Skip to main content

அரசியலில் நுழையும் சத்யராஜ் மகள்... கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகிறாரா? திவ்யா சத்யராஜ் அதிரடி!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

பிரபல ஊட்டச்சத்து நிபுணரான நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, தொடர்ந்து சமூகக் களத்திலும் செயல்பட்டு வருகிறார். மருத்துவத் துறையில் நடந்து வரும் முறைகேடுகள் மற்றும் நீட் தேர்வினால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறிப்பிட்டு இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம், சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால், அவர் பிரச்சனைகளையும் எதிர்கொண்டார். உலகின் மிகப்பெரிய மதிய உணவுத் திட்டமான அக்ஷய பாத்திராவின் விளம்பரத் தூதுவர். சமீபத்தில் அரசியலில் அடியெடுத்து வைப்பதாக திவ்யா அறிவித்திருக்கிறார். அவரைச் சந்தித்து நடத்திய உரையாடல்.…

முன்னணி ஊட்டச்சத்து நிபுணராக உங்கள் பயணம் எப்படி இருக்கிறது? 

தமிழ்நாட்டில் குறைந்த ஊதியத்தில் வாழ்க்கை நடத்துபவர்களின் ஆரோக்கிய மேம்பாடுக்காக, அரசு மருத்துவமனைகளில் ஆராய்ச்சிகளைத் தொடங்கினேன். மருத்துவக் கட்டமைப்பில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு பரவாயில்லை என்றாலும், அது போதாது. களப்பணிகளைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஐந்தில் இரண்டு பெண்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருக்கிறது. ஐந்து வயதுக் குட்பட்ட 39.4 சதவீதம் குழந்தைகளிடம் போதுமான வளர்ச்சி இல்லை. 12 முதல் 23 மாதங்கள் ஆன 62 சதவீதம் குழந்தை களுக்கு மட்டுமே தடுப்பூசி போடுகிறார்கள். ஆபரேஷன் தியேட்டர் போன்ற இடங்களில் தூய்மையில்லை. போதுமான தலையணை, போர்வை இருப்பதில்லை. மருத்துவர்கள் குழுவோடு இணைந்து நடத்திய ஆராய்ச்சியில்தான் இதையெல் லாம் தெரிந்துகொண்டேன். ஈழத்தமிழர் களின் நலன் அப்பாவின் கனவு. அதை நனவாக்க, பல வைட்டமின் ஒர்க்-ஷாப் களை நடத்தி வருகிறேன்.

sathya



சுகாதாரத்துறையில் எதை மாற்றினால் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று கருதுகிறீர்கள்? 

சுகாதாரத்துறையில் பல மாற்றங்கள் தேவை. காலாவதியான மருந்துகளை அப்புறப் படுத்த ஒரு சிஸ்டம் தேவை. மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்தினால் இன்னும் தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் வருவாய் ஈட்டித்தரும் இயந்திரங்களாக மக்களை நடத்துவதைத் தடுக்க கடுமையான விதிகள் வேண்டும். கொரோனா போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் தாக்கத்தின் தீவிரத்தை உணர்ந்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் முழுமையான கவனம் இருக்கவேண்டும்.


உங்களின் அரசியல் வருகைக்கு என்ன காரணம்? 

சுகாதாரத்துறை மட்டுமல்ல. நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக பல பிரச்சனைகள் இருப்பதை உணர் கிறேன். சமூக அமைப்பை மேம்படுத்த, வெளியில் இருந்து பேசிக்கொண்டே இருக்காமல், நேரடி அரசியல்தான் தீர்வு என்று முடிவு செய்திருக்கிறேன். அரசியல் வாதிகள் பேனர் கட்டவும், போஸ்டர் ஒட்டவும் காட்டும் அக்கறையை, மக்கள் சேவையில் காட்டினால் மாற்றம் பிறக்கும். என் அப்பாவுக்கும், எனக்கும் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு எப்போதுமே கிடைத்திருக்கிறது. ஒரு அமெரிக்க நிறுவனம் என் கிளினிக்கில் தகராறு செய்தபோது, மக்கள் எனக்கு ஆதரவளித்தார்கள். என் அரசியல் பயணத்திலும் அது தொடரும் என்று நம்புகிறேன்.

எந்தக் கட்சியில் சேரத் திட்டமிட்டுள்ளீர்கள்? 

சிறுவயதில் இருந்தே கம்யூனிச கருத்துகளால் ஈர்க்கப்பட்டவள் நான். அப்பாவின் அரசியல் பாடமும் நிறையவே கிடைத்திருக்கிறது. அதனால், சாதி மதத்தை ஆதரிக்கும் கட்சிகளில் சேர மாட்டேன். ரஜினி அங்கிள், கமல் அங்கிள் இருவர் மீதும் எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் உண்டு. ஆனால், அவர்கள் கட்சியில் சேரும் எண்ணமில்லை. எனது அரசியல் பாதை புதிய பாதையாக இருக்கும்.

மத அமைப்பான இஸ்கானின் அக்ஷய பாத்திரா திட்டத்தின் விளம்பரத்தூதுவர் நீங்கள். அப்படியானால் இந்துத்வத்தை ஆதரிப்பவரா நீங்கள்? 

அரசுப்பள்ளி மாணவர்களின் வைட்டமின் குறைபாடு தொடர்பாக ஆராய்ச்சியில் இருந்த போதுதான், அக்ஷய பாத்திரா சார்பில் என்னைத் தொடர்புகொண்டார்கள். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கிடைப்பதால், நான் அவர்களை ஆதரிக்கிறேன். அதேசமயம், மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக ஒப்பந்தம் போட்டதற்கு நான் விளக்கம் சொல்ல முடியாது. நான் என்னை ஒரு இந்துவாக ஒருபோதும் உணர்ந்ததில்லை. எனக்கு மதம் கிடையாது.

அரசியலில் உங்களை ஈர்த்த தலைவர்? 

தன்னலமற்ற அரசியல் தலைவர் மூத்த தோழர் நல்லகண்ணு அய்யா. தனது அளப்பரிய போராட்டங்கள், தியாகங்களுக்காக போஸ்டர், பேனர் என்று விளம்பரம் தேடாத உண்மையான தலைவர் அவர்தான். அவரைத் தவிர புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பிடிக்கும். உலகத் தலைவர்களில் பராக் ஒபாமா.

சமூக வலைத்தளங்களில் உங்கள் செயல்பாடுகள் இருப்பதில்லையே? 

Twitter தான் அரசியல் களமென்று புதிய அரசியல்வாதிகள் நினைக்கலாம். ஆனால், Twitter Politician-ஆக இருப்பதில், எனக்கு விருப்பம் கிடையாது. மக்களோடு நேரடியாக உரையாடாமல், அவர்களின் கண்ணீரையும், சந்தோஷத்தையும் புரிந்து கொள்ள முடியாது. சமூக மாற்றத்திற்கான அடிப்படை வேலைகளை களத்திற்கு சென்று செய்ய நினைக்கும் எனக்கு, ட்விட்டரோ, இன்ஸ்டாகிராமோ தேவைப் படவில்லை.

சத்யராஜின் மகள் என்பதால் உங்கள் அரசியல் முடிவு கவனம் பெற்றிருக்கிறதா? 

நான் வசதியான வீட்டில் பிறந்தவள் என்பதால், உழைக்கத் தெரியாது என்று தோன்றலாம். உண்மையில் பென்ஸ் காருக்கும், சில்வர் ஸ்பூனுக்கும் அடிமையாக வளர்க்கப்படவில்லை. சுயமாகவும், சுதந்திரமாகவும் என்னைச் செதுக்கிக் கொண்டவள் நான். கடினமாக உழைக்கக் கற்றுத்தந்தவர் அப்பாதான். அவர்தான் என் உயிர்த்தோழர். அப்பாவின் புகழையோ, பணத்தையோ சொந்த வளர்ச்சிக்காக ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. இது என் அரசியலுக்கும் பொருந்தும். சத்யராஜின் மகளாக மட்டுமின்றி, ஒரு தமிழ்மகளாக தமிழர் நலன்காக்க உழைப்பேன்.