Skip to main content

‘நாற்பத் தெண்ணாயிரப் பெரும்பள்ளி’ - 13ம் நூற்றாண்டு சமணப்பள்ளி கல்வெட்டு கண்டுபிடிப்பு

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
Discovery of a 13th century Jainpalli inscription

மானாமதுரையை அடுத்த கீழப்பிடாவூரில் சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு கீழப்பிடாவூரில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக இப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் லிங்கம் ஆகியோர் அளித்த தகவலின் படி, அவ்வூரில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா, செயலர் இரா. நரசிம்மன், கள ஆய்வாளர் கா.சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர்,புலவர் கா. காளிராசா கூறும்போது..

சமணப்பள்ளி கல்வெட்டு

மதுரையைச் சுற்றி சமணர் பெரும் பகுதி வாழ்ந்துள்ளனர் என்பதை மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் சமணப்படுக்கை அமைந்துள்ளதன் வழி அறிய முடிகிறது, மேலும் இங்கு உள்ள ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டு மகாவீரர் திருமேனிகள் அதை செய்வித்த அச்சனந்தி அடிகள் போன்ற விவரங்கள் வட்டெழுத்துக்கல் வெட்டாகவும் கிடைக்கின்றன. மேலும் அக்காலக் கட்டங்களில் செய்த திருமேனிகள் அவர்களுக்கு அளித்த நிலக்கொடைகள் போன்ற செய்திகளும் கழுகுமலை போன்ற இடங்களில் கல்வெட்டாக விரிவாக கிடைக்கின்றன.

ஏழு, எட்டாம் நூற்றாண்டில் சைவர்களுக்கும் சமணர்களுக்கும் நிகழ்ந்த பூசல்களில் சமணர்கள் கழுவேற்றப் பெற்றதாகவும் மலை போன்ற மறைவிடங்களில் மறைந்து வாழ்ந்ததாகவும் சொல்லப்பட்டு வருகிறது,  திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்களில் பத்தாவது பாடல் சமணர்களைப் பற்றிய செய்தியை உள்ளடக்கியதாக உள்ளது, பாண்டிய நாட்டில் பத்தாம் நூற்றாண்டோடு சமணம் வழக்கொழிந்ததாக கருதப்பட்டு வரும் இந்நிலையில் மானாமதுரை அருகே உள்ள கீழப்பிடாவூரில்  13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்பள்ளி தொடர்பான கல்வெட்டொன்று  கிடைத்துள்ளது.

Discovery of a 13th century Jainpalli inscription

மன்னர் வழங்கிய கொடை

கல்வெட்டில் ஒரு பக்கம் அரசு அலுவலர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது ஒப்பமாக எழுத்து என்று வருகிறது. இவ்வகையில் மக்களின் பயன்பாட்டில் சமணப்பள்ளி இருந்ததோடு அரசர்கள் அதற்கு நிலக்கொடை வழங்கும் அளவிற்கு முதன்மை பெற்றிருந்தது என்பதும் சிறப்பானதாகும்.

கல்வெட்டு அமைப்பு

நான்கு பக்கங்களிலும் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. ஒருபக்கத்தில் திரிசூலம் செதுக்கப்பட்டு அதன் கீழிருந்து கல்வெட்டு தொடங்குகிறது. இப்பக்கத்தில் ஏழு வரிகள் இடம்பெற்றுள்ளன, மற்ற மூன்று பக்கங்களிலும்  எழுத்துகள் உள்ளன, ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்றன்பின் ஒன்றாக செய்தி எழுதப்பட்டுள்ளது.22,25,28 வரிகள் இடம்பெற்றுள்ளன. கல்வெட்டு தரைக்கு மேலிருந்து இரண்டே முக்கால் அடி உயரம் அமைந்துள்ளது. தரைக்கு கீழேயும் ஒரு அடி ஒன்றரை  அடி ஆழம் இருக்கலாம் அதிலும் எழுத்துகள் கீழ் செல்கின்றன.

விக்கிரம பாண்டியன்

கல்வெட்டு எழுத்தமைதியைக் கொண்டு இது 13ஆம் நூற்றாண்டாகக் கருதலாம். கல்வெட்டில்  விக்கிரம ராம வளநாடு என்று வளநாட்டில் புதிய பெயரும் இடம்பெற்றுள்ளது, நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி மற்றும் பள்ளிச் சந்தம் போன்ற சொற்களைக்கொண்டு இக்கல்வெட்டு விக்கிரம பாண்டியனை குறிப்பதாகக் கொள்ளலாம். மேலும் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் தம்பியாவான் இவனது காலம் பொ.ஆ 1268 முதல் 1281 வரை இவன் நடு நாட்டில் திருநறுங் கொண்டையில் நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி என்ற பெயரில் சமணப்பள்ளி ஒன்றை நிறுவியதோடு அனைத்துக் கடவுளருக்கும் இறையிலி நிலங்கள் வழங்கியதை இவனது கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

நாற்பத் தெண்ணாயிரப் பெரும்பள்ளி

ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கும் கல்வெட்டில் கருங்குடி நாட்டு பெரும் பிடாவூர் நாற்பத்தெண்ணாயிரப்    பெரும்பள்ளி தேவர் என வருகிறது. இதைக் கொண்டு இவ்வூரில் சமணப்பள்ளி  இருந்ததை நாம் அறிய முடிகிறது.

கல்வெட்டுச் செய்தி

நாயனாருக்கு திருப்படி மாற்று உள்ளிட்ட நித்த நியமங்களுக்கு நான்கு எல்லையிலும் எல்லைக்கல் நாட்டி, வரிகள் பிரித்து பூசை நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட செய்தி,  சூரியனும் சந்திரனும் உள்ளவரை இவை செல்லுபடியாக கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்ள சம்மதித்து பிடிபாடு எழுதிக் கொடுத்ததோடு அரசு அலுவலர்களின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது.

பள்ளிச் சந்தம்

பள்ளிச் சந்தம் என்பது பொதுவாக பௌத்தம் மற்றும் சமணக் கோவில்களுக்கு நிலக்கொடை வழங்கப்படுவதை குறிக்கும் சொல்லாடலாகும். கல்வெட்டில் கிரந்த எழுத்துகளும்  இருந்ததால் மேலாய்வுக்காக தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஐயா அவர்களிடமும் வாசித்து செய்தி பெறப்பட்டது. கல்வெட்டு அமைந்த திரிசூலம்,இன்று அப்பகுதி மக்களால் முனியசாமியாக வணங்கப்பட்டு வருகிறது, கல்வெட்டு அமைந்துள்ள இடம் ஒரு மேட்டுப்பகுதியாகவும் அதில் கோவில் இருந்து இடிந்து போன கற்களும் அருகில் ஒரு குளமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வூரின் கண்மாய்க் கரையில் 16,17 ஆம் நூற்றாண்டு  எழுத்தமைதியில் வானவீரன் மதுரையில் திருமாலிருஞ் சோலை நின்ற மாமகாவலி வாணதிராயர் எனத் தொடங்கும் மடை தானம் குறித்த கல்வெட்டொன்றும் உள்ளது.  சிவகங்கை தொல் நடைக்குழு பாண்டிய நாட்டில் 13 ஆம் நூற்றாண்டு வரை சமணம் செல்வாக்கோடு இருந்ததைச் சொல்லும் கல்வெட்டை கண்டறிந்தது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது என்று அவர் தெரிவித்தார்.