Skip to main content

தொகுதியை அறிவோம்... ஆரணி!

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

 


இந்த தொகுதி மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ளார்கள். அதற்கடுத்த இடத்தில் நெசவு தொழில் உள்ளது. அதிகளவு கிராமங்கள் கொண்ட தொகுதி. வன்னியர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், முதலியார்கள், இஸ்லாமியர்கள் என்கிற வரிசையில் பலமாக உள்ள தொகுதி.
 


கடந்த 2009 தேர்தலுக்கு முன்பு வரை ஆரணி பாராளுமன்ற தொகுதி வந்தவாசி தொகுதியாக இருந்தது. பின்னர் இதில் சில தொகுதிகள் நீக்கப்பட்டு சில தொகுதிகள் புதியதாக சேர்க்கப்பட்டு ஆரணி நாடாளுமன்ற தொகுதியாக உருவாக்கப்பட்டது. தற்போது இந்த தொகுதிக்குள் ஆரணி, போளூர், செய்யார், வந்தவாசி, செஞ்சி, மயிலம் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் போளூர், வந்தவாசி, செஞ்சி, மயிலம் என 4 தொகுதிகளில் திமுகவும், ஆரணி, செய்யார் என இரண்டு தொகுதிகளில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த தொகுதிக்குள் நகராட்சிகள் என எடுத்துக்கொண்டால் ஆரணி, வந்தவாசி, செய்யார் மட்டுமே. செஞ்சி, போளூர் போன்றவை பேரூராட்சிகளாக உள்ளன.

 

arani



இதற்கு முன்பு வந்தவாசி தொகுதியாக இருந்தபோது, காஙகிரஸ் கட்சி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. 1962ல் காங்கிரஸ் ஜெயராமன், 1967, 1971ல் திமுக சார்பில் விஐடி விஸ்வநாதன், 1977ல் அதிமுக சார்பில் வேணுகோபால், 1980ல் காங்கிரஸ் பட்டுசாமி, 1984, 1989ல் காங்கிரஸ் பலராமன், 1991ல் காங்கிரஸ் கிருஷ்ணசாமி, 1996ல் தமாகா பலராமன், 1998, 1999ல் பாமக துரை,  2004ல் மதிமுக செஞ்சி.ராமச்சந்திரன் வெற்றி பெற்று எம்.பியாக இருந்தனர்.
 


தொகுதி பெயர் மாற்றம் ஏற்பட்ட பின் நடைபெற்ற தேர்தலில் 2009ல் காங்கிரஸ் கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார். 2014ல் அதிமுகவை சேர்ந்த செஞ்சி.ஏழுமலை என்பவர் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிவானந்தம் தோல்வியை சந்தித்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் நின்ற விஷ்ணுபிரசாத் கனிசமான வாக்குகளை பெற்றுயிருந்தார்.


இந்த தொகுதியில் 7 முறை காங்கிரஸ் தனித்து நின்றும், கூட்டணி வைத்தும் வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டு முறையும், அதிமுக இரண்டு முறையும், பாமக இரண்டு முறையும், தமாக, மதிமுக தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது.


தற்போது சுமார் 14 லட்சம் வாக்காளர்கள் இந்த தொகுதியில் உள்ளனர். இன்னும் இறுதி பட்டியல் வெளியிடப்படவில்லை. 

 
தொகுதிக்கு தேவைகள்.


1.   ஆரணி, செய்யார் பகுதிகள் நெசவு தொழில் முக்கியமானதாக உள்ளது. ஆரணி பட்டு மிகவும் பிரபலமானது. இதனால் ஆரணியில் பட்டு பூங்கா அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி நெசவாளர்களின் நீண்ட காலகோரிக்கை. இதுவரை எந்த எம்.பியும் அதற்கான முயற்சிகளை எடுத்து வெற்றி பெறவைக்கவில்லை.

2.   வந்தவாசியில் கோரைப்பாய் மற்றும் லுங்கி நெசவு அதிகம். இதற்காக ஒரு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கை அதுவும் நிறைவேறவில்லை.
 

3.   திண்டிவனம் - நகரிக்கு இரயில்பாதை அமைக்கப்படும் என 2004ல் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியது. இந்த பாதை வந்தவாசி, ஆரணி, செய்யார் தொகுதிகளை தொட்டப்படி நகரிக்கு செல்கிறது. அந்த திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரபூர்வமற்ற முறையில் நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக எம்.பி/யாக இருந்த அதிமுகவை சேர்ந்த ஏழுமலை, எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 

4.   ஆரணி, களம்பூர் பகுதியில் மட்டும் சுமார் 200 நெல் அரவை ஆலைகள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் அரிசி வகைகள் இந்தியா மட்டும்மல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக மத்திய அரசின் சார்பில் ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பான அலுவலகம் அமைக்க வேண்டும் என்பதும் கோரிக்கை. இதையும் வெற்றி பெற்றவர்கள் கண்டுக்கொள்ளவில்லை.
 

 

 


 

சார்ந்த செய்திகள்