ் (i-phone X) தான் நேற்றைய மேடையின் நாயகனாகத்  திகழ்ந்தது. 'என்ன என்ன ஐட்டங்களோ ஐ-போன் எக்ஸ்ஸினிலே' என்று காத்திருப்பவர்களுக்கு...     

 - 2007இல் முதல் ஐ-போன் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்பொழுது, பத்து ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, எண் பத்தைக் குறிக்கும் ரோமன் லெட்டரான X (எக்ஸ்), பெயராக வைக்கப்பட்டு  'ஐ-போன் X'  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

- வரும் அக்டோபர் 27இல் இருந்து முன்பதிவு தொடங்கும். நவம்பர் 3இல் உங்கள் கைகளில் தவழ வாய்ப்புள்ளது 

- இதன் விலை இந்தியாவில்   ஏறத்தாழ 89000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இது, 64ஜிபிக்கான விலை மட்டுமே. 256ஜிபியின் விலை இன்னும் கொஞ்சம்  மட்டுமே அதிகம்

-   OLED தொழில்நுட்பத்தில், சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளேயுடன்  விளிம்பிலிருந்து விளிம்பு வரை கைபேசியின் மேல்பகுதி முழுவதும் 5.8 இன்ச்  டிஸ்ப்ளே இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது 

-   ஏற்கனவே, ஆண்ட்ராய்டு பயன்படுத்துபவர்கள் ஆப்பிளில் திகைக்கும் விஷயம் அதன் 'ஹோம்' பட்டன் என்று சொல்லப்படும் நடுவில் உள்ள பட்டன். எல்லாவற்றிற்கும் ஒரே பட்டனா என்று நம்மை வியக்க வைக்கும். இப்பொழுது   'ஐ-போன் X'இல் அந்த பட்டனும் கிடையாதாம்.  மேலே 'ஸ்வைப்' செய்தால் பின்னே செல்லுமாம்





- அடுத்தது ஆப்பிளின் பாதுகாப்புத் தொழில்நுட்பம். 'ஃபேஸ் ஐடி' முறையில் பயன்படுத்துபவரின் முகத்தை அடையாளம் கண்டு உள்ளே அனுமதிக்கிறது ஆப்பிள். அடிக்கடி 'கெட்-அப்' மாற்றுபவர்களும் கூட கவலைப்படத்  தேவையில்லையாம். ஆப்பிள் பயன்படுத்தியிருக்கும் தொழில்நுட்பம் அவ்வளவு ஆழமானதாம். மில்லியனுக்கு ஒன்று என்ற அளவில் தான் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது என்று ஆப்பிள் உறுதியளிக்கிறது. ஆனால், அறிமுக நிகழ்ச்சியிலேயே க்ரெய்க் பயன்படுத்திய   'ஐ-போன் X'  அவரது முகத்தை சோதனை செய்து அனுமதிக்க மறுத்து சொதப்பியது. பின்னர் இன்னொரு     'ஐ-போன் X'இல்    'ஃபேஸ் ஐடி'யை நிகழ்த்திக் காட்டினார்

- இன்று நமது சாட்டிங்கிலும், 'ஃபேஸ்புக்' பதிவுகளிலும் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டன 'எமோஜி'க்கள். நம் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துவதை விட எமோஜிக்களால் வெளிப்படுத்துவதே அதிகமாகியிருக்கிறது. ஆப்பிள், அதிலும் ஒருபடி மேலே போய், அனிமோஜிக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நம் முகத்தில் என்ன வெளிப்படுத்துகிறோமோ அதைக் கைப்பற்றி அதே 'எக்ஸ்பிரசனை' அனிமேட் செய்து அனுப்புகிறது    'ஐ-போன் X'





- 'வயர்லெஸ் சார்ஜிங்' வசதியும் உள்ளது. 'சார்ஜிங் மேட்' (mat)  என்ற ஒரு மின்விரிப்பில் கைபேசியை வைத்துவிட்டால் போதும், சார்ஜ் ஆகிவிடுமாம். இதே முறையில் ஐ-வாட்ச்களையும் கூட  சார்ஜ் செய்யலாமாம்





- ஐஓஎஸ் 11 இல் வேலை செய்யும் இந்த     'ஐ-போன் X'

- கேமராவில் 'ஆக்மெண்டெட் ரியாலிட்டி' தொழில்நுட்பத்தில்,  வீடியோ பதிவு செய்யும்பொழுதே அதில் ஸ்பெஷல் எபக்ட்ஸ் எல்லாம் செய்யலாம். இதுவரை உள்ள 'ஸ்மார்ட்' போன்களிலேயே அதிக தெளிவுடையதாம்      'ஐ-போன் X'இன் கேமரா





பேசுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி இன்று மாறி மாறி வேறு வடிவமெடுத்துள்ளது. தொழில்நுட்பத்தின் உச்சங்களை அனுபவிக்க ஆசையும் அதை வாங்க காசும் உள்ளவர்கள்    'ஐ-போன் X'க்கு முன்பதிவு செய்யலாம். ஆசை மட்டுமுள்ளவர்கள், எப்படியும் சில மாதங்களில் இந்த வசதிகள் எல்லாவற்றையும் 'காப்பி'யடித்து  நமக்கேற்ற விலையில் கொண்டு வரப்போகும் கொரியன், சைனா நண்பர்களுக்காகக் காத்திருக்கலாம்.  

வசந்த் 


            

சார்ந்த செய்திகள்