Skip to main content

ஸ்டாலினை இழுத்துட்டு வந்தாங்க... மிசாவில் நடந்த பரபரப்பு தகவல்... பாஜகவிற்கு ஏற்பட்ட டென்ஷன்! 

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம், "மிசா' என்கிற நெருக்கடி நிலைப் பிரகடனத்தை 1975, ஜூன் 25-ந் தேதி நடுஇரவில் அறிவித்தார் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி. பத்திரிகைச் சுதந்திரம் நசுக்கப்பட்டது. காங்கிரஸ் அல்லாத அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் காரணமின்றி கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் தடைசெய்யப்பட்டன. சென்னை கடற்கரையில் சத்யாக்கிரகப் போராட்டம் நடத்திய சுமார் ஆயிரத்துஐநூறு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மிசாவில் கைதாகி, கொட்டடியில் அடைக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டனர்.

 

bjp



இதுநடந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், உத்திரப்பிரதேச உயர்நீதிமன்றம் மிசா கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இதன் மூலம், வடமாநிலங்களில் சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஒருங்கிணைந்த ஆந்திரா, அசாம் போன்ற மாநிலங்களில் மிசாவால் பாதிக்கப்பட்ட தியாகி களுக்கு எந்த நலனும் ஏற்படவில்லை. எனவே, இந்த மாநிலங்களைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள், அசாமின் கோவர்த்தன பிரசாத் அடல் தலைமையில், "லோக் சங்கர்ப்ப சமிதி' எனப்படும் ஆக்ஷன் கமிட்டி அமைத்து நிவாரண உதவிகள் கேட்டு போராடி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, நெருக்கடி நிலைக்கால போராட்ட வீரர்களின் சங்கமவிழாவின் மூன்றாவது மாநாடு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மார்ச் 01-ல் நடந்தது. இதில் ஆக்ஷன் கமிட்டியைச் சேர்ந்த ஆந்திராவின் அசோக்குமார் யாதவ், கர்நாடகாவின் மஞ்சுநாத், கேரளாவின் மோகனன், பா.ஜ.க. எம்.பி. கைலாஷ் சோனி உள்ளிட்ட தலைவர்களுடன், தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். மிசா தியாகிகள் நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.
 

bjp



இந்த மாநாட்டிற்கு பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். பரபரப்புகளைப் பேசி பற்றவைக்கும் ஹெச்.ராஜா வேறொரு நிகழ்ச்சி காரணமாக மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. மிசாவால் பாதிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி, பரமக்குடியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி மோதிலால், மாநாட்டிற்கு வந்திருந்தார்.


மேடையில் அவர் பேசுகையில், “நாங்கள் சிறையில் பட்ட துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உடம்பெல்லாம் கொடூரமா அடி விழும். வலி பொறுக்காம கத்தினா கூடுதலா லத்தியடி கிடைக்கும். எவ்வளவு பலமா அடிச்சாலும் ரத்தம் வராது. ஆனா, உள்ளுக்குள்ள தீப்பிடிச்ச மாதிரி எரியும். சிறையில் எங்களுக்குப் பக்கத்து செல்லில்தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் இளைஞர். ஒருநாள் ஸ்டாலினை இழுத்துட்டு வந்து எங்க முன்னாடி நிறுத்தி கொடூரமா அடிச்சாங்க. அவர் தடுமாறி கீழ விழுந்தும் விட்டு நகரலை. அவர் மேல கவசம்போல நாங்கெல்லாம் விழுந்து தடுத்தோம். இப்படியே மூணுமாசம் சித்திரவதையா முடிஞ்சு, அரை உசுரா வெளியே வந்தோம். இதுமாதிரி சித்திரவதைகளை அனுபவிச்ச எங்களில் பலர், வறுமையால கஷ்டப்படுறாங்க. மோடி அரசு வந்தும் எங்க குடும்பப்பாடு தீரலை'' என்று அவர் பேசியபோதே, உடலெல்லாம் மிசா அடியை எண்ணி நடுங்கியதை உணர முடிந்தது.

கேரள கமிட்டித் தலைவரான மோகனன், "ஜெயராம் பணிக்கர் என்றொரு ஜெயில் ஆபீஸர், புதுப்புது சித்திரவதைகளைக் கண்டுபிடித்து டார்ச்சர் பண்ணினார். எங்களோட ராஜன் சிறையிலேயே அடித்துக் கொல்லப்பட்டார். இத்தனை கொடுமைகளை அனுபவித்து, தியாகம் செய்த நமக்கு, எந்தப் பலனும் இல்லாமல் போய்விட்டதே'' என்று வருந்திப் பேசினார். ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்த ஆந்திர கமிட்டியின் அசோக்குமார் யாதவ், “ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்குக் கிடைப்பதுபோல, தென்னிந்திய மாநிலங்களுக்கும் பென்ஷன் உதவி கிடைக்க வேண்டும். இல்லையென்றால் பெரிய போராட்டமாக வெடிக்கும்'' என்று எச்சரித்தார்.


வேதனையில் வெந்துபோயிருந்தவர்களின் கொதிப்பை அடக்கும் வகையில் பேசிய இல.கணே சன், “உங்கள் கஷ்டங்களை நான் உணர்வேன். உங்களின் நெருடல் எனக்கும் உள்ளது. அதனால், அமைச்சர் அனந்தகுமார் மூலமாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். முத்தலாக் தடை, ராமஜென்ம பூமி, சி.ஏ.ஏ. போன்றவற்றைப் போலவே, ஒரேயொரு கையெழுத்தால் நமது கோரிக்கைகளும் நிறைவேறும். நிச்சயம் நமது பிரதமர் அதை நிறைவேற்றுவார் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது'' என்றார்.

ஏற்கனவே, சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம் நாடு முழுவதும் வலுத்து வருகிறது. இதற்கிடையே, கட்சியின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஸில் கிளம்பியிருக்கும் இந்த உரிமைப்போர் பா.ஜ.க.விற்கு இரட்டைத் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.