Skip to main content

200 ஆண்டுகள் பழமையான திருஞானசம்பந்தரின் அரிய பாடல் சுவடி பிரதி; நெல்லையில் கண்டுபிடிப்பு

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

200-year-old Tirunnasambandar's rare song Suvadi; Discovery in rice

 

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் இருக்கும் அரிய ஓலைச்சுவடிகளைத் தேடித் திரட்டி, பராமரித்து, அட்டவணைப்படுத்தி, மின்படியாக்கம் செய்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதோடு அல்லாமல் அதனை நூலாக்கும் பணியிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக "திருக்கோயில்கள் / மடங்களின் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு பராமரிப்பு நூலாக்கத் திட்டப் பணி" எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா இத்திட்டப் பணியின் முதன்மையராக நியமிக்கப்பட்டுள்ளார். முனைவர் ஜெ.சசிகுமார் இத்திட்டப் பணியினைக் கண்காணித்து வருகிறார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டு வருகிறார். 

 

இவரின் கீழ் 12 பேர் கொண்ட சுவடிக் குழுவினர் இத்திட்டப் பணியில் பணியாற்றி வருகின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 46,020 திருக்கோயில்கள் உள்ளன. இத்திருக்கோயில்களில் கடந்த 11 மாதங்களில் இதுவரை 232 திருக்கோயில்களில் கள ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செய்யப்பட்ட கள ஆய்வின் மூலம் சுருணை ஏடுகள் சுமார் 1,80,612 உம், இலக்கியச் சுவடிக்கட்டுகள் 348 உம் (ஏடுகள் சுமார் 33,000) தாள் சுவடிகள் 5 உம் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் கள ஆய்வு செய்து முடிக்கும் பொழுது இன்னும் மிக அதிகமான சுவடிகள் கண்டறிய வாய்ப்பு உள்ளது.

 

200-year-old Tirunnasambandar's rare song Suvadi; Discovery in rice

 

இந்நிலையில் இச்சுவடித் திட்டப் பணிக்குழுவினர் நெல்லையப்பர் கோயிலில் கள ஆய்வு செய்துள்ளனர். அவ்வாறு கள ஆய்வு செய்த போது சில அரிய ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்துள்ளனர்.  எனவே அது குறித்து திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளரும் சுவடியியல் துறை பேராசிரியருமான சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது, “இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருக்கோயில்களில் உள்ள அரிய ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணி எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் சுவடித் திட்டக் குழுவினராகிய நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். பல மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களிலும் தொடர்ந்து கள ஆய்வின் மூலம் ஓலைச்சுவடிகளைத் தேடித் தொகுத்து அட்டவணைப்படுத்தி வருகிறோம். மேலும் சுவடிகளைப் பராமரித்துப் பாதுகாப்பதோடு நூலாக்கமும் செய்து வருகிறோம்.

 

இந்நிலையில் எனது தலைமையில் சுவடியியலாளர்கள் இரா.சண்முகம், க.சந்தியா, நா.நீலகண்டன், மா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள் தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் அரிய பழஞ்சுவடிகள் உள்ளனவா என்று தேடிப் பார்த்தோம். அவ்வாறு கோயிலில் முதலில் தேடிய பொழுது கோயில் நிர்வாகம் பாதுகாத்து வந்த 10 செப்புப்பட்டயங்களைக் கண்டறிந்தோம். பின்னர் கிரந்த எழுத்து வடிவில் அமைந்த வேணுவ நாத ஸ்தல புராணம், சைவ அக்னி காரியம், ஸ்ரீ சக்கர பிரஷ்டா விதி, அபஸ்தம்ப அமரம், ஸ்ரீ சக்ர பூஜை, சைவ சந்நியாசி விசயம், வேணுவ நாத லீலா, வைசாக புராணம், சங்காபிஷேக விதி, நித்திய பூஜாவிதி, க்ஷிரா அபிஷேக விதி, சகஸ்த நபணம் ஆகிய 12 ஓலைச்சுவடிக் கட்டுகளைக் கண்டறிந்தோம்.

 

அதன் பின்பு கோயிலின் பிற இடங்களில் எங்கேனும் ஓலைச்சுவடிகள் உள்ளனவா என்று தேடிப் பார்த்தோம். பழைய பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு அறைக்குள் 2 அரிய தாள் சுவடிகள் கிடைத்தன. அதன் பின் பழைய பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த அறையை ஒட்டி இருந்த ஒரு சிறிய அறையில் ஒரு பழைய பீரோவை திறந்து பார்த்த பொழுது அதற்குள் ஒரு பழமையான சுவடி ஒன்று இருப்பதை மா.பாலசுப்பிரமணியன் கண்டுபிடித்தார். அதனை ஆய்வு செய்த போது திருஞானசம்பந்தர் அருளிச் செய்த முதல் மூன்று திருமுறைகள் அடங்கிய தேவாரப்பாடல்கள் இருந்தன. சுவடியின் தொடக்கப் பக்கத்தில் "தோடுடைய செவியன்....." எனும் பாடல் எழுதப்பட்டுள்ளது. சுவடியில் சுவடியைப் பிரதி செய்தவர், பிரதி செய்யப்பட்ட காலம் பற்றிய குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. சுவடியின் எழுத்தமைதி மூலம் சுவடிப் பிரதி செய்யப்பட்ட காலம் சுமார் 200 ஆண்டுகள் இருக்கலாம் என்று அறிய முடிகிறது. சுவடியில் மொத்தம் 281 ஏடுகள் உள்ளன.

 

சுவடியின் இறுதியில் "திருஞானசம்பந்தரான ஆளுடைய பண்டாரத்தின் மூன்றாம் திருமுறை முற்றும். ஆக திருக்கடைக்காப்பு 383. பூமிநாத சுவாமி பாதாரவிந்தமே கெதி. நமச்சிவாய மூர்த்தி" என்ற குறிப்பு உள்ளது. சுவடியைப் பூச்சிகள் ஏதும் அரிக்கவில்லை. நல்ல நிலையில் உள்ளது. சுவடியை முழுமையாக ஆய்வு செய்தால் திருஞானசம்பந்தரின் பாடல்களை ஒப்பு நோக்கிப் பாடபேதம் நீக்கிச் செம்பதிப்பு நூல் கொண்டு வர துணை செய்யும். இக்கோயிலில் கண்டறியப்பட்ட பட்டயங்களை ஆராயும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் கோயிலில் உள்ள சுவடிகளைப் பராமரித்து அட்டவணைப்படுத்தும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.