Skip to main content

’எங்களுக்கு திருமணம் செய்து வைக்க நீங்கள் யார்?’ -நாய்களின் காதலர் தின சிறப்பு பேட்டி!

Published on 13/02/2019 | Edited on 14/02/2019

 

dog marriage



பிப்ரவரி-14 என்றாலே இளசுகளுக்கு கொண்டாட்டம்தான். மனசுக்குள்ள  ஷட்-டவுன் பண்ணி  வெச்சிருக்கிற காதலை ஹார்ட்டை  ஓப்பன்  பண்ணி  காண்பிக்கிற நாள். எவ்ளோ இம்பார்ட்டண்ட்  ஒர்க்கா  இருந்தாலும்  ஓரங்கட்டி  வெச்சிட்டு தங்களோட லவ்வர்ஸ்ஸோடு  டூயட் பாட எக்ஸைட்மெண்டோடு காத்திருக்கிற நாள். 


ஆனால், ‘காதலும் கிடையாது, கத்திரிக்காயும் கிடையாது. எல்லாம்  ஹார்மோன் செய்யும் கலகம்...வெறும் காமம்தான். காதலர் தினத்தனைக்கு ஜோடியாக சுத்துற காதலர்களை பார்த்தோம்னா  புடிச்சி  கல்யாணம்  பண்ணிவெச்சிருவோம் ஜாக்கிரதை’ என்று  சில  எமோஷனல்  குரூப்ஸ்கள்  கிளம்பி எக்ஸைட்மெண்டுக்கு 144  போட்டு காதலர்களில்  ஹார்ட்டில் அம்புவிடத்தொடங்கிவிடுவார்கள்.  அதுமட்டுமா? 


நாய்க்கும்  நாய்க்கும்  திருமணம்  செய்து  வைத்து ‘இளசுகளின் காதல் இப்படித்தான் இருக்கு’ என்று மீடியாக்களுக்கு பேட்டி  கொடுத்து  ஃபோட்டோவுக்கு போஸ்கொடுப்பார்கள்.  இதனால்,  காதலர்கள் அப்செட் ஆகிறார்களோ  இல்லையோ நாய்கள் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கும்.  நாய்களுக்கு  மட்டும்  வாய் இருந்திருந்தால் ஐ... மீன் பேசத்தெரிந்திருந்தால் என்னவெல்லாம் பேசியிருக்கும்? இதோ ஒரு இமாஜினேஷன் பேட்டி!


 

dog marriage




சென்னை  மெரினா  பீச்.  ஓரமாய்  உட்கார்ந்திருந்த ஓர் இளம் நாய் புஜ்ஜியிடம் காதலர்தினம் குறித்து நாம் பேசியபோது, சோகத்தோடு  வானத்தை  அண்ணாந்து பார்த்தது. ஃப்ளாஷ்பேக்காம்.  “என்பேரு புஜ்ஜி.  தெருநாய்ங்களுக்கெல்லாம் சோறு வெக்கிறதே பெரிய வி சயம். இதுல,  ஆரு பாஸ்  பேரு வைக்கிறா.  அவதான், எனக்கு செல்லமா  புஜ்ஜின்னு  பேரு வெச்சா. (விக்ரமன் படத்து  சோக  மியூசிக்குகளை  கற்பனை செய்துகொண்டு கேட்டுக்கொண்டிருந்தோம்) 
 

அவப்பேரு ஸ்வீட்டி.  பேருக்கேத்தமாதிரி  ரொம்பவே ஸ்வீட்டானவ.  ஒரே தெருவுலதான்  இருந்தோம்.  எப்பவுமே ஒண்ணா  விளையாண்டுகினுருப்போம். ஆரம்பத்துல ஃப்ரண்ட்ஸாத்தான்  பழகினோம்.   ஒருநாள் அவள பார்க்கலைன்னாலும் பகல் முழுக்க தூக்கமே வராது.  திடீர்னு எங்களுக்குள்ள  காதல்  பூ  பூத்துடுச்சி.  உங்க வூட்டு லவ்வு எங்க வூட்டு லவ்வு இல்ல.. ங்கொக்கம்மக்கா ஒலகமகா லவ்வு. அவள லவ் பண்ணல பாஸ்.  ஒரு மனைவியா  நெனைச்சித்தான் வாழ்ந்துனுருந்தேன். அவளும்தான்.
 

காதலுக்கு  இலக்கணமா  சொல்லுற ஆதாம்-ஏவாள்,    ரொமியோ-ஜூலியட்ஸ், அம்பிகாபதி- அமராவதி,  ஷாஜகான் -மும்தாஜ்  இவங்களையெல்லாம்  ஓவர்டேக் பண்ணி நம்ப லவ்வு  நம்பர் ஒன்  எடத்துல  இருக்கணும்னு  என் ஸ்வீட்டி அடிக்கடி சொல்லிக்கினேருப்பா.  ஆனா....” அதற்குமேல் புஜ்ஜியால்  பேசமுடியவில்லை.  கண்கள் குளமாகிறது.  நம் கையில் வைத்திருந்த  பிஸ்கட்டை கொடுக்க அதை கவ்வி சாப்பிட்டுவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டு  மெல்ல பேசத் தொடங்கியது. 
“போன வருசம்  பிப்ரவரி-14  அன்னைக்கு  நானும்  என் ஸ்வீட்டியும்  ‘நாய்கள் ஜாக்கிரதை’ங்குற  சினிமாவுக்கு  போகலாம்னு  ரொம்ப  ஆசையா  ப்ளான் பண்ணிருந்தோம். 
 


யார்க்கும் தெரியாம அவளுக்காக  ஒரு  எடத்துல  வழிமேல விழிவெச்சி காத்துக்கினுருந்தேன்.  ஆனா, ரொம்பநேரம் ஆகியும்  அவ வரல.  வாழ்க்கையே வெறுத்துப்போச்சி. சினிமா டிக்கெட்டை  கிழிச்சிப்போட்டுட்டு  அவள  தேட ஆரம்பிச்சேன்.

 

dogs marriage


 

அவள காணோம். ஆனா,  என்னக்கொடும  சார்... ஈவ்னிங் நியூஸ் பேப்பரை பார்த்துட்டு என் இதயமே வெடிச்சிப்போச்சி. எவனோ ஒருத்தங்கூட  என்  ஸ்வீட்டியை உட்காரவெச்சு கல்யாணம் பண்ணிவெச்சிருக்காங்க.  மணக்கோலத்துல என் ஸ்வீட்டி உட்கார்ந்திருக்கிறதை பார்த்ததும்  சூஸைட் பண்ணிக்கப்போயிட்டேன் சார். ஆனா, என்னோட ஃப்ரண்ட்ஸுங்கதான்  என்னை காப்பத்திட்டாங்க.  ஏன் சார் இந்த மனுசங்க இப்படி இருக்காங்க? லவ் பன்றது தப்பா சார்?
 

லவ் ஃபெயிலியர் ஆன  அந்த காயம்பட்ட  வேதனையில இருக்கும்போதுதான்  அவ என்னைப்பார்த்து சிரிச்சா.  மீண்டும் ஒரு காதல் பூ பூத்துடுச்சி.  தயவு செஞ்சி  என் ஃபோட்டோவை எல்லாம்  போட்டுடாதீங்க சார்.  என் ஃபோட்டோவைப் பார்த்து என்னோட முதல் காதல்  தெரிஞ்சிடுச்சின்னா  இப்போ இருக்கிறவ உசிரையே விட்ருவா சார்” என்று சொல்லிவிட்டு  பீச் மணலிருந்து மெயின் ரோட்டைநோக்கி செல்கிறது புஜ்ஜி. 
 

தன் கணவரோடு  நின்றுகொண்டிருந்த ஒரு பெண் நாயின் சோகம்  நம்  இதயத்தை கனக்கவைத்தது.  “போனவருசம் என் பொண்ணு,  பக்கத்து தெருவுல இருக்கிற தன்னோட ஃபிரன்ட்ஸ்ங்களோட  விளையாடிட்டு வர்றேன்னு  சொல்லிட்டு போனா சார்.  ரொம்ப நேரம் ஆகியும் போனவள காணோம். வீடு திரும்பல. 
 

குடும்ப மானம் போயிடக்கூடாதுன்னு ரொம்ப ரகசியமா தேடுனோம். ஆனா,  என் பொண்ணுக்கு ஏதோ ஒரு நாயோட கல்யாணம் பண்ணிவெச்சி  சில மனுசங்க சுற்றி நின்னு கேவலமா பேசிக்கிட்டிருந்தை டிவியிலப் பார்த்ததும் கூட்டுல உசிரு இல்லங்க. 
 

அப்பவே நானும் என் கணவரும் தற்கொலை பண்ணிக்கப்போயிட்டோம். ஆனா, ரெண்டாவது பெத்துவெச்சிருக்கிற பொம்பளப்புள்ளையோட வாழ்க்கைய நினைச்சி தற்கொலை எண்ணத்தை மாத்திக்கிட்டோம். என் பொண்ணு  இன்னொரு  நாயை  லவ் பண்ணினதாவே இருக்கட்டுமே சார்.
 

அவங்களுக்கு காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வைக்க பெற்றோர்கள்  நாங்க இருக்கோம். எங்க  உறவினர்கள் இருக்காங்க.  எங்க பொண்ணுக்கு  கல்யாணம்  பண்ணி வைக்க இவங்க யாரு சார்?  இவங்க,  என்ன எங்களோட உறவினர்களா? சில நாய்களுக்கு சரியான வயசு மெச்சுரிட்டி வந்திருக்காது. 


சில நாய்களுக்கு திருமணம்  பண்ணிக்கிற விருப்பம் இருக்காது. சில நாய்கள் ஏற்கனவே கல்யாணமாகி கர்ப்பமாக்கூட இருக்கும். டைவர்ஸ்கூட ஆகியிருக்கலாம். இல்ல ஃப்ரண்ட்ஸா இருக்கலாம்.  இல்ல... அண்ணன்  தங்கச்சி  உறவா இருக்கலாம்.


 

dogs marriage


 

இதையெல்லாம் பார்க்காம அவங்களோட விளம்பரத்துக்காக பொசுக்குனு  புடிச்சி கல்யாணம் பண்ணி வெக்கிறது என்னங்க நியாயம்?” என்று வாய் பொத்தி அழுகிறது தாய் நாய்!

தெருநாய்கள் அசோசியேஷன் ஆஃப் இண்டியாவின் தலைவர் ஜிம்மி நம்மிடம், “மனுஷங்களுக்கு நாங்க நன்றியுணர்வோட இருக்கோம். ஆனா, எங்கள பத்தி அவங்க கவலைப்படுறதில்லை சார். இந்த உலகமே காதலாலதானே சார் இயங்கிட்டிருக்கு. காதல், அன்பு, பாசம் இதெல்லாம் கட்டாயப்படுத்தியோ கெஞ்சியோ மிரட்டியோ வரவைக்கக்கூடியதல்ல. 


ஒருத்தர்க்கொருத்தர்  நெருக்கமா  பழக ஆரம்பிச்சபிறகுதான் அவரவர்களுடைய உண்மையான குணாதிசயங்கள் தெரிய ஆரம்பிக்கிது.  அப்படி,  தெரிய ஆரம்பிக்கும்போது இவன்(ள்) நம்ம லைஃப்க்கு  ஒத்து வரமாட்டான் (ள்)னு  புரிதலோடு பிரியுற நாளும்  இந்த காதலர் தினம்தான். அந்த நாளில் போயி அவங்களை புடிச்சி மிரட்டி தாலிகட்ட சொல்றாங்க… இந்த எமோஷனல் அமைப்புகள்.  இது,  எங்களுக்கு மட்டுமில்ல... மனிதக்காதலர்களுக்கும் இந்த கொடுமை நடக்குது.


இப்படி எங்களோட உரிமையில புகுந்து கும்மியடிக்கிறதுக்கு காரணம் மிருகவதை தடுப்புச்சட்டத்தின்படி  மனிதர்களுக்கு சரியான தண்டனை கொடுக்காததால்தான் மனிதர்கள் எங்களை அலட்சியமாக துன்புறுத்துகிறார்கள். 


தமிழ்நாடு காவல்சட்டத்தின்படி எங்களின் உரிமைகளை மீறி பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு  நடந்துகொள்வோரை கைது செய்து தண்டிக்கமுடியும். ஆனா, நாங்கள் வாய்பேசமுடியாமல் இருப்பதால் காவல்துறையும் கண்டுகொள்வதில்லை. எங்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும்  ப்ளூக்ராஸ் அமைப்பும் எங்களை வெச்சி அரசியல் பண்றாங்களே தவிர எங்களோட நலனில் எந்த அக்கறையும் காட்றதில்ல. காரணம், காதலர் தினத்தில் நாய்களுக்கு, கழுதைகளுக்குன்னு கல்யாணம் பண்ணி வெச்சு துன்புறுத்துருவங்க எல்லோருமே அவங்களோட ஆதரவாளர்கள்தான்.  

இப்படியே தொடர்ந்தால்... ப்ளூகிராஸ் அமைப்பு, காவல்துறை ஆணையர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு குரைத்து ஊளையிடும் போராட்டத்தை செய்வோம்” என்று எச்சரிக்கிறவர்... “லவ் பண்ணுங்க பாஸ் லைஃப்  நல்லா இருக்கும்” என்று புன்னகைத்து கைகுலுக்கி அனுப்பினார்.


மிருகங்களின்  காதலைக்கூட  புரிந்துகொள்ளமுடியாதவர்கள்... மனிதர்களின்  காதலை புரிந்துகொள்வார்களா?