Skip to main content

கரோனா மட்டும் வராமல் இருந்திருந்தால்.... இந்தியப் பொருளாதாரத்தை மோடி நிமிர்த்தி இருப்பார்.." - கோவி.லெனின் பேச்சு!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 45 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2,000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 82,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்குக் கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் இந்த கரோனா இழப்பைச் சரிசெய்ய சுமார் 20 லட்சம் கோடிக்குப் புதிய திட்டங்களை மோடி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின் அவர்களிடம் நடத்திய நேர்காணலில் இருந்து...


கரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கும், அதில் இருந்து மீண்டு வருவதற்கும் மத்திய அரசு 20 லட்சம் கோடிக்கான திட்டத்தை அறிவித்துள்ளார்கள். நிதியமைச்சர் தினமும் அதுதொடர்பான திட்டங்களை அறிவித்து வருகின்றார். சுயசார்பு பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது அதன் நோக்கமாக இருக்கின்றது. இதுதொடர்பான உங்களின் பார்வை என்ன?

இந்தியாவில் பிரதமர்களாக பலபேர் இருந்துள்ளார்கள். அதில் மோடி மக்களின் மிக நம்பிக்கைகுரியவராக இருந்துள்ளார். மற்ற பிரதமர்கள் விட மோடியை மக்கள் நிறைய நம்புகிறார்கள். எப்படி என்றால் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் தொலைக்காட்சியில் பேசினார். இன்று இரவு 12 மணியில் இருந்து 500,1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்தச் செய்தி அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. எதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று மத்திய அரசு காரணம் சொன்னார்கள். அதாவது நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை அழிக்கவே இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தார்கள். மக்கள் அதனை நம்பினார்கள். மக்களுக்குக் கஷ்டம் இருந்தது. நடுராத்திரியில் மக்கள் பேங்க் வாசலில், ஏடிஎம் வாசலில் காத்துக்கிடந்தார்கள்.  சிலர் இறந்தும் போனார்கள். இருந்தாலும் இந்தியப் பொருளாதாரத்தில் மோடி ஏதோ பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறார் என்று மக்கள் நம்பினார்கள். இரண்டு நாட்களில் நிலைமை வேறு மாதிரி சென்றதும், 50 நாட்களில் நிலைமை சீரடையவில்லை என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று மோடி கூறினார். 2016 இல் அதைக் கூறினார், இப்போது நான்கு வருடங்கள் கடந்துவிட்டது.  

 

 


மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். எப்படியாவது அந்தக் கருப்புப் பணத்தை ஒழித்து, நம்முடைய வங்கி கணக்கில் 15 லட்சம் போட்டுவிடுவார் என்ற நம்பிக்கை இப்போதும் இருக்கின்றது. மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு பச்சைக் கலரில் ஆரம்பித்து அனைத்து வகையான கலரிலும் ரூபாய் நோட்டுகள் வந்துவிட்டன. ஆனால் இந்தக் கருப்புக் பணத்தைத்தான் இதுவரை காணவில்லை. இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் கரோனா வந்துவிட்டது. இந்த கரோனா மட்டும் வரவில்லை என்றால் இந்தியாவின் பொருளாதாரத்தை மோடி எங்கேயோ கொண்டு சென்றிருப்பார். சீனாவுக்குச் சவால் விட்டு இருப்பார். அமெரிக்காவை பொருளாதாரத்தில் முந்தி இருப்பார். அனைவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் பணம் போட்டிருப்பார். உலகில் உள்ள வளர்ந்த நாடுகள் அனைத்துமே கதறக்கூடிய வகையில் இந்தியப் பொருளாதாரத்தை நிமிர்த்தி வைத்திருப்பார். இந்த கரோனா தாக்குதலில் இருந்து இந்தியாவைக் காக்க அதனை எதிர்த்துப் போர் நடத்த வேண்டும் என்று கூறி, கைத்தட்டுதலில் ஆரம்பித்து பூ தூவுதல் வரை செய்து முடிந்திருக்கின்றோம். அதைப் போலத்தான் தற்போது அறிவித்துள்ள நிதி அறிவுப்புகளும் இருக்க போகின்றது.