Skip to main content

12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்!

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

கொச்சியில் உள்ள மட்டன்செர்ரியைச் சேர்ந்தவர் யசோதா டி ஷெனாய். 12 வயதே ஆகும் இந்தச் சிறுமியின் பெருமை உலகம் பூராவும் பரவிக் கிடக்கிறது. இந்த வயதில் இவர் 3 ஆயிர்தது 500 புத்தகங்களைக் கொண்ட பெரிய நூலகத்தை தனது வீட்டு மாடியில் இலவசமாக நடத்துகிறார் என்பதே அவருடைய புகழுக்கு காரணம்.
 

yashoda


8 வயதிலிருந்தே இவர் நிறைய புத்தகங்களை படிக்கத் தொடங்கினார். இவருடைய தாயும், சகோதரனும் தேவையான புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார்கள். நூலகத்தில் எடுத்துப் படிக்கும் புத்தகத்தை திருப்பிச் செலுத்த தாமதமானால் அபராதம் போடுவார்கள். அதை இவருடைய தந்தை கட்டுவார்.

இந்தச் சமயத்தில்தான் பணம் இல்லாமல் படிக்க முடியாது என்ற உண்மை அவருக்கு தெரியவந்தது. அப்படியானால், பணம் இல்லாதவர்கள் எப்படி படிப்பார்கள் என்று தனது தந்தையிடம் கேட்டார்.


இதையடுத்து தனது வீட்டு மாடியில் இலவச நூலகம் தொடங்கலாம் என்று தனது தந்தையிடம் கேட்டார். உடனே, அவர் முகநூல் பதிவொன்றை போட்டார். அதைத்தொடர்ந்து, நிறைய புத்தகங்கள் வரத் தொடங்கின. அவற்றைக் கொண்டு வீட்டு மாடியிலேயே நூலகத்தை தொடங்கினார் யசோதா.

காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த நூலகம் செயல்படும். இலவசமாக புத்தகத்தை எடுத்துப் போய் படிக்கலாம். 15 நாட்களுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும். முதியோருக்கும், சுகவீனம் அடைந்தவர்களுக்கும் விரும்புகிற புத்தகம் அவர்களுடைய வீட்டுக்கே கொண்டு போய் தரப்படும். ஆங்கிலம், மலையாளம், கொங்கணி, ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ள இந்த நூலகத்தில் யசோதாவின் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும்கூட உறுப்பினர்களாக இருக்கிறார்களாம்.

இந்த சின்ன வயதில் இப்படி ஒரு எண்ணம் வந்ததே பெருசு. அதை நடைமுறைப்படுத்த சிறுமிக்கு உறுதுணையாக அவளுடைய குடும்பமே இருப்பது மிகச் சிறப்பு.