கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்தின் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கரசேவகர்கள் 1700 பேர் அயோத்திக்கு ஆன்மீக பயணம் சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து அகமதாபாத் திரும்பி வந்து கொண்டு இருக்கும்போது, அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலானது அன்றைக்கு சரியாக எட்டு மணிக்கு குஜராத் மாநிலம் கோத்ரா ஸ்டேஷனுக்கு வந்து நின்றது. அப்போது கரசேவகர்கள் இருந்த ரயில் பெட்டி அருகே சிலர் கூட்டமாக நின்று கோஷம் எழுப்பிய படி இருந்தார்கள். அதேசமயம், கரசேவகர்கள் பயணித்த S6 பெட்டியில திடீரென நெருப்பு பற்றி எரியத் தொடங்கியது. அப்படி பற்றி எரிந்த தீ ரொம்ப வேகமாக அடுத்தடுத்த பெட்டிகளிலும் பற்றி எரியத் தொடங்கியது. இப்படி பற்றி எரிந்த நெருப்பில் சிக்கிக் கொண்ட பொதுமக்களும், கரசேவகர்களும் வெளியே வரமுடியாமல் அலறித் துடித்தார்கள். இந்த சம்பவத்தில் 14 குழந்தைகள், 27 பெண்கள் என்று மொத்தம் 59 பேர் பலியானார்கள்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்ற செய்தி குஜராத் முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. அப்படி அந்த செய்தி பரவியதும் குஜராத் மாநிலம் முழுவதும் ரத்தக் காடாக மாறத் தொடங்கியது. கோத்ராவில் தொடங்கி குஜராத் முழுவதும் நடந்த அந்த கலவரம் சுமார் மூன்று மாதம் வரை நீடித்தது. மூன்று மாதம் நீடித்த அந்த கலவரத்தை அடக்க அன்றைய குஜராத் அரசும், காவல்துறையும் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அப்போது பலமாக எழுந்தது. குறிப்பாக அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி குஜராத் கலவரம் பற்றி பேசும்போது ஒரு வினைக்கு அதற்கு சமமான எதிர்வினை இருக்கும் என்று பேசி இருந்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
நடந்த வன்முறைக்கு குஜராத் அரசின் மறைமுக ஆதரவு இருந்ததால் வன்முறையாளர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டார்கள். அப்படி நடந்த அந்த வன்முறை வெறியாட்டத்தில் குஜராத்தில் வசித்த இஸ்லாமியர்கள் தேடித் தேடி வேட்டையாடப்பட்டனர். கர்ப்பிணி பெண் ஒருவர் வயிற்றைக் கிழித்து அவர் வயிற்றில் இருந்த குழந்தையை வெளியே எடுத்து எரித்துக் கொன்றார்கள். நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்கள். இவ்வாறு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்கள் அதற்கு அப்புறம் கொலை செய்யப்பட்டார்கள். அதனைத் தடுக்க வந்த இஸ்லாமிய ஆண்கள் வெட்டி வீசப்பட்டார்கள். இப்படி கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத பல கொடூரங்கள் குஜராத் மண்ணில் நடந்து முடிந்தது.
குஜராத் கலவரம் முடிவுக்கு வந்தபோது அதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் தெரியவந்தது. அதில் 790 பேர் இஸ்லாமியர்கள் என்றும், 254 பேர் இந்துக்கள் என்றும் ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. ஆனால் உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியதாக குஜராத் கலவரம் தொடர்பாக அதற்கு பிறகு வெளியான ஆவணங்கள் தெரிவித்தன. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக அப்போதைய ஒன்றிய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தலைமையில் ஓர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனின் விசாரணை அடிப்படையில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் ஓர் விபத்து என்றும். முழுவதும் இந்து மத யாத்ரீகர்கள் இருந்த ரயில் பெட்டிக்குள் இஸ்லாமியர்களால் பெட்ரோல் நிரப்பப்பட்ட கேன்களை ரயில் பெட்டிக்குள் எடுத்துச் சென்றிருக்க முடியாது என்றும் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. ஆனால் அதற்கு பிறகு அமைக்கப்பட்ட நானாவதி கமிஷன், பானர்ஜி கமிஷன் போன்ற விசாரணை அமைப்புகளால் எந்த தெளிவான முடிவுகளையும் கொடுக்க முடியவில்லை.
இறுதியாக அமைக்கப்பட்ட குஜராத் அரசின் விசாரணை ஆணையம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் ஓர் திட்டமிட்ட சதி என்று அறிக்கை கொடுத்ததோடு அப்போதைய குஜராத் முதல்வர் மோடி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவரை விடுவித்தது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கு குஜராத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் மாநில அரசும், ரயில்வே துறையும் சட்ட ஒழுங்கை சரியாக பராமரிக்கவில்லை என்று குற்றம் சாட்டியதுடன் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 31 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது. 2011 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அந்த தீர்ப்பில் மே 11 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டிருந்தது குஜராத் சிறப்பு நீதிமன்றம். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை குஜராத் உயர்நீதிமன்றத்தில் நடந்தபோது மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வெளி வந்தாலும் கூட குஜராத் கலவரத்தின் நீட்சியாக இன்னும் சில நடவடிக்கைகளும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று சிலரை சமீப காலம் வரை தேடி வந்தது குஜராத் காவல்துறை. அதன் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரபீக் உசைன் பதுக் என்பவரை கைது செய்தது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் அவர்தான் முக்கிய குற்றவாளி என்றும் கடந்த பல வருடங்களாக அவர் டெல்லியில் தலைமறைவாக இருந்துள்ளார் என்றும் தற்போது குஜராத்தில் உள்ள அவரது குடும்பத்தை ரகசியமாக சந்திக்க வரும்போது அந்த தகவல் தெரிந்து, அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் இருந்து விளக்கம் தரப்பட்டது. அதேபோல் 2002 குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த 11 பேர் கொண்ட சமூக விரோத கும்பலுக்கு பொது மன்னிப்பு வழங்கி தண்டனை காலம் முடிவதற்கு முன்பே குஜராத் அரசு அந்த சமூக விரோதிகளை விடுதலை செய்தது. குஜராத் அரசின் இந்த நடவடிக்கை குஜராத் கலவரத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை காப்பாற்றும் விதமாக இருக்கிறது என்று கடும் கண்டனங்கள் எழுந்திருக்கிறது.
2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் கலவரத்துக்கு பயந்த இஸ்லாமிய மக்கள் உயிர் தப்பினால் போதும் என்று பல இடங்களில் பதுங்கி இருந்தார்கள். ஆனால் கொலைவெறியோடு அவங்களைத் தேடி அலைந்த சமூக விரோத கும்பல், கையில் கிடைத்தவர்களை எல்லாம் சிதைத்து சின்னா பின்னம் ஆக்கினார்கள். அப்படி அவர்கள் கையில் சிக்கிக் கொண்டவர்தான் பில்கிஸ் பானு. பில்கிஸ் பானுவுடன் அவரின் ஒட்டு மொத்த குடும்பமும் சிக்கிக்கொண்டது . சிக்கிக்கொண்ட பில்கிஸ் பானுவையும் அவரோடு இருந்த மூன்று பெண்களையும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது அந்த கொலைவெறி கும்பல். பாலியல் வன்புணர்ச்சி செய்ததோடு மட்டுமில்லாமல் பில்கிஸ் பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேரையும் இரக்கமற்ற சமூக விரோதிகள் கொலை செய்தார்கள்.
அப்படி கொலை செய்யப்பட்டவர்களில் பில்கிஸ் பானுவின் பிஞ்சுக் குழந்தையும் ஒன்று. பாலியல் வன்புணர்ச்சிக்கு பின் மூன்று மணி நேரம் மயக்கமாக கிடந்த பில்கிஸ் பானு, மயக்கம் தெளிந்து எழுந்த பிறகுதான் தனக்கு நடந்த அவலத்தை உணர்ந்து அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் துணி வாங்கி தன் உடலை மறைத்துள்ளார். அவருக்கு நேர்ந்த அந்த அவலத்தின் போது பில்கிஸ் பானு கர்ப்பமாக இருந்தார். ஆனால் அந்த இரக்கமில்லாத கும்பல் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தினர். அதன் பிறகு தனக்கு நடந்த அநீதியை பற்றி அருகில் இருந்த காவல் நிலையத்தில், பில்கிஸ் பானு புகார் கொடுத்தார். புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறை 19 பேர் மேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பான வழக்கு, மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேரில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி குஜராத் அரசு, பில்கிஸ் பானு வன்புணர்வு வழக்கில் தண்டனை பெற்று ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் 11 பேரையும் அவர்களின் நன்னடத்தையை காரணமாக வைத்து விடுதலை செய்து உத்தரவிட்டது. கடந்த ஆண்டு பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த ஒருவர், தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சம்பவம் நடந்தது குஜராத் என்பதால் குஜராத் அரசுதான் இது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.
உச்சநீதிமன்றம் தெரிவித்த அந்த கருத்தின் அடிப்படையில் குஜராத் அரசு, பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளையும் ஒன்றிய அரசின் ஒப்புதலுடன் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்தது. விடுதலையான அந்த 11 குற்றவாளிகளையும் அவர்களின் உறவினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். இந்த ஆரத்தி எடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதேநேரம் குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். மேலும் ஊடகங்களிடம் பேசிய பில்கிஸ் பானு ‘தயவு செய்து இனியாவது நான் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்தி தாருங்கள்’ என்று நீதி அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆட்சியும் அதிகாரமும் கையில் இருந்தால் நாட்டில் எப்படிப்பட்ட வன்முறைகளையும் நிகழ்த்தலாம் என்பதற்கும் அப்படி வன்முறை செயல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற முடியும் என்பதற்கும் குஜராத் படுகொலை சம்பவமும், பில்கிஸ் பானுவிற்கு இழைக்கப்பட்ட அநீதியும் ஓர் மாறாத சாட்சியங்களாக இருக்கின்றன.